உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 19: குட்டிகளுக்காக ‘குட்டி’ வேட்டை!

ராதிகா ராமசாமி

‘பெரிய பூனைகள்’ என்று சொல்லப்படும் சிங்கம், புலி ஆகியவற்றுக்கு அடுத்து நம் நாட்டில் தென்படும் முக்கியமான ஓர் உயிரினம், சிறுத்தைகள். ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் இது அதிக அளவில் தென்படுகிறது. இந்தியாவில் கபினி, முதுமலை போன்ற பகுதிகளில் இவை அதிக எண்ணிக்கையில் உலா வருகின்றன.

மரங்கள் அடர்ந்த காடுகளில்தான் சிறுத்தை அதிகமாக இருக்கும். புலியைப் போன்றே, சிறுத்தையும் தனிமை விரும்பி. ஒரு மணி நேரத்துக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தை, ஒரு குதி குதித்தால், சுமார் 10 அடி உயரம்வரை பாயும்.

சிங்கம், புலியைப் போன்று வேட்டையாடிய இரையை, நிலத்தில் கிடத்திச் சாப்பிடாமல், மரத்தின் மேலே இழுத்துச் சென்று சாப்பிடும். ‘எங்கே ஒருவேளை தன்னைவிட பலசாலியான சிங்கமோ, புலியோ வந்து தன் இரையைப் பிடுங்கிச் செல்லுமோ’ எனும் பயம்தான் அதற்குக் காரணம்.

இந்தியாவில் தென்படக் கூடிய சிறுத்தைகளுக்கு, எங்கு மான்கள் அதிக அளவில் உள்ளனவோ, அங்குதான்  அதிக அளவில் இரையும் கிடைக்கும். ஆனால், ஆப்பிரிக்கச் சிறுத்தைகளுக்கு மான் மட்டும்தான் உணவு என்றில்லை. சுமார் 75 வகையான உயிரினங்கள், அங்குள்ள சிறுத்தைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

வளர்ந்த சிறுத்தைகளுக்குப் பெரிய அளவிலான இரை, சிறுத்தைக் குட்டிகளுக்கு முயல், பன்றிக்குட்டி போன்ற சிறிய அளவிலான இரை. அப்படி ஒரு முறை, முயலை வேட்டையாடி, தன் குட்டிகளுக்காகத் தாய் சிறுத்தை தன் வாயில் கவ்விச் சென்ற நேரத்தில், இந்தப் படத்தை எடுத்தேன்.

காடுகள் அழிந்து வருவதாலும், அவற்றின் தோலுக்காகக் கள்ள வேட்டைக்கு உள்ளாவதாலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT