எங்கெங்கு காணினும் பனி படர்ந்த உறைந்த பிரதேசமான அண்டார்டிகாவில் எத்தனையோ பேர் சாகசப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அண்டார்டிகாவில் 1,500 கிலோமீட்டர் தொலைவை 54 நாட்களில் தன்னந்தனியாகக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கோலின் ஓ பிராடி (33). அதிலும் உதவிக்கான கருவிகள் ஏதுமின்றி இதை அவர் சாதித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ‘I did it’ என்ற பதிவை 2018 டிசம்பர் 27 அன்று, பதிவேற்றித் தன் சாதனையை உலகுக்கு அறிவித்தார் கோலின் ஓ பிராடி. அண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ரோனே ஐஸ் ஷெல்ஃப் என்ற பனிப்பாறையின் மீது 2018 நவம்பர் 3 அன்று ஏறி கோலின் ஓ பிராடி தன் பயணத்தைத் தொடங்கினார். அதேநாளில் பிரிட்டிஷ் ராணுவத் தளபதியான லூயி ரட் என்பவரும் இந்த வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
இருவரும் இரண்டு மாதங்கள்வரை தென் துருவம் நெடுகப் படர்ந்துகிடக்கும் பனி மலைகளைக் கடக்கச் சரிசமமாகப் போட்டிபோட்டனர். ஆனால், அண்டார்டிகாவின் விளிம்பில் இருக்கும் லெவரெட் என்ற பனிப்பாறையின் எல்லையைத் தொட்டவர் பிராடி மட்டுமே.
காலை மட்டுமே நம்பி!
இதே போன்றதொரு சாகசத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஹென்றி வார்ஸ்லி 2016-ல் ஈடுபட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார். அதற்குமுன் பாராசூட் போன்ற சில கருவிகளை இடையிடையே பயன்படுத்தியவர்கள் மட்டுமே அண்டார்டிகாவை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்கள். ஆனால், பிராடி தன்னுடைய காலை மட்டுமே நம்பினார், பயன்படுத்தினார். உறைந்துகிடக்கும் பனிப் பாலைவனத்தில் தினசரி 12 மணிநேரத்துக்கு அவர் நடந்தார். போதாததற்குத் தன்னுடைய உணவு, உடை, கூடாரத் துணி, கேமரா உள்ளிட்டவை அடங்கிய 180 கிலோ எடையுள்ள பொருட்களையும் அவர் சுமக்க வேண்டியிருந்தது. இவ்வளவு எடையைத் தூக்கிச் சுமக்க முடியாது என்பதால், அவற்றை இழுத்துச் செல்லப் பனிச்சறுக்கு வண்டியைப் (Sledge)பயன்படுத்தினார்.
இதுபோல சமவெளிப் பகுதிகளைக் கடந்துவிடலாம். ஆனால், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும் பனிக் காற்றில் மைனஸ் 60 - 70 சில நேரம் 80 டிகிரி குளிரில் செங்குத்தான பனிப் பாறைகளின் மீதும் அவர் ஏறினார். நாள்தோறும் 7,000 கலோரிக்கு உரிய உணவுப் பண்டங்களைச் சாப்பிட்டால் மட்டுமே நடப்பதற்கான ஆற்றல் கிடைக்கும். இவ்வளவு மெனக்கெட்டும் இந்தப் பயணத்தின்போது அவருடைய கால்கள் மெலிந்து சூம்பிப்போயின.
சோதனை மேல் சோதனை
ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தீ விபத்தில் சிக்கி பிராடியின் கால்களும் பாதங்களும் கால்வாசி எரிந்துபோயிருந்தன. அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இனி பிராடியால் இயல்பாக நடக்க முடியாது என்று கூறியிருந்தார். நடப்பதே கஷ்டம் என்று சொல்லப்பட்டவர் தன்னைத் தானே திரட்டிக்கொண்டு நீச்சலடித்தல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பது என ‘ட்ரையத்லெட்’- ஆக உருவெடுத்தார். அடுத்ததாக இமய மலையின் உச்சியிலும் கால் பதித்தார். இப்படிப் பல உச்சங்களைத் தொட்டவர், இப்போது ஆள் அரவமற்ற அண்டார்டிகாவின் பனிப் பாறைகளையும் தன்னந்தனியாகக் கடந்திருக்கிறார்.
துணிவும் துணைவியும் துணை!
உலகில் இதைவிடவும் தொலைதூரத்தில் உள்ள ஓர் இடத்துக்குச் செல்ல முடியாது என்ற நிலையிலும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை பிராடி செய்த ஒரு காரியம் தன் நேசத்துக்குரிய இணையோடு சேட்டிலைட் போனில் பேசியதே. பிராடியின் பயண மேலாளராக இருப்பவர் அவருடைய காதல் மனைவி ஜென்னா பிசாவ். ரத்தத்தை உறையவைக்கும் கடுமையான குளிரில் 54 நாட்கள் தனிமையில் பயணம் செல்ல, உடல் பலம் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் மனோபலம் மிகமிக அவசியம். தனிமையும் குளிரும் கைகோத்தால் மன அழுத்தம் யாரையும் சிதைத்துவிடும். தன்னுடைய எல்லைகளை விரித்தபடியே சாகசப் பயணங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பிராடியின் மனத்தைச் சமநிலையில் வைத்திருப்பதற்குத் தேவையான ஆற்றலையும் மனோபலத்தையும் அளித்தவர் அவருடைய துணைவியே.
கனவு மெய்ப்பட தியானம்!
அண்டார்டிகாவில் தன்னுடைய உடலைப் பாதுகாக்க முகமூடி, கையுறை என அத்தனை பாகங்களையும் முழுவதுமாக மூடி மறைத்திருந்தார் பிராடி. கன்னத்திலும் மூக்கின் நடுத்தண்டிலும்கூட பிளாஸ்டர்களை ஒட்டிக்கொண்டார். தடகள வீரர் என்பதால் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவரது உடல் ஒத்துழைத்தது. ஆனால், மனத்தைச் சோர்வில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்வது? ஆண்டுக்கு 10 நாட்கள் இடைவிடாது தியானப் பயிற்சியை மேற்கொள்வதை பிராடியும் ஜென்னாவும் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். அதாவது, யாரையும் பார்க்காமல், எதையுமே வாசிக்காமல், எதையும் எழுதாமல் இருக்கப் பழகுதல். இந்தப் பயிற்சியே பனிப் பாலைவனத்தில் பல நாட்களுக்கு தனியாகப் பயணிக்கத் தன்னைத் தயார்படுத்தியது என்கிறார்.
யாரேனும் அண்டார்டிகாவைக் கடக்கக் கனவு கண்டால் அதற்கு முன்னதாகத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை முதல் ஆலோசனையாக வழங்குகிறார் பிராடி. அதைவிடவும் முக்கியம், எது ஒன்றைக் குறித்தும் துணிந்து கனவு காண வேண்டும் என்கிறார், அசாத்தியமான கனவை வசப்படுத்திய இந்த சாதனையாளர்.