உயிர் மூச்சு

கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி

காட்சன் சாமுவேல்

மீனவர்கள் வாழ்வில் பனை சார் பொருட்களின் பங்களிப்பை ஒமல் குறித்த பதிவில் சொல்லியிருக்கிறேன். கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் செழித்தோங்கி வளர்வதாலும், கடற்கரைப் பகுதிகளில் தொன்றுதொட்டு வாழும் சமூகம் மீனவ சமூகம் என்பதாலும் பனைசார் பொருட்கள் அவர்கள் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, மீனவர்களின் தொழில் சார்ந்த புழங்கு பொருட்களில் பனைசார் பொருட்களின் பங்கு காணப்படுவதற்குப் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, மடப்பெட்டி எனப்படும் மடக்குப்பெட்டி முக்கியமானது.

தொழிலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்கள் கைகளிலும் முற்காலங்களில் மடப்பெட்டி இருக்கும். இரண்டு விதமான காரியங்களுக்காக இவற்றைப் பயன்படுத்துவார்கள். ஒன்று தங்கள் சிறிய தொழிற்கருவிகளான தூண்டில் முள், தூண்டில் கயிறு போன்றவற்றை வைப்பதற்கு இதைப் பயன்படுத்துவார்கள்.

வெற்றிலை போடுவதற்குண்டான அனைத்துப் பொருட்களையும் இதனுள்ளே வைப்பார்கள். தூண்டிலைப் போட்ட பின் மீன் வருவதற்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் மீனவர்களுக்கு வெற்றிலை போடுவது நேரத்தைக் கடத்தும் ஒரு வழக்கமாக இருந்திருக்கலாம்.

இதற்காக ஓலையில் செய்யப்பட்ட சிறிய பெட்டியை அவர்கள் தெரிந்துகொண்டதற்கும் காரணம் உண்டு. கடலின் உட்பகுதியில் செல்லும்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவ்வித நேரத்தில் வெம்மை தாங்காமல் வெற்றிலை வாடிவிட வாய்ப்புகள் உண்டு. பனை ஓலை வெப்பத்தைக் கடத்தாது. ஆகவே, வெற்றிலைகள் இருநாட்கள் வரைக்கும் பசுமையோடிருக்கும்.

கரைப் பகுதியில் மக்கள் செய்கின்ற வெற்றிலைப் பொட்டியை ஒத்த வடிவம்தான் இதுவும். ஆனால், நுண்ணிய சில வேறுபாடுகள் உண்டு. இவர்கள் ஓலையைக் கிழிக்கும்போதே, ஈர்க்கிலுடன் கொஞ்சம் ஓலைகளையும் விட்டுவிட்டே கிழிக்கிறார்கள். அது ஒமல் செய்வதற்குப் பயன்படும் மரபின் நீட்சியாக இருக்கலாம்.

கரைப் பகுதியில் இருப்பவர்களைப் போன்றே, ஓலையைச் சிறிதாக வகிர்ந்துகொள்ளுகிறார்கள். அதன் பிற்பாடு மூன்று பெட்டிகளைச் செய்து அவற்றை இணைப்பதுதான் முழுமையான மடப்பெட்டி. கரைப் பகுதியில் காணப்படும் வெற்றிலைப் பெட்டிக்கு இரண்டே பகுதிகள்தான் இருக்கும்.

மடப்பெட்டியைச் செய்கையில் அதன் அடிப்பாகம் கப்பலைப் போன்று ஒடுங்கியும் வாய்ப்பகுதி வட்ட வடிவமாக அகன்றும் காணப்படும். ஆனால், நீளவாக்கில் பார்த்தால், அடிப்பாகம் சற்றே நீண்டும், வாய்ப்பகுதி சற்றே குறுகியும் காணப்படும். இந்த மெல்லிய வித்தியாசம் மீனவ சமுதாயத்தினரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும், வாய்குறுகி இருப்பது, உள்ளே வைக்கப்படும் பெட்டியானது, எவ்வகையிலும் வெளியே விழுந்துவிடாதபடி, வெளியே இருக்கும் பெட்டி தொய்வடையாமல் இருப்பதற்கும் உதவுகிறது. மூன்றாவதாக இவை அனைத்தையும்விடப் பெரிய பெட்டியைச் செய்து, கீழ்புறம் இருக்கும் பெட்டியின் வாயின் மேல் கவிழ்த்துவைத்துவிட்டால் மடப்பெட்டித் தயார்.

குமரி மாவட்டத்தில் குறும்பனை என்ற பகுதியின் அருகில் இருக்கும் இனிகோநகர் என்ற பகுதியைச் சார்ந்த சேசைய்யன், மடப்பெட்டிகளைச் செய்வதில் வல்லவர். பல வருடங்களாகக் கடல்தொழில் செய்யும் மீனவர்களின் துணைவனாக இருந்த மடப்பட்டி அருகிவருவது, மீனவர்கள் வாழ்வில் இருந்து பனை மரம் விலகிவருவதற்கான சான்று எனலாம். ஆனாலும், இன்றும் மடப்பெட்டி பிளாஸ்டிக் நாரால் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT