தமிழில் ‘காட்டுச் சிலம்பன்’ என்று அழைக்கப்படும் இந்தப் பறவை, ஆங்கிலத்தில் ‘ஜங்கிள் பாப்ளர்’ என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அதற்கு இன்னொரு பெயரும் உண்டு… ‘செவன் சிஸ்டர்ஸ்!’
காரணம், இந்தப் பறவைகள் எப்போதும் கூட்டமாகத் திரியும். அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்சம் 7 பறவைகளாவது இருக்கும். வங்க மொழியில் இவற்றை ‘சாத் பாய்’ (ஏழு சகோதரர்கள்) என்று அழைக்கிறார்கள்.
காடுகள் நகர்ப்புறங் களில்கூடத் தென்படும் இவை, எப்போதும் ஒலி எழுப்பிக்கொண்டவாறே இருக்கும். இரையை உண்ணும்போதுகூட, ஒலி எழுப்பிக்கொண்டே உண்ணும். சின்னச் சின்னப் பூச்சிகள், தானியங்கள் ஆகியவை இவற்றின் முக்கிய உணவு.
இந்தியா முழுக்கப் பரவலாகக் காணப்படுகிறது இந்தப் பறவை. மனித நடமாட்டத்துக்குப் பழகிவிட்ட பறவை இது. எனவே, நீங்கள் அதன் அருகில் சென்றாலும், பயப்படாமல், தன் இரையைக் கொத்தித் தின்பதிலேயே கவனமாக இருக்கும். நிமிடத்துக்கு ஒரு முறை அங்குமிங்கும் பறந்துகொண்டிருப்பது, தன் அலகால் இறகை நீவிக்கொள்வது, இதர பறவைகளுடன் செல்லச் சண்டைகள் போடுவது என எப்போதும் ‘துறுதுறு’ப்பாக இருக்கும் பறவை இது.
கொண்டைக் குயில்கள், அக்கக்கா குருவி போன்ற பறவைகள் தங்களின் முட்டைகளை, காட்டுச் சிலம்பன் பறவைகளின் கூடுகளில் விட்டுச் சென்றுவிடும். குஞ்சு பொறித்த பின்பும், தன்னுடைய குஞ்சுகள் அல்ல என்ற அடையாளம் தெரியாமல், அவற்றுக்கும் சேர்த்து பெற்றோர் பறவைகள் இரை தேடி எடுத்து வரும். ஒவ்வொரு முறையும், இரை தேடி இவை சோர்ந்து போகும் என்பதால், இதர பறவைகள் இந்தக் குஞ்சுகளுக்கு இரை கொண்டுவந்து கொடுக்கும்.
பின்னே… சகோதரிப் பாசம்னா சும்மாவா..?
கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com