உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 90: இயற்கை உரங்களின் மகுடம்!

பாமயன்

சா

தாரண மக்கு உரங்களைவிட, மண்புழு உரத்தில் சத்து அதிகம். மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா வகைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகின்றன. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளைச் சுரந்து மண்புழு உரத்தில் நிலைபெறச் செய்கின்றன. கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கின்றன. திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால், அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும்போது, அவற்றின் குணம் மாற்றப்படும்.

ஒரு எக்டேர் நிலத்துக்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவீதம் கலக்கப்பட்டு, பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ இட வேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும்போது, மண்ணின் அடிப்பாகத்தில் இட வேண்டும். மண்ணின் மேல் பரப்பில் இடக் கூடாது. அவ்வாறு இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்பட்டு இறந்துவிடும் நிலை உள்ளது.

மண்புழு வளர்ப்பதற்கான உரிய மேட்டுப்பாங்கான இடத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். பின்பு நம் வசதிக்கேற்ற நீளத்துக்கு உரித்த தென்னை மட்டைகளை அடுக்கிப் படுக்கை அமைத்துக்கொள்ள வேண்டும். இதனால் மண்புழுக்களுக்குக் காற்றோட்டமும் நீர் அதிகமானால் தங்குமிடமும் கிடைக்கும்.

தேங்காய் மட்டைக்கு மேல் ஓரடி உயரத்துக்குக் கரும்புத் தோகையைப் பரப்ப வேண்டும். அதன் மேல் நீர் தெளித்துத் தோகையை நன்கு ஈரப்படுத்த வேண்டும். அரை கிலோ டிரைகோ டர்மாவிர்டி, சூடோமோனஸ் ஃபுளோரசன்ஸ் ஆகியவற்றைச் சாணக் கரைசலில் கலந்து கரும்புத் தோகை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

அதன் மேல் 4 அடி இடைவெளியில் 6 அடி உயரமுள்ள குச்சிகளை ஊன்ற வேண்டும். பின்னர், குவியலின் மீது சாணத்தைச் சீராகப் பரப்ப வேண்டும். இதன்மேல் பசுந்தழையைப் பரப்பி லேசான தோட்ட மண்ணைத் தூவி, நீர் தெளிக்க வேண்டும். இத்துடன் முதலாவது அடுக்கு முடிவடையும்.

இதேபோல அடுத்தடுத்து அடுக்குகளைப் போட்டு 4 அடி உயரம்வரை கழிவை மட்குவதற்குப் பயன்படுத்தலாம். இதற்கு மேல் உயரம் கூட்டக் கூடாது. ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் தெளித்துவர வேண்டும். குச்சியை 15 நாள் கழித்து அகற்ற வேண்டும். இதன் மூலம் குவியலுக்குள் சிதைமாற்றம் நடக்கும்போது உருவாகும் வெப்பம் வெளியேறும்.

தொடர்ந்து நீர் தெளித்துவர வேண்டும். ஏறத்தாழ 90 நாட்களில் 4 அடி உயரம் குறைந்து 2 அடி உயரமாக மாறும். குவியலுள் கையை வைத்துப் பார்த்தால், வெப்பம் தணிந்து இருந்தும். இதன் பின்னர் மண்புழுக்களைச் சதுர அடிக்கு 500 வீதம் இட வேண்டும்.

புழுக்களை மற்ற உயிரினங்கள் தாக்காமல் இருக்க தென்னை மட்டை கொண்டோ, ஈரச் சாக்கு கொண்டோ அவற்றை மூடிவிட வேண்டும். புழுக்களை இட்ட மூன்று வாரத்தில் இருந்து உரம் கிடைக்கத் தொடங்கும். இந்த உரம் ஊட்டச்சத்து மிகுந்தும் பயிர்களுக்கு ஏற்ற ஊட்டங்களைப் போதிய அளவுக்குப் பெற்றும் இருக்கும்.

மண்புழு உரம் மற்ற எல்லா வகை இயற்கை உரங்களைவிடவும் சிறந்தது. மண்ணை மிக வேகமாகவே விளைச்சலுக்குக் கொண்டுவந்து விடுகிறது. மட்குகளை நன்கு தின்று செடி எடுக்கும் வகையில் மிக எளிய மூலக்கூறுகளாக அது மாற்றிக் கொடுக்கிறது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT