ஒரு பழக்கத்திலிருந்து விடுபட 21 நாட்கள் போதும் என்று ஒரு கணக்கு சொல்கிறது. பிளாஸ்டிக் தடையில் முப்பது நாட்களை நாம் கடந்துவிட்டோம். இந்த முப்பது நாட்களில், “பை கொண்டு வந்து இருக்கீங்களா?” என்று கடைக்காரர் கேட்டவுடன், நம்மில் பலருக்கும் சுர்ரென்று கோபம் வந்திருக்கும்.
பெரிய கடைகளில் வாங்கிய பொருட்களோடு ‘பேக்கிங் காஸ்ட்’ என்று துணிப்பைக்கும், உணவகங்களில் உணவுக் கலன்களுக்குக் கூடுதல் பணம் வசூலிக்கப்படும்போதும் ‘கொள்ளை அடிக்குறாங்க’ என்று நம் மனதுக்குள் தோன்றியிருக்கும். இவை அனைத்துமே ஒரு புதிய பழக்கத்துக்குத் தகவமைத்துக்கொள்வதில் உள்ள தடைகளின் அடையாளங்கள்தாம்.
அடிமைத்தனம்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களைத் (பிளாஸ்டிக்) தமிழக அரசு ஜனவரி 1-ம் தேதி முதல் தடைசெய்திருக்கிறது. மிகுந்த சர்ச்சைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தமிழகம் முழுவதும் இந்தத் தடை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டு உள்ளது.
சுற்றுசூழல் நலன் கருதி இந்தத் தடையை மக்கள் வரவேற்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதேநேரம் தொழில் நடத்துபவர்களும் மக்களான நாமும் பழைய பழக்கங்களில் இருந்து விடுபட முடியாமல் நொந்துகொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
என்ன இருந்தாலும் மனித இனம் என்பது பழக்கங்களின் அடிமைதான்! இதில் குறிப்பாக, பொருளைப் பொதிந்து கொடுக்கும் வழக்கத்தைக் கடைக்காரரின் முழுப் பொறுப்பில் விட்டுக்கொடுத்த நாளிலிருந்தே, ஞெகிழிப் பை தூக்கும் பழக்கத்துக்கு நாம் முழு அடிமையாகிவிட்டோம்.
மாற்றுவோம்
கவலைப்பட வேண்டாம்! தினமும் உடற்பயிற்சி செய்யச் செல்வது, புத்தகங்களைப் படிக்க நினைப்பது, அதிகாலை எழுந்திரிக்க முயல்வது போன்ற அனைத்து நல்ல பழக்கங்களும் நமக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் நல்லது என்பது நம்மில் பலருக்கும் உறுதியாகத் தெரியும். ஆனாலும், அவற்றில் பலவற்றைப் பழகிக்கொள்ள முடியாமல் தவிப்பவர்களே அதிகம். நல்லதொரு உலகத்தைப் படைக்க நமது எல்லைகளைச் சின்னச்சின்ன விஷயங்களிலாவது மறுவரையறை செய்தாக வேண்டும். இனி வரும் காலத்தில் துணிப்பை தூக்க ஆரம்பிப்பதில் இருந்து, இந்த மாற்றத்தை நாம் வெற்றிகரமாகத் தொடங்கலாம்.
- மாற்றுவோம்
கட்டுரையாளர், துணிப்பை ஆர்வலர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org