மீனவர்களுடைய வாழ்வில் பனை முக்கியப் பங்களிப்பை அளிக்கக்கூடியது. அவர்களின் தொழில்சார் பயன்பாட்டுப் பொருட்கள் வாயிலாக இதை அறிய முடியும். பனை மரம் நெய்தல் நிலத்தில் பெருகி வளரக்கூடியது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு அது ஒரு வரப் பிரசாதம். பனையுடனான பிடிப்பு மீனவர்களுக்கு அதிகம். மீனவப் பெண்கள் பெரும்பாலானோர் பனையோலையில் செய்த கடவத்தில்தான் மீன்களை விற்க எடுத்துச் செல்வார்கள். இன்று ஐஸ் மீன் வரவால் அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது.
அவ்வகையில் குமரி மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கரமடி என்று சொல்லப்படும் நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் செல்லும் காலத்தில் பரவலாக இருந்தது ஒமல் என்ற அழகிய பயன்பாட்டுப் பொருள். கரைப் பகுதியில் இருப்பவர்களால் வெகு எளிதில் புரிந்துகொள்ள இயலாத தொன்மையான வடிவமைப்பு இது. ஓலைகளைச் சுற்றி ஈர்க்கில்கள் ஓடிக்கொண்டிருக்கும். மிகப் பெரிய ஒமல்களைச் செய்யும்போது மீனவர்கள் அதனுள்ளே அமர்ந்துகொண்டு ஓலைகளைப் பின்னுவார்களாம். ஓமல் செய்து முடிவடைந்த பின்பு அதை மடித்து எடுத்துச் செல்லுவார்கள்.
இந்த எளிய வடிவமைப்பை 10 எண்ணிக்கை வரை எடுத்துச் செல்வார்கள். பிடித்து வந்த மீன்களை இட்டு வீட்டுக்கோ விற்பனை நிலையத்துக்கோ எடுத்துச் செல்ல இந்த ஒமல் ஏற்றது.
பார்க்க மிகவும் எளிமையாக இருக்கும் இதைச் சுமக்க நான்கு முதல் ஆறுபேர் வரை தேவைப்படுவார்களாம். ஒமலின் கீழே இரண்டு கயிற்றை இழுத்து, அந்தக் கயிற்றின் நடுவிலே ஒரு கம்பை நுழைத்து முன்னும் பின்னும் இருவரோ மூவரோ சேர்ந்து தூக்குவார்களாம். இதில் காணப்படும் இடைவெளிகள், நீர் ஒழுகிவிட ஏற்றவை. அவ்வகையில் ஆழ்ந்த புரிதலுடனேயே இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்பு, மீனவர்கள் வாழ்வில் ஒமலின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் பொருட்களின் வரவு அதிகரித்ததால் பாரம்பரிய பொருட்களின் பயன்பாடு அருகிவிட்டது. இன்றும் குமரி மாவட்டத்தைச் சார்ந்த முட்டம் எனும் பகுதியிலுள்ள சார்லஸ், ஒமல் செய்யத் தெரிந்தவராக இருக்கிறார். பனையின் பகுதிப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டுவந்த ஒமல், இன்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்படும் நிலை வந்துவிட்டது.
குறும்பனையைச் சார்ந்த பாக்கியம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒமல் செய்ய தெரியும் என்றார். குருத்தோலைகளைக் கொடுத்து இந்த வடிவத்தை மீட்டெடுத்தேன். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து முயன்றதன் பயனாக இவ்வடிவம் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவர் என்னிடம், இவ்விதம் செய்யப்படும் பொருளுக்கு நீண்ட ஓலைகளும் முற்றிய தடித்த ஈர்க்கில்களும் இருந்தாலே இது சாத்தியப்படும் என்றார். பாக்கியம் போன்ற பெண்களே நம் பாரம்பரிய அறிவைப் பேணிவருகிறார்கள்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com