தென்னிந்தியாவில் தமிழகத்தில் பாளையக்காரர்களும் ஜமீன்களும் சேவல்போர்களில் ஆர்வம் காட்டி வந்தனர். இது ஆங்கிலேயே அதிகாரிகளிடம் பெரிய ஆவலைத் தூண்டியது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் சண்டைச் சேவல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினர்.
தொடக்கத்தில் அடிப்படையான குறிப்புகளைத் திரட்டும்போது ஏற்பட்ட தவறுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அடுத்தகட்ட தரவுகளை எடுக்கத் தொடங்கினர். அவர்களுள் ஹெர்பர்ட் அட்கின்சன், கார்லோஸ் ஃபின்ஸ்டர்புஷ் ஆகியோர் முக்கியமானவர்கள். இலங்கையைச் சேர்ந்த பால் தெரனியகலா, சிரான் தெரனியகலா ஆகியோரும் முன்பு குறிப்பிட்டவர் களுக்கு இணையாகச் சண்டைச் சேவல்களைப் பற்றிய தரவுகளைச் சொல்லலாம்.
1900-ம் ஆண்டு பால் தெரனியகலா எழுதிய ‘The Asil Game Fowls of India’ என்ற கட்டுரை சண்டைச் சேவல்கள் குறித்த விரிவான அறிமுகமாக இருந்தது. சண்டைச் சேவல்கள் ஒரு கவுரவத்தின் குறியீடு என்றும் இங்கு அவை ஒரு மரபான பறவை என்றும் அவர் அந்த நூலில் அறிமுகம் செய்தார்.
மேலும், சேவல்களுடைய நிறங்களை அடிப்படையாக வைத்து அதை எப்படிப் பிரிப்பது என்பதை விரிவாகப் பதிவுசெய்தார். மேலும், அடர் சிவப்பு அல்லது கறுப்பு நிறமுடைய சண்டைச் சேவல்கள் சிறப்பாகச் சண்டை இடுபவை என்றும் வெள்ளை, இளமஞ்சள் நிறமுடைய சேவல்களுக்கு அந்த அளவு கிராக்கி இல்லை என்றும் பழைய குறிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். அப்படி வந்தவர்கள் தமிழகத்தின் சண்டைச் சேவல்களுக்குக் கொடுத்த பெயர்தான் மெட்ராஸ் அசில் (Madras Asil). இந்தப் பெயரை முதலில் பயன்படுத்தியவர் லூயீ ரைட்.
கேப்டன் எஸ்டெல்லே என்ற ஆங்கிலேயர் சேவல் சண்டையில் ஆர்வம் உடையவராக இருந்தார். தம் சேவல்களைப் பராமரிக்க இந்தியர்களைப் பணியமர்த்தி உள்ளார். 1879-ம் ஆண்டு ஒரு குறுகிய காலம் சேவல் போர்களுக்கு ஆங்கிலேயே அரசு தடைசெய்துவிட முயன்றபோதுகூடத் தன் சேவல்களையெல்லாம் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றார்.
இந்த ஆர்வம் பலரிடம் பரவ நல்ல சண்டைச் சேவல்களுக்காக ஆங்கிலேயர் தேடியபோது பலருடைய கவனம் தமிழகத்தின் வீரச்சேவல்கள் மீது விழுந்தது. அந்தக் காலக்கட்டத்தில்தான் மெட்ராஸ் அசில் என்ற பெயரும் நிலைத்தது.
அப்படி முதல்முறையாக 19-ம் நூற்றாண்டில் லூயீ ரைட் குறிப்புகளின்படி மெட்ராஸ் அசில் என அழைக்கப்பட்ட தமிழகச் சேவல் இங்கிலாந்துக்குப் பயணமானது.
கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com