உயிர் மூச்சு

ஒரு கிராமம் செய்த பாரம்பரிய அறுவடை

ஜெய்குமார்

புனேவுக்கு அருகிலுள்ள குந்தல்வாடி கிராமத்து மக்கள் 50பேர் கூடி ஒரு மாபெரும் சாதனையைச் செய்திருக்கிறார்கள். 50 விதமான பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து அறுவடை செய்திருக்கிறார்கள். அவர்கள் 8 டன் நெல்லை அறுவடை செய்திருக்கிறார்கள். இதற்குப் பின்னால் அந்தக் கிராமத்துப் பள்ளி நிர்வகத்தினர் இருந்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி பவுண்டஷனின் நடுநிலைப் பள்ளியான சக்யாத்ரி பள்ளி மேற்கொண்ட கிராம மேம்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் பாரம்பரிய விதை நெல் கொண்டு அறுவடை செய்திருக்கிறார்கள். பாரம்பரிய விதை நெல்லை விதைப்பது என முடிவெடுத்துள்ளனர். ஆனால் பாரம்பரிய விதை நெல் கிராமத்தினர் யாரிடமும் இல்லை. பிறகு பள்ளி நிர்வாகம் ஒரு அரசுசாராத் தொண்டு நிறுவனத்திடம் பெற்றுள்ளது

. ஆனாலும் கிராமத்தினர் இந்தப் பாரம்பரிய விதையில் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் விளைச்சல் இரட்டிப்பாக இருந்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகமே விதை நெல் விற்பனையைத் தொடங்கியிருக்கிறது.

சத்தீஸ்கரி எருமைக்கு அங்கீகாரம்

தேசிய விலங்கின மரபுவள பெட்டகம், சத்தீஸ்கரி எருமைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வட, மத்தியப் பகுதியில் காணப்படும் இந்த எருமை இனம், அதிக அளவில் பாலுக்காக வளர்க்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4 கிலோ முதல் 6 கிலோவரை பால் தரக்கூடியது. சத்தீஸ்கர் எருமைக் காளைகள் விவசாயப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் 15 புதிய மரபு இனங்களுக்கு சென்றாண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பர்கூர் எருமையும் அவற்றுள் ஒன்று.

கேரளப் பசுக் கடை

அண்டை மாநிலங்களிலிருந்துதான் கேரளத்துக்கு மாடுகள் அதிகம் விற்கப்படுகின்றன. இதில் தரகர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பசுவின் தரத்தைப் பரிசோதித்து வாங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மலபார் கிராம மேம்பாட்டு மையம், கேரள பால் விற்பனை கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி வெளி மாநிலங்களிலிருந்து இந்த அமைப்பு பசுக்களை வாங்கிப் பரிசோதித்து, அதை http://www.pasukkada.com/ என்ற இணையத்தில் ஒளிப்படத்துடன் பதிவிடும். தேவைப்படுவோர் நேரடியாக வாங்கிப் பயன் பெறலாம்.

SCROLL FOR NEXT