பறவைகளை கவனித்துப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது கருந்தலை மைனாவினால்தான். திண்டுக்கல்லில் எங்கள் அரிசி ஆலையின் நெல் காயப்போடும் களத்திற்கு அருகில் மறைவாக நின்று, பனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் மென்மையான சூரிய ஒளியில் அவை பேசுவதைக் கவனிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.
சிதறிய நெல் மணிகளிலிருந்து முளைத்த பச்சை பசேலென்று வளர்ந்த நெல் நாற்றுகளின் மெத்தென்ற புல்வெளியில் நான்கு மைனாக்கள் வட்டமாக நின்று அவற்றின் மொழியில் பேசிக்கொண்டிருக்கும். மனிதர்களைப் போல் ஒவ்வொரு மைனாவாக தங்களின் முறை வந்ததும் பேசும்.
சில நேரம் ஒரு மைனா மற்றுமொரு மைனாவினை மனிதர்களைப் போல் தலையசைத்து அழைக்கும். சில நேரம் வழக்கமாக அழைக்கும் தொனியிலிருந்து மாறுபட்ட தொனியில் அவை பேசும். நாங்கள் சென்னையில் இப்போது வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் அடர்ந்து வளர்ந்த கொன்றை மரங்களும் வேப்ப மரங்களும் உள்ளன. அங்கே ஓங்கி வளர்ந்த ஒரு கொன்றை மரத்தின் உச்சியிலிருந்து உரத்த தொனியில் தன்னுடைய இணையை அழைக்கும் மைனாவின் அழைப்பு அடிக்கடி கேட்கிறது. காலை நேரத்தில் உரக்கப் பேசியபடி அங்கும் இங்கும் பறக்கும் மைனாக்களைப் பார்ப்பது என்றைக்கும் ஆனந்தம். இது கருந்தலை மைனா அல்ல.
பொதுவாக மைனாக்கள் ஒலி எழுப்புவது கூக்குரல்கள், சத்தங்கள், கீச்சுகள், கிளிக்குகள், விசில்கள், உறுமல்கள் என்று விதவிதமாக இருக்கும். அவை பேசும்பொழுது தங்களின் இறகுகளை அசைத்து, தலையை ஆட்டும். பூனை அல்லது பருந்து ஆகியவை அவை இருக்கும் மரங்களுக்கு அருகில் வந்தால், எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
மரக்கிளையிலிருந்து பறக்கும் மைனா ஒரு விதமான கீச்சென்ற ஒலி எழுப்பி பறந்து செல்லும். ஒவ்வோர் ஆண்டும் திருநெல்வேலியில் உள்ள எங்களுடைய தாத்தா வீட்டிற்கு செல்லும்போது சிட்டுக் குருவிகளை மிகவும் அருகில் பார்த்திருக்கிறேன். ஜோடியாக இரண்டு சிட்டுக்குருவிகள் வீட்டின் கூடத்தில் கூடு கட்டியிருந்தன. காலையிலும் மாலையிலும் அவை ஜோடியாகப் பறந்துவந்து கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு உணவூட்டும்.
மதிய நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மிக பெரிய மாமரத்தில் மைனாக்களின் இனிமையான பேச்சுக் குரல்கள் கேட்கும். மைனாக்களைப் பற்றி அறிந்துகொள்ள அவற்றை கவனிக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டின் முன்னால் உள்ள கொய்யா மரத்தில் அமர்ந்து அவை மதிய வேளைகளில் பேசிக்கொண்டு இருக்கும்.
எங்கள் வீட்டின் பப்பாளி மரத்தில் உள்ள பழத்தினை நாங்கள் ருசி பார்ப்பதற்கு முன்பு அவை ருசி பார்த்துவிடும். இந்த மைனாவின் உடல் பொதுவாக அடர் மஞ்சள் நிறத்துடன், தலைப்பகுதி கறுப்பாக இருக்கும். இதன் கழுத்தும் வால் பகுதியும் வெள்ளை நிறத்துடன் இருக்கும். கண்களின் அருகில் உள்ள வெளிறிய நீல நிறத்தினாலும் அதன் தோற்றம் கவர்ச்சியாக இருக்கும்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் மைனா பெரும்பாலும் அன்பின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. காதலனின் உணர்வுகளை சுமந்து செல்லும் ஒரு தூதுவராக கருதப்பட்டது. பாரதிதாசன் தனது கவிதைகளில் மைனா பறவையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். 'காட்டுக்குள் மைனா' என்கிற கவிதை மைனாவின் சுதந்திரத்தையும் இயற்கையின் அழகையும் சிறப்பிக்கும் ஒரு அழகான கவிதை.
காட்டுக்குள் மைனா ஓரு
கலைமகள் பாடம் பண்ணும்,
வீட்டுக்குள் மைனா துயரமற்ற
வீணலர் தாளம் கொட்டும்.
'பிரபஞ்சக் காதல்' என்ற கவிதையில் மைனாவை உவமையாக எடுத்துக்கொண்டு காதலின் உணர்வுகளை பற்றி எடுத்துக்கூறுகிறார்.
இந்த தலைமுறைக் கவிஞர் ஒருவரின் மைனா பற்றிய கவிதை.
'அசையாமல் இரு' என்று
அறிவுறுத்திவிட்டு,
அலகுக்கு மஞ்சள் வண்ணத்தை
ஆண்டவன் தீட்டுகையில்…
பொறுமையிழந்த மைனா..
'போதும் விடு…புறப்படணும்…'
என்றுகூறி பறக்க
எத்தனிக்கையில்…
சிதறிய மஞ்சள் வண்ணம்
சின்னக் கண்ணை அழகுபடுத்தியதோ?!
மேலும் அறிய : https://early-bird.in/the-wonder-of-birds
- வை.கலைச்செல்வன் | தொடர்புக்கு: kalai.muse@gmail.com