உயிர் மூச்சு

இறக்குமதி ஆகும் மக்காச்சோளம்

செய்திப்பிரிவு

கால்நடை, கோழித் தீவனத்துக்கான மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. வறட்சி, படைப்புழுத் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்தியாவின் மக்காச்சோள விளைச்சல் குறைந்துள்ளது. மக்காச்சோள உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய கர்நாடகத்திலும் படைப்புழு தாக்கத்தால் விளைச்சல் குறைந்துள்ளது.

அடுத்த நிலையிலுள்ள தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தாம் விளைச்சல் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளது. 2017-2018 ஆண்டின் மக்காச்சோள உற்பத்தி 2.8 கோடி டன்னாக இருந்தது. அதைவிடக் குறைவாக 2018-2019-ல்

2.7 டன் உற்பத்திதான் இலக்காக வைக்கப்பட்டது. ஆனாலும் விளைச்சல் அதைவிடக் குறைவாக உள்ளது. உலக வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய அரசு நிறுவனமான உலோக, கனிம வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.) உலக கால்நடை உணவு உற்பத்தி நிறுவனங்களிடம் மக்காச்சோளம் தர வேண்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மாதுளை விலை சரிவு

மாதுளை உற்பத்தி அதிகமானதால் விலை சரியத் தொடங்கியது. இந்திய மாதுளை உற்பத்தியில் மகாராஷ்டிரம் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவரும் மாதுளை உற்பத்தி இதற்கு முக்கியமான காரணம் என மகாராஷ்டிர மாதுளை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டைவிட 2லிருந்து 2.5 லட்சம் டன்வரை உற்பத்தி அதிகரித்திருப்பதாக இந்திய மாதுளை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வேளாண் பொருட்கள் இறக்குமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி மாதுளையில் கிலோ ஒன்றுக்கு 2 எம்.ஜி. அளவே பாஸ்பாரிக் அமிலம் இருக்க வேண்டும். ஏற்கெனவே விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடும் மாதுளை உற்பத்தியாளர்களுக்குப் பின்னடைவைத் தந்தது.

சர்க்கரை உற்பத்தி குறையலாம்

நடப்பு ஆண்டில் இந்திய சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பிருப்பதாக தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018-2019 காலகட்டத்தின் சர்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன். சென்ற 2017-2018 ஆண்டில் இது 3.2 கோடி டன் ஆக இருந்தது. வரும் ஆண்டில் இது இன்னும் சரிவடையக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.

இந்திய அளவில் கரும்பு உற்பத்தில் மிகப் பெரிய பங்களிக்கக்கூடிய கர்நாடகத்தில் வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டதுதான் இதற்கு முக்கியமான காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 2.5லிருந்து 3 கோடி டன் வரையிலான இந்தியச் சர்க்கரை ஏற்றுமதி வாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உலகச் சந்தைக்குள் பிரேசிலின் சர்க்கரை நுழைந்துள்ளது.

SCROLL FOR NEXT