உயிர் மூச்சு

லாபம் தரும் நேரடி விற்பனை

டி.செல்வகுமார்

நாட்டுக் கோழிக்கும் அதன் முட்டைக்கும் மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாட்டுக் கோழி வளர்ப்புக்குத் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

விவசாயிகள், தனி நபர்கள் மத்திய, மாநில அரசு மானியத்துடன் தொழில் தொடங்கி லாபம் ஈட்டுவதுடன், கிராமப் பொருளாதாரத்தையும் மேம்படச் செய்வதே மாநில கோழிவளர்ப்புத் திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டம் தொடங்கிய 2012-2013-ம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 35 யூனிட்டுகள்தான் (250 அல்லது 500 கோழிக்குஞ்சுகள் கொண்டதே ஒரு யூனிட்) இருந்தன. இப்போது இது, 240 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளன. மொத்தம் 17 மாவட்டங்களிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழி, அதன் முட்டை உற்பத்தியை மட்டும் பெருக்குவதுடன்

நின்றுவிடாமல், மக்களுக்குச் சுகாதாரமான முறையில் நாட்டுக் கோழி இறைச்சி கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் சிறியளவில் கோழிப்பண்ணை நடத்திய ராமசாமியை, நவீனக் கறிக்கடை உரிமையாளராக்கியிருக்கிறது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

இது தொடர்பாக நவீனக் கறிக்கடை நடத்தி வரும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த கடை உரிமையாளர் ராமசாமி, “கடந்த 2014-ம் ஆண்டு 250 நாட்டுக் கோழிகளுடன் பண்ணை வைத்திருந்தேன். தினமும் ஒன்றிரண்டு கோழிகள் விற்று வந்தபோது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்கக் கல்வித்துறைத் தலைவர் பெரு.மதியழகன் என்னைச் சந்தித்து வழங்கிய பல்வேறு ஆலோசனைகளின் பேரில், பண்ணையை விரிவுபடுத்தினேன்.

அதுவரை உயிருடன் நாட்டுக் கோழி ஒன்றை ரூ.200-க்கு விற்றேன். கோழியை உறித்து விற்றதால் ரூ.250 கிடைத்தது. அதைத் தொடர்ந்து விற்பனையும் அதிகரித்ததால் கோழிகளின் எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினேன். அப்போதுதான் நபார்டு திட்டத்தின் கீழ் நவீனக் கறிக்கடை வைப்பதற்கு 100 சதவீத மானியத்தில் ரூ.1.50 லட்சம் கிடைத்தது” என்றார்

கறி வெட்டுவதற்காக மரக்கட்டைதான் பெரும்பாலும் பொருத்தப்படும். ஆனால் இங்கே ராமசாமி கடையில் மரக் கட்டைக்குப் பதிலாக டெப்ளான் பிளேட்டை (Teflan Plate) கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினர் பொருத்திக் கொடுத்துள்ளனர். நாட்டுக் கோழி இறகு நீக்கும் இயந்திரம், சுத்தம் செய்ய கொதிநீர் இயந்திரம், வெட்டும் கத்தி, பூச்சி, கொசுக்களை ஈர்த்துக் கொல்லும் கருவி, 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய குளிர்சாதனப் பெட்டி, எனக்கு பிரத்யேக உடை, கையுறை, பாக்கெட்டுகளில் அடைப்பதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி கடையை நவீனமயமாக்கியுள்ளனர்.

கடையை நவீனமயமாக்கும் வரை ஒருவாரத்தில் அதிகபட்சமாக 800 கிலோ நாட்டுக் கோழி இறைச்சியை ராமசாமி விற்றுவந்துள்ளார். நவீனமயமாக்கிய பிறகு 2 ஆயிரம் கிலோ வரை விற்கிறார். சுத்தம், சுகாதாரத்துடன் வெட்டி விற்பதால் இப்போது ஒரு கிலோ நாட்டுக் கோழி இறைச்சி விலை ரூ.280 என நிர்ணயித்துள்ளார்.

சுகாதாரமான முறையில் வெட்டி விற்பதால் மக்களிடமும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. பேராசிரியர் பெரு.மதியழகன் அறிவுரையின் பேரில், அடுத்த கட்டமாக பால் போல நாட்டுக் கோழி இறைச்சியை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வீடுகளுக்கு நேரடி விநியோகம் செய்யவுள்ளார் ராமசாமி.

இந்த நவீன கறிக்கடைக்கு உணவுப் பாதுகாப்பு, தரப்படுத்துதல் ஆணையம் (Food Safety and Standards Authority of India) சான்று வழங்கியிருக்கிறது. விளைபொருட்களுக்கு விலையில்லை என்று ஏங்கும் விவசாயிகளையே விற்பனையாளராக மாற்றும் இத்திட்டம், நாடு முழுவதும் பல்கிப் பெருகினால் கிராமப் பொருளாதாரம் பெருமளவு மேம்படும்.

SCROLL FOR NEXT