இது ‘நதி மீட்பர்’களின் காலம். ஒருவர் கங்கையைச் சுத்தப்படுத்த புறப்பட்டால், இன்னொருவர் நாட்டிலுள்ள நதிக்கரைகளில் மரங்கள் நடக் கிளம்புகிறார். எல்லா நதிகளுக்கும் பெண் பெயர்கள் சூட்டப்பட்டதாலோ என்னவோ, அவை தொடர்ந்து வல்லுறவு செய்யப்பட்டு வருகின்றன.
அந்தப் பெயர்கள் அனைத்தும் இந்துக் கடவுள்களின் பெயர்களாக இருப்பதால், மத்தியில் 2014-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அவற்றை ‘மீட்க’ கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. கங்கை, யமுனை ஆகியவை மீட்கப்பட வேண்டும் என்பதிலாவது, கொஞ்சம் சமூகம் சார்ந்த அக்கறை இருக்கிறது. ஆனால் புராணங்களில் இருப்பதாகச் சொல்லப்பட்ட, நிஜத்தில் இல்லாத ஒரு நதியை மீட்போம் எனும் ‘ஆன்மிக நதி மீட்பு’ நடவடிக்கைகளை என்னவென்று சொல்ல?
இல்லாத நதிக்கு ஐம்பது கோடி
இந்து வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரஸ்வதி எனும் நதி காலப்போக்கில் மறைந்துவிட்டதாகவும், அதை மீண்டும் மீட்க வேண்டும் என்றும் 2015-ம் ஆண்டிலிருந்து குரல் கொடுத்து வருகிறார்கள், இந்துத்துவவாதிகள். அதுகூட பிரச்சினை இல்லை. ஆனால், அந்தக் குரலுக்கு மத்திய, மாநில ஆட்சியாளர்களும் செவி சாய்ப்பதை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது.
‘சரஸ்வதி ஹரியாணாவில் தென்படுகிறது’ என்று யாரோ கொளுத்திப் போட, அந்தச் சூடு ஆறுவதற்குள் 2015-ல், அந்த மாநில அரசு சரஸ்வதி நதியை மீட்க 50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. பிறகு, அந்த நதியின் தோற்றுவாயில், 100 க்யூசெக்ஸ் நிலத்தடி நீரை எடுத்து, அதற்கு ‘உயிர்’ கொடுத்தது, அரசு. அத்தோடு சரி. அதன் பிறகாவது, சரஸ்வதி ஓடி வருவாள் என்று எதிர்பார்த்தார்கள். இன்றுவரை அவள் வரவேயில்லை. எங்கே போனாள் சரஸ்வதி?
இந்தியாவிலிருந்து முதல் படம்
இந்துத்துவ தேசியவாதம் நம் நாட்டில் எப்படி வேரூன்றி வருகிறது என்பதற்கு இந்த நதி மீட்பு முயற்சிகள், சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார்கள் சமூகவியலாளர்கள். அந்த முயற்சிக்குப் பின்னுள்ள அரசியலை, போலி அறிவியலை, மூட நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது ‘சர்ச்சிங் ஃபார் சரஸ்வதி’ எனும் ஆவணப்படம்.
நாளிதழ்களில் ‘ஓப்பன் எடிட்டோரியல்’, சுருக்கமாக ‘ஓப் எட்’ (Op Ed), எனும் பிரிவு ஒன்று உண்டு. நாளிதழ்களில் பணியாற்றுபவர்கள் அல்லாமல், வெளியிலிருந்து குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் கட்டுரைகள் அதில் இடம்பெறும். அதுபோல அமெரிக்காவின் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் ‘ஓப் டாக்ஸ்’ அதாவது, ‘ஓப்பன் டாக்குமெண்ட்ரீஸ்’ எனும் பிரிவு உள்ளது.
பிரபலமான, பிரபலம் இல்லாத, சுயாதீன ஆவணப்பட இயக்குநர்கள் பலருக்கும் தங்களின் படைப்புகளை வெளியிடுவதற்கான சிறந்த தளமாக இது விளங்குகிறது. 2011-ல் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவில் இப்போது வரை சுமார் 270-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் காணக் கிடைக்கின்றன.
அந்தப் பிரிவில், இந்தியாவிலிருந்து இடம்பெற்றிருக்கும் முதல் ஆவணப்படம் இதுதான். இந்த ஜூலை மாதம் 10-ம் தேதி அந்த இதழின் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் ‘சண்டேன்ஸ் இன்ஸ்டிடியூட் – மெக்ஆர்தர் ஃபவுண்டேஷன் ஷார்ட் பிலிம் ஃபெல்லோஷிப்’ எனும் சுயாதீன கலைஞர்களுக்கு நிதி உதவி செய்யும் அமைப்பின் ஆதரவுடன், இந்தப் படத்தை ஷிர்லி ஆபிரகாம், அமித் மாதேஷியா ஆகியோர் இயக்கியுள்ளனர். இவர்களது இயக்கத்தில் 2016-ல் வெளிவந்த ‘தி சினிமா டிராவலர்ஸ்’ எனும் முதல் படம், அந்த ஆண்டில் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே இந்தியப் படம் எனும் பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை
ஹரியாணாவில் முகல்வாலி எனும் கிராமத்தில் சரஸ்வதி நதியை ‘கண்டுபிடிக்கிறார்கள்’ இந்துத்துவவாதிகள். அந்த இடத்தில் ஒரு சின்ன கிணறைத் தோண்டுகிறார்கள். இந்துத்துவவாதிகளின் பேச்சை நம்பும் சஹிராம் காஷ்யப் எனும் விவசாயி, சரஸ்வதி மீண்டும் தோன்றும் வரை கிணற்றருகே அமர்ந்து பூஜை செய்யப்போவதாகச் சபதம் ஏற்கிறார். தவளைகள் செத்து மிதக்கும் அந்த நீரை, கிராமத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்தாக வழங்குகிறார். அதைக் குடித்தால் தொழுநோய், இதய நோய் எனப் பல நோய்களைத் தீர்க்கும் என்று பிரசாரம் செய்கிறார்.
அவருக்கு ஆதரவாக, கோபால் தாஸ் எனும் பூசாரி, ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாகக் கொண்டு வருவேன் என்றார் டிரம்ப். அப்படி, இந்தியாவை மீண்டும் சிறந்த நாடாக நிலைநிறுத்த நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு, சரஸ்வதி நதி மீட்பு’ என்று பெருமையாகச் சொல்கிறார். இதுபோல படம் முழுவதும் அரசு அதிகாரிகளும் பல ‘பெருமை’களை அள்ளிவிடுகிறார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது, ‘இவர்களெல்லாம் கேமரா முன்பு பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறார்களா?’ என்று சந்தேகம் தோன்றுகிறது. சிரிப்பும் வருகிறது.
சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில், அறிவியல் ரீதியாகச் சில கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அதற்கெல்லாம் அரசும், சரஸ்வதி நதி மீட்பு ஆதரவாளர்களும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது சரஸ்வதி நதியைப் போன்றே மர்மமாக இருக்கிறது.