கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பத் துறை, மாம்பழ அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகள் குறித்து களப்பணியை மேற்கொண்டது. மாம்பழங்கள் அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தக் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் 400 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் மாம்பழ உற்பத்தியில் ஏற்படும் இழப்புகள் குறித்துத் தகவல் சேகரிக்கப்பட்டது.
அறுவடையின்போது 30 கிலோ, நோய், பூச்சி தாக்குதலால் 11 கிலோ, சிறிய, தரமற்ற, கனியாத காய்களால் 46 கிலோ என ஒரு டன்னுக்கு மொத்தம் 87 கிலோ வீணாகிறது. சந்தைப்படுத்தும்போது முதல்நிலை மொத்த விற்பனையாளரிடம் செல்லும்போது 73 கிலோ, இரண்டாம் நிலை மொத்த விற்பனையாளரிடம் 100 கிலோ, சில்லறை வியாபாரிகளிடம் 109 கிலோ என ஒரு டன்னுக்கு 346 கிலோ சேதமடைகிறது.
60-70 சதவீத மாம்பழங்கள் தொழிற்சாலைகளுக்குப் பழக்கூழ் தயாரிப்பதற்கு நேரடியாகவும் இடைத்தரகர்கள் மூலமாகவும் அனுப்பப்படுகின்றன. அறுவடையின்போது மாமரக் கிளைகளைக் குலுக்கி விடுதல், குச்சி கொண்டு அடித்தல், சந்தைக்குக் கொண்டு செல்லுதல் போன்றவற்றால் சேதம் ஏற்படுகின்றன.
முதல் நிலை விற்பனையாளர்களால் முறையற்ற வகையில் தரம் பிரித்ததாலும் விற்பனைக்காக ஏற்றி, இறக்குவதாலும் வெளிமாநிலங்களுக்கு நாள் கணக்கில் கொண்டு செல்வதால் பழுத்து எடை குறைவதாலும் இழப்பு ஏற்படுகிறது. இரண்டாம் நிலை விற்பனையாளர்களால் நாள் கணக்கில் இருப்பு வைத்தல், நோய், பூச்சி தாக்குதல், சுகாதாரமற்ற இடங்களில் கொட்டி வைத்தல் போன்ற செயற்பாபட்டாலும் பழங்கள் சேதமடைகின்றன.
சில்லறை வியாபாரிகள் பல மடங்கு விலைக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தால், பழங்கள் வீணாவதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. உலக அளவில் பழ, காய்கறி உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் 17 கோடி மக்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுடன் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10-ல் 7 பேருக்கு வைட்டமின் குறைபாடு உள்ளது.
சரிவிகித சத்தான உணவு சென்றடைவதில்லை. இதற்கு அறுவடைக்குப்பின் பழங்கள், காய்கறிகள் சேதமடைதல், இடைத்தரகர்களின் தலையீடு, விலையேற்றம் போன்றவை முக்கியக் காரணங்களாகின்றன. இதைத் தவிர்க்க பல்வேறு தொழில்நுட்பங்களை நானோ அறிவியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர்கள் ம.புஷ்பலதா, சி.சேகர், கீ.சி. சுப்பிரமணியன் ஆகியோர் பரிந்துரைக்கின்றனர்.
மாம்பழ உற்பத்தியில் இழப்புகளைத் தவிர்க்க இப்பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட சீர்மிகு அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்களாகிய பிளாஸ்டிக் கிரேட்ஸ் பயன்படுத்துதல், அறுவடைக்கு வலை கூடை கொண்ட கொக்கிகளைப் பயன்படுத்துதல், கீழே தார்பாய் விரித்து அறுவடை செய்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
இதனால் மாங்காய்கள் சேதமடைவது குறைக்கப்படுவதுடன், நோய் தாக்குதலும் தடுக்கப்படுகிறது. மேலும் ஹெக்சனால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மாங்காய்கள் விரைவாகப் பழுப்பதைத் தள்ளிப் போட முடியும். இதன்மூலம் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை 10 முதல் 20 சதவீதம் குறைக்கலாம்.