உயிர் மூச்சு

பிளாஸ்டிக் கொல்லும் கடல் உயிரினங்கள்

அன்பு

உயிரினங்கள் தோன்றிய கடல் வெளி, மனிதர்களின் பொறுப்பின்மையால் தற்போது பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாகக் காட்சியளிக்கிறது. மனிதர்கள் செல்ல முடியாத ஆழ்கடலில், அவர்கள் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகள் குடியேறி உள்ளன. நாம் வீசியெறியும் பிளாஸ்டிக் குப்பைகள் நமக்கே அச்சுறுத்தலாகி வரும் காலத்தில் அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்  உலக அளவில் மெத்தனமாக நடைபெறுகின்றன.

இதன் விளைவாகத்தான் இந்தோனேசியக் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் ஆறு கிலோ பிளாஸ்டிக் கழிவு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் கபோடா தீவில் உள்ள வாகடோபி தேசியப் பூங்கா அருகில் இந்த 9.5 மீட்டர் நீளமான திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்தத் திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து  115  பிளாஸ்டிக் தண்ணீர் கப்புகள், நான்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், 25 பிளாஸ்டிக் பைகள், 3.2 கிலோ அளவில் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவால்தான் இந்தத் திமிங்கலம் உயிரிழந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதேபோல் கடந்த ஜூன் மாதம் தெற்கு தாய்லாந்து கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய பைலட் திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து மட்டும் எண்பது பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும்  சுமார் 1 கோடி டன் பிளாஸ்டிக் கழிவு கடலில் கலக்கிறது. பறவைகள், கால்நடைகள், திமிங்கலம் என ஒவ்வோர் உயிரினமாக பிளாஸ்டிக் கழிவால் உயிரிழந்து வருகின்றன. இது மனிதர்களைத் தாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!

SCROLL FOR NEXT