திருமணத்துக்காக மாப்பிள்ளை, பெண் தேடுவதைப் போல ஒரு அரிய வகை ஆண் தவளைக்கு ஜோடி தேடும் படலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ரோமியோ என்ற அந்த ஆண் தவளைக்காக நடந்த தேடுதல் வேட்டையில் ஜூலியட் என்ற பெண் தவளை கிடைத்துவிட்டது. ரோமியோவோடு அந்த இனமே அழிந்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில், ஜூலியட் மூலம் அந்தத் தவளை இனம் பெருக வழிகிடைத்திருப்பதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு செயூன்கஸ் (Sehuencas) என்ற தவளையை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த நன்னீர்த் தவளை இனத்தை ஆராய்ச்சிசெய்ததில், இது அபூர்வமான வகை என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்கள் ஆராய்ந்ததே, அந்த இனத்தைச் சேர்ந்த கடைசி ஆண் தவளை என்பதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
ஆகவே, அரிய வகைத் தவளைப் பட்டியலில் இது சேர்க்கப்பட்டது. ‘ரோமியோ’ எனப் பெயர் சூட்டப்பட்ட இந்தத் தவளையை பொலிவியாவில் கொச்சபாம்பா நகரில் உள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தில் பராமரித்துவந்தனர்.
செயூன்கஸ் தவளையின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகாலம் என்பதால், ரோமியோவோடு இந்தத் தவளை இனம் அழிந்துவிடும் ஆபத்து் இருந்துவந்தது. இந்த ஆபத்தை நீக்கி ரோமியோவின் சந்ததிகளை உருவாக்க விலங்கியல் ஆய்வாளர்கள் தீவிரமாக முயன்றுவந்தார்கள். இதே இனத்தைச் சேர்ந்த பெண் தவளையைத் தேடும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கினார்கள். இதற்காக பொலிவியாவில் காடு, மலை என வெவ்வேறு இடங்களுக்கு ஆய்வாளர் குழுக்கள் சென்றன.
ரோமியோவுக்குப் பெண் தவளை தேடும் முயற்சியை மக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தொடர முடியும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாக ‘ரோமியோ தவளை’ பற்றிய விவரங்கள், இணையத்தில் வெளியிடப்பட்டன. அதன்பிறகு ரோமியோ தவளை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. அதற்கு ஏற்ற ஜூலியட்டைத் தேடுவதற்காக நிதியுதவியும் குவிந்தது. கொச்சபாம்பா நகரக் கண்காட்சியக நீர், நில வாழ்வன, ஊர்வன குறித்த ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் தெரெசா கமாச்சோ படானி தலைமையில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக ரோமியோவுக்குப் பெண் தவளையைத் தேடிவந்தாலும், கடந்த ஆண்டுதான் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. பொலிவியாவின் மழைக் காட்டில் பயணம் மேற்கொண்ட ஆய்வாளர் குழு, ஓர் ஓடையில் ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டைக் கண்டுபிடித்தனர். அந்த ஓடையில் 5 தவளைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மூன்று ஆண் தவளைகள், இரண்டு பெண் தவளைகள்.
ஏற்கெனவே இதே பகுதியில் விலங்கியல் ஆய்வாளர்கள் தேடியபோது கிடைக்காத செயூன்கஸ் தவளைகள், இப்போது கிடைத்ததால் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது ஆய்வாளர் குழு. ரோமியோவோடு செயூன்கஸ் தவளை இனம் அற்றுப் போய்விடும் என்ற கவலையில் இருந்த ஆய்வாளர்களுக்கு, ஜூலியட் கிடைத்ததால் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
தற்போது கிடைத்த இரண்டு பெண் தவளைகளில் ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஜூலியட்டைத் தனியாக ஆய்வாளர்கள் பராமரித்துவருகிறார்கள். தற்போது நோய்த் தொற்றுக்கான சிகிச்சை ஜூலியட்டுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
ரோமியோவும் ஜூலியட்டும் ஜோடி சேரும் நாளுக்காக ஒட்டுமொத்த விலங்கியல் ஆய்வாளர்கள் குழுவும் காத்திருக்கிறது!