ஆங்கிலத்தில் ‘ஸ்பாட் பில்ட் டக்’ என்று அழைக்கப்படும் இது, தமிழில் ‘புள்ளி மூக்கு வாத்து’ எனப்படுகிறது. இதன் மஞ்சள் நிற அலகில், சிவப்புப் புள்ளிகள் இருக்கும். இதனால் ‘சிவப்பு மூக்கன்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.
இது நீருக்கு அடியில் சென்று உணவு தேடாது. நீரின் மேற்புறத்திலேயே இருக்கும் பாசி, சின்ன சின்னத் தாவரங்கள் போன்றவையே இவற்றின் உணவு. வடக்கில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், தெற்கில் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலும் இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்.
இது இந்தியா முழுக்க நீர்நிலைகளில், எல்லாப் பருவ காலத்திலும் காணப்படும் பறவை. இது வலசை செல்லும் பறவை கிடையாது. எப்போதும் ஆண், பெண் பறவைகள் ஜோடியாக இணைந்துதான் இரை தேடும். காலை, மாலை வேளையில்தான் இவை இரைதேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடி, தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஓக்லா பறவைகள் சரணாலயத்தில்தான் முதன்முதலாக இந்தப் பறவைகளைப் பார்த்தேன். சுமார் 40, 50 எண்ணிக்கையில் இந்தப் பறவைகள் கூட்டமாக நீரில் இரை தேடிக் கொண்டிருந்தன. சில பறவைகளை அவற்றின் குஞ்சுகளோடு சேர்த்து ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் படங்கள்தாம் இவை.
கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com