உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 18: கடமான்கள் எடுத்த ‘குரூப் போட்டோ!’

ராதிகா ராமசாமி

ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் சரணாலயத்தில்தான் நான் முதன்முதலாக கடமான்களைப் பார்த்தேன். பிறகு, கார்பெட் தேசியப் பூங்காவில் பார்த்திருக்கிறேன். அங்கே சில ஆண்டுகளுக்கு முன்பு, குளிர்காலம் ஒன்றில், சுமார் ஏழு, எட்டு கடமான்கள் கூட்டமாக ஓரிடத்தில் நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருந்தன. அந்தக் குளிருக்கு, தங்கள் உடலைச் சூடுபடுத்திக்கொள்ள, அவை ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு நின்றுகொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் ஆண் மான், பெண் மான், குட்டிகள் என அனைத்து வயது, பாலின மான்களும் இருந்தன.

இப்படி ஒரு ‘ஃபேமிலி குரூப் போட்டோ’ கிடைப்பது அரிதிலும் அரிது. அப்போது எடுத்த படம்தான் இது. சில நொடிகள்தான், பிறகு அவை கலைந்து சென்றுவிட்டன. ஆங்கிலத்தில் ‘சாம்பர்’ என்றும் தமிழில் ‘கடமான்’ என்றும் அழைக்கப்படும் இந்த மான், தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா, தென் சீனா போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகத்தில், முதுமலைப் பகுதியில் இதைக் காண முடியும். எனினும், உலக அளவில், இந்த மான் இனத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டுதான் வருகிறது. எனவே, இது ‘ஆபத்தான நிலையில்’ உள்ள உயிரினமாகக் கருதப்படுகிறது.

அடர்ந்த காடுகள், புல்வெளிகள் போன்ற பகுதிகள்தான் இவற்றின் வாழிடம். மான் வகைகளில் அளவில் பெரியது இந்த மான். இவற்றின் சிறப்பியல்பே, கொம்புகள்தான். மூன்று படிநிலைகளாக இருக்கும் கொம்புகள் சுமார் 100 சென்டி மீட்டருக்கும் மேலாக வளரும். ஆண்டுக்கு ஒருமுறை, அந்தக் கொம்புகள் விழுந்து, மீண்டும் புதிதாக முளைக்கத் தொடங்கும்.

புள்ளி மான்களில் ஆண், பெண் மான்கள் அனைத்தும் ஒரே கூட்டமாக இரை தேடும். ஆனால், கடமான்களில் ஆண் மான்கள் தனியாகவும், பெண் மான்கள் தனியாகவும் இரை தேடும். மிகுந்த செவித்திறனும் மோப்பத் திறனும் கொண்டவை இவை. அதனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் புலி இருந்தால்கூட, அறிந்துகொண்டு அங்கிருந்து தப்பித்துவிட முடியும். குதித்துக் குதித்துத்தான் ஓடும்.

புலிகளைப் போன்றே, தங்களுக்கான பகுதியை வரையறுத்துக்கொள்ளும் பண்பு, ஆண் கடமான்களுக்கு உண்டு. தவிர, அவை சுமார் 6 பெண் கடமான்களுடன் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையவை. என்றாலும், ஒரு பெண் மான், ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும். சிங்கம், புலி போன்ற இரைக்கொல்லி உயிரினங்களுக்கு முக்கிய உணவாக கடமான்கள்தான் இருக்கின்றன.

மனிதர்களைக் கண்டால் ஓடிவிடுகிற கூச்ச சுபாவம் கொண்ட இவற்றை,  கொம்புகளுக்காகவும், அவற்றின் உடல் பாகங்கள் மருத்துவக் குணங்கள் கொண்டதாக மூடநம்பிக்கையுடனும் கள்ள வேட்டையாடப்பட்டு வருகின்றன. வாழிடம் அழிந்து வருவதும், இந்த மான்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம்.

கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT