பனை மரத்திலுள்ள பயனுள்ள உணவுப் பொருட்களில் நுங்கு முதன்மையானது. கோடைக்காலத்தில் பரவலாகத் தமிழகத்தில் கிடைக்கும் நுங்கு பல்வேறு கோடை நோய்களுக்கு அருமருந்து. வெப்பத்தைத் தணித்து உடலைக் குளிர்ச்சி பெறச் செய்வதற்கு நுங்கைவிடச் சிறந்த எளிய உணவு கிடையாது. நுங்கு முதிராத பனம்பழம் என்பதால், இவற்றை அளவோடு பயன்படுத்துவது பனை மரப் பரவலாக்கத்துக்கு உதவியாக இருக்கும்.
நுங்கு சார்ந்து பல்வேறு உணவுப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு சமூகத்தினர் தங்களுக்கான உணவை நுங்கிலிருந்து பெற்று கோடையின் வெம்மையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்கின்றனர். பாரம்பரிய இயற்கை உணவுப் பொருட்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில் நுங்குக்கும் அந்தக் கிராக்கி வந்துள்ளது. அதன்படி சென்னை பல்லாவரம் 200 அடி சாலையில் ஷெல் பெட்ரோல் அருகில் உள்ள நுங்கு இளநீர்க் கடை முக்கியமான ஒன்று.
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த தேவகோட்டை தாலுகா, வெள்ளைவயல் கிராமத்தைச் சார்ந்தவர் கனகராஜ் (52). சென்னையில் 23 வருடங்களுக்கும் மேலாக இளநீர்க் கடை வைத்து நடத்திவருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நுங்கு விற்க முயற்சிகள் எடுத்து, சொந்த ஊரிலிருந்து எடுத்து வந்து விற்றுவந்திருக்கிறார். அப்போது நுங்கையும் இளநீரையும் இணைத்து இவர்கள் கண்டுபிடித்ததுதான் நுங்கு இளநீர்ப் பானம்.
நுங்கையும் இளநீரையும் ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் இட்டு சிறிது சர்க்கரையும் ஐஸ் கட்டியும் சேர்த்து அடித்து விற்பனை செய்கிறார். நினைத்தாலே இனிக்கும் இந்தக் கலவை இரட்டிப்பான பயன் தர வல்லது. புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது. வெம்மையிலிருந்து விடுதலை தரக்கூடியது.
வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றையும் இணைத்துப் பருகக் கொடுத்திருக்கிறார். ஆனால் மக்களிடம் வரவேற்பு இல்லை. மக்கள் ஆதரவு அளித்தால் கருப்பட்டியும் இணைந்த ஒரு அருமையான பானத்தை இவர்களால் உருவாக்கித்தர இயலும்.
இவர்கள் பனை உணவுப் பொருட்களைக் கொண்டு புது கண்டுபிடிப்பை மட்டும் செய்யவில்லை, இந்த உணவுத் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் முயற்சிகளையும் எடுத்துவருகிறார். கோடைக்காலத்தில் மட்டும் கிடைக்கும் நுங்குகளை எல்லாக் காலத்திலும் கிடைக்கும்படியாக அவர் செய்திருக்கும் வலைப்பின்னலே இந்த வியாபாரத்தின் வெற்றியெனக் கருதுகிறேன்.
இவ்வெற்றிக்குப் பனை சார்ந்த பருவம் குறித்த அவதானிப்பும் தொடர் உழைப்பும் கண்காணிப்பும் இன்றியமையாதது. குறிப்பாக, அருகில் நுங்கு கிடைக்காத பருவங்களில் கன்னியாகுமரிவரை சென்று நுங்கு எடுத்து வருகிறார் கனகராஜ். இவ்வித நேரங்களில் லாபம் குறைவாகக் கிடைத்தாலும் தனது வாடிக்கையாளர்களுக்காக இன்முகத்தோடு இதைச் செய்கிறார். தற்போது வாடிக்கையாளர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கப் பனை ஓலைப் பட்டையிலும் இந்தப் பானத்தை ஊற்றிக் கொடுத்து மகிழ்விக்கிறார்.
- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com