உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 29: நின்றாலும் அழகு, பறந்தாலும் அழகு

ராதிகா ராமசாமி

இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுவது சாம்பல் நாரை. நாரை வகையிலேயே உயரமானது என்று இதைச் சொல்லலாம். உயரம் காரணமாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் இது இருப்பது தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரியும்.

நாரைகளின் கழுத்து மிகவும் நீளமானது. இவை கழுத்தை உள்வாங்கி ‘எஸ்’ வடிவத்தில் வளைத்தபடி பறந்து செல்கின்றன. இதனால், பறக்கும்போதும் சாம்பல் நாரைகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இரை கிடைக்கும்வரை, ஆடாமல் அசையாமல் சிலைபோல நின்று, மீன் கிடைத்தவுடன் நொடியில் கொத்திச் சாப்பிடும் அழகே இதன் சிறப்பு. இதன் கழுத்து மிக நீளமாக இருப்பதால், இரையைப் பிடித்தவுடன் உயிருடன் சாப்பிட முடியாது. இரையைத் தட்டிக் கொன்ற பிறகே, இவை வாயில் இட்டு விழுங்குகின்றன. தலையைச் சற்றே நீட்டிச் சாப்பிடும் பழக்கமும் இவற்றுக்கு உண்டு.

சாம்பல் நாரைகளின் நினைவாற்றல் அபரிமிதமானது. எங்குக் கூடு கட்டி குஞ்சு பொறிக்கிறதோ, அதே இடத்துக்கு அடுத்த ஆண்டு மீண்டும் வரும் அளவுக்கு நினைவாற்றல் அவற்றுக்கு உண்டு. தண்ணீரும் மரமும் உணவும் அதிகம் இருக்கும் வேடந்தாங்கல் போன்ற இடங்கள்தாம் இவை கூடமைப்பதற்கு உகந்த இடங்கள்.

ஒரு மரத்தில் பத்துப் பதினைந்து கூடுகள்வரை இருக்கும். ஆண் நாரை கூடு கட்டிக் காத்திருக்கும். கூட்டை நாடி வரும் பெண் நாரை, தனக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும். தனக்குப் பிடிக்காத நாரையை ஆண் நாரை எச்சரிக்கை ஒலி ஏற்படுத்துவதன் மூலம் விரட்டிவிடும். பிடித்த பெண் நாரையைத் தலையைத் தாழ்த்தி, இறக்கையை விரித்துப் படபடவென அடித்து வரவேற்று கூட்டில் சேர்த்துக்கொள்ளும்.

இவை வலசை செல்லும்போதும் கூட்டமாகவே செல்லும். சாம்பல் நாரைகளுக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தல் பருந்துகள். பருந்து தாக்கும்போது, சாம்பல் நாரைகள் ஒன்றாகக் கூடி சத்தமெழுப்பி விரட்டுகின்றன. முன்பு இவை அதிக எண்ணிக்கையில் இருந்தன. நீர்நிலைகள் குறைந்துவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கோடியக்கரை, வேடந்தாங்கல், பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆகிய பகுதிகளுக்கு இந்த நாரைகள் வருகின்றன.

சூரிய ஒளியில் குளிக்கும் இந்தச் சாம்பல் நாரையையும் அலகுகளால் உரசிக்கொள்ளும் நாரைகளையும் பாரத்பூருக்குச் சென்றிருந்தபோது படமெடுத்தேன். பறக்கும்போது மட்டுமல்ல; நிற்கும்போதும் இந்தச் சாம்பல் நாரை அழகுதான்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT