உயிர் மூச்சு

கற்பக தரு 40: கருப்பட்டிக் கடலை மிட்டாய்

காட்சன் சாமுவேல்

இந்தியாவில் கடலை மிட்டாய்க்கு இரண்டு இடங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று மும்பைக்கு அருகில் இருக்கும் லோனாவாலா என்ற பகுதி. அங்கே அதை ‘சிக்கி’ என்று அழைப்பார்கள். வெள்ளையர்கள் விரும்பி வாழ்ந்த மலைவாசத்தலம் அது. இரண்டாவது நமது கோவில்பட்டி.

உலக அளவில் முக்கியமான உணவான நிலக்கடலையை எப்படிப் பக்குவமாகக் கருப்பட்டிப் பாகுடன் இணைப்பது என்பது தொழில் ரகசியம். நிலக்கடலையை வறுத்து இரண்டாக உடைத்து அந்தப் பருப்புகள் ஒன்றை ஒன்று பின்னிப்பிடித்துக்கொள்ளும் வகையில் பக்குவமான பாகை ஊற்றி, அவை உதிர்ந்துபோகாமல் பிணைப்புடன் இருக்கச் செய்வது ஒரு தொழில் நுட்பம்.

கருப்பட்டிக் கடலை மிட்டாய் செய்யும் வழக்கம் 1960-களிலேயே மறைந்துபோய்விட்டன. பிறகு பெரிதும் கரும்புச் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்டது, அதுவும் மலிந்து தற்பொழுது கிடைக்கும் கடலைமிட்டாய்களில் பெரும்பாலானவை வெள்ளைச் சீனியை  மையமாக கொண்டு தயாரிக்கப்படுபவைதாம்.

இப்போது கருப்பட்டியில் கடலை மிட்டாய் செய்துவருபவர்  ஸ்டாலின் பாலுச்சாமி . காந்திய வழிகளில் ஆழமான பிடிப்புகொண்ட ஸ்டாலின், கருப்பட்டிக் கடலை மிட்டாய் என்பதைக் கிராமிய பொருளியலின் வடிவாகக் கண்டு, அதை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார். 2016-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, டி. கல்லுபட்டியில் உள்ள, கிராமிய பொருளாதாரத் தந்தை ஜே.சி. குமரப்பா நினைவகத்தில் ‘மதர்வே’ என்ற இணைய தளத்தின் மூலம் (motherway.in) விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

இன்று பல்வேறு இளைஞர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார் ஸ்டாலின். கருப்பட்டி, கடலை விளையும் இடங்களில் இவற்றை உற்பத்திசெய்வது நல்ல லாபத்தைக் கொண்டுவரும் என உறுதிபடக் கூறுகிறார். கருப்பட்டியில் இருக்கும் சத்துகளும் கடலையில் இருக்கும் சத்துகளும் வளரும் குழந்தைகளுக்கு இன்றியமையாதவை. சாக்லேட் வகை இனிப்புகளைவிட கருப்பட்டிக் கடலைமிட்டாயில் நிறைய சத்துண்டு.

- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT