சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நிறைந்த இன்னும் ஓர் ஆண்டு முடிந்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகள் அதிகரித்துள்ள ஓர் புத்தாண்டு பிறந்திருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழகம் சந்தித்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை சுருக்கமாக வரையறுக்க இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம்.
முதலாவது இயற்கைச் சீற்ற பாதிப்புகளுக்கு வறட்டு அடியாக ‘பருவநிலை மாற்றம்’ என்ற முலாம் பூசுவது; இரண்டாவது பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் போலி அறிவியல் காரணத்தைச் சொல்லி ‘2.0’ திரைப்படம் தமிழகத்தை ஏமாற்றியது. சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலில் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான உதாரணங்களாக இந்த அபத்த வாதங்களைக் குறிப்பிடலாம்.
மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் கண்மூடித்தனமாகச் சுரண்டுவதற்கான வேலை நாடெங்கும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சுதேசி அரசியலை ஊறுகாய்போல முன்பு வைத்திருந்த மத்தியில் ஆளும் கட்சி, கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தச் சுரண்டலுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறது. ஸ்டெர்லைட் தொடங்கி பசுமைவழிச் சாலைவரை (அழிப்பில் பசுமை எங்கிருக்கிறதோ, தெரியவில்லை) தமிழகத்தில் தொடரும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு இந்த ஒத்துழைப்பும் முக்கியக் காரணம்.
பிரச்சினை எங்கே?
இப்படி சுற்றுச்சூழலை அழிக்கும் பல திட்டங்களுக்கு அரசே நேரடிக் காரணமாக இருக்கும்போதும்கூட, அரசை பொறுப்புடைமை ஆக்கும் வகையிலோ திட்டத்துக்கு முட்டுக்கொடுக்கும் முயற்சிகளை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலோ, சுற்றுச்சூழல் இயக்கங்களின் எதிர்ப்புகள் பெரும்பாலான நேரம் வலுவாக இருப்பதில்லை.
அரசின் தவறான கொள்கை முடிவுகளையோ அரசின் தவறான பார்வையையோ விமர்சிப்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் பதிலாக, பொத்தாம் பொதுவாக அரசு நிர்வாகம் சரியில்லை என்று கூறும் போக்கை பரவலாகப் பார்க்க முடிகிறது.
இந்தக் கோணத்தை இன்னும் சற்று விரித்துப் பார்க்கலாம். இயற்கைப் பேரழிவுகள் என்று இன்றைக்கு முன்னிறுத்தப்படும், அடையாளப்படுத்தப்படும் பெரும்பாலான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல, இயற்கைச் சீற்றங்கள் எல்லா நேரமும் பேரழிவு ஆபத்தைக் கொண்டவையாக இருப்பதில்லை.
மனித அலட்சியம், குறிப்பாக அரசு அலட்சியமும், பிரச்சினையைக் கையாள்வதற்கேற்ற கொள்கையோ புரிதலோ இல்லாத நிர்வாகமும்தான் இயற்கைச் சீற்றங்கள் பேரழிவுகளாக மாறுவதற்கான முதன்மைக் காரணம். ஆனால் கஜா புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் மீண்டும் கவனப்படுத்தும் அறிவியல் காரணமாக 'பருவநிலை மாற்றம்' (Climate Change) உள்ளது.
கொல்லப்பட்ட வாத்து
நாம் எவ்வளவு தூரம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிவியலுக்குப் புறம்பாகப் புரிந்துகொள்கிறோம் என்பதற்கான சிறந்த உதாரணம் இது. பருவநிலை மாற்றம் இன்னமும் மக்களிடம் பரவலாகச் சென்று சேராத, முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை, அறிவியல் துறையும்கூட. அது ஏற்படுத்த உள்ள விளைவுகள் குறித்து திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், அதன் அறிவியல் அடிப்படை உறுதியாக இருக்கிறது. அது இயற்கையின் அடிப்படை விதியால் கட்டமைக்கப்பட்டது.
உரிய முறையில் பராமரிக்கப்படும்போது இயற்கை ஓர் அமுதசுரபி என்பதே அந்த விதி. மனிதர்கள் கையில் கிடைத்த பிறகு அந்தத் தங்க முட்டையிடும் வாத்து கழுத்து அறுபட்டு எத்தனையோ நாளாகிவிட்டது. அந்த வாத்தின் வயிற்றில் ஒட்டிக்கிடக்கும் தங்க முட்டை ஓடுகளையாவது எடுத்துவிட முடியாதா என்பதே இன்றைய உலகின் யத்தனமாக இருக்கிறது. வாத்து இறந்ததைப் பற்றியோ, இனி முட்டை கிடைக்காது என்பது பற்றியோ கவலைகள் இல்லாமலாகிவிட்டன.
அறிவியல் புரிதலின்மை
பருவநிலை மாற்றம் என்பது நிஜம். ஆனால், அதன் விளைவுகள் திட்டவட்டமாக முன்கணிக்கக் கூடியதாகவோ, ஒரு இயற்கைச் சீற்றம் வந்து சென்ற உடனே உணரக்கூடிய அளவுக்கோ வளரவில்லை. அதை முன்கணிக்கவும், திட்டவட்டமாக உணரவுமே உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றித் தமிழ்ச் சூழலில் விரிவான சொல்லாடலோ அறிவோ வளர்த்தெடுக்கப்படவில்லை.
ஆனால், தவறான நேரத்தில் அணை திறந்துவிடப்பட்டாலும், இயற்கைச் சீற்றத்தை அரசு நிர்வாகம் கையாளத் திணறினாலும் பருவநிலை மாற்றம்தான் அனைத்துக்கும் காரணம் என்று தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் தோன்றி ‘சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்’ பேசுவதை மீண்டும் மீண்டும் காண முடிகிறது.
இந்தப் போக்கு அறிவியலை சிறுமைப்படுத்துவதிலும், அறிவியல் குறித்த அவநம்பிக்கையை அதிகரிப்பதிலும் போய் முடிவதற்கான சாத்தியத்தைக் கொண்டது. இதுபோன்ற அறிவியல்பூர்வமற்ற வாதங்களுக்கும் ‘2.0’ படத்தில் பட்சிராஜன் பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
மொட்டைத்தலையும் முழங்காலுயும்
பறவைகளைப் பாதுகாப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைக்கும் பட்சிராஜன், செல்போன்களே அதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருவது அபத்தமானது. இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாததும்கூட. செல்போன் கோபுரங்களால் பிரச்சினை இருப்பது உண்மைதான்.
ஆனால், பறவைகளுக்கு அவை ஏற்படுத்தும் விளைவுகளை திட்டவட்டமாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது உண்மைதான். ஆனால், அவை குறைவதற்கான காரணங்களில் செல்போன் கோபுரங்கள் இல்லை. மாறாக, உலகெங்கும் செல்போன் கோபுரங்களிலேயே பல பறவைகள் கூடமைத்து முட்டையிட்டுச் செழிக்கின்றன.
வீட்டுக்கு உள்ளேயோ வெளியேயோ சிட்டுக்குருவிகள் வருவதற்கான அனைத்து வழிகளையும் மனிதர்களான நாம் அடைத்துவிட்டோம். இப்போது சிட்டுக்குருவிகள் அழிந்துவருகின்றன என்று எடுக்கப்படும் சினிமாவை வாய்பிளந்து பார்க்கிறோம். ஆனால், உண்மைக் காரணம் என்ன? குருவிகள் கூடு கட்டுவதற்கு ஓட்டுவீடுகளோ வீட்டில் காற்றுப்போக்குக்கு வைக்கும் காற்றுத்திறப்போ (வெண்டிலேட்டர்) கிடையாது, பாத்திரங்களைக் கழுவி மிச்ச உணவை விட்டுவைக்கும் புழக்கடை கிடையாது, குருவிக் குஞ்சுகளுக்கு புழுவைத் தரும் தோட்டங்களும் கிடையாது. இத்தனையும் இல்லாமல் எப்படி ஒரு குருவி வாழும் என்ற கேள்வியும் நம்மிடையே கிடையாது.
இதுபோன்ற போலியான ஒரு காரணத்தைச் சொல்லும் திரைப்படம் நன்றாகச் சம்பாதிக்க முடியும். இயற்கைக்கோ பறவைகளுக்கோ இதுபோன்ற அறிவியல்பூர்வமற்ற படங்கள் என்ன நன்மையைச் செய்துவிட முடியும்? இதுபோன்ற திசைதிருப்பும் திரைப்படங்கள், வாதங்களால் பறவைகளைக் காக்கும் நேர்மையான முயற்சிகளும் அவற்றுக்கான நிதியுதவிகளும் பின்னடைவைச் சந்திக்கின்றன.
ஏன் அறிவியல் தேவை?
கடந்த ஆண்டில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. ஆனால், அவற்றைப் புரிந்துகொள்வதில் நாம் எந்த அளவுக்கு முன்னேறாமல் இருக்கிறோம் என்பதற்கு எல்லா புயல்-வெள்ளத்துக்கும் பருவநிலை மாற்றமே காரணம் என்ற ஆதாரமற்ற பேச்சுகளும், ‘2.0’ திரைப்படத்தைத் தொடர்ந்து பறவைகள் அழிவதற்கான உண்மைக் காரணங்களை திசைதிருப்பும் மூடநம்பிக்கைகள் பரவியதுமே முக்கிய சாட்சி.
சமநிலை இல்லாத, சமத்துவ மற்ற அறிவியல் எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணி ஆவது சாத்தியமில்லை. அதேநேரம், அறிவியல் அடிப்படையில் இல்லாமல் பொதுவெளிகளில் முன்வைக்கப்படும் அரைகுறை வாதங்கள், அறிவியல் மூலம் ஏற்கெனவே நாம் பெற்றுள்ள முன்னேற்றங்களை பின்னுக்கு இழுக்கும் பார்வையை வலுப்படுத்துகின்றன.
அத்துடன் இயற்கை அறிவியல், சுற்றுச்சூழல் சார்ந்த ஆராய்ச்சிகளும் ஆர்வமும் அதிகரிப்பதற்கு எதிரான மனப்பான்மையை பரவலாக்குகின்றன. இதன்மூலம் தவறான மூடநம்பிக்கைகளை பரவலாக்குவதுடன், அரசு நிர்வாகக் கோளாறுகளை மூடி மறைக்கவும் தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்வதிலேயுமே போய் முடிகின்றன.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in