இன்று இயற்கை வேளாண்மை உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்து கொண்டுள்ளன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டுப் புழுக்கள் ஏன் வேண்டும் (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர்.
பொதுவாக மண்புழுக்களில் மூன்று பிரிவுகளைக் கூறலாம். ஒன்று, மண்ணின் மேற்புறத்தில் சாணங்களையும் கழிவுகளையும் உண்டு, தம்மைப் பெருக்கிக் கொள்ளும் சாணப் புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை.
இது தவிர, நடுமட்டப் புழுக்கள் எனப்படும் மண்ணுள் வாழ்விகள் என்ற பிரிவு, மேற்பரப்புக்குச் சற்று உள்ளாக மண்ணுக்குள் வாழ்பவை. இவை மண்ணையே உண்ணும் திறன் கொண்டவை. அதாவது மண்ணுடன் மக்கி இருக்கும் பொருட்களைத் தின்பவை. இவை மண்ணின் வண்ணத்தில் இருக்கும். அதிகமான மழை பெய்யும் காலத்தில் இவை நிலத்தின் மேற்பரப்புக்கு வந்துவிடும்.
வெளிநாட்டுப் புழுக்களின் மூலாதாரம்
மூன்றாம் பிரிவு, மண்ணின் ஆழத்தில் வாழ்பவை. ஆனால் மேற்பரப்புக்கு வந்து கழிவைத் தின்று உள்ளே செல்லும் தன்மை கொண்டவை. ஆறு அடி ஆழத்துக்கும் கீழ் வாழக் கூடியவை. இவை மற்றப் புழுக்களைவிடப் பெரியவை. அதிகமாகக் கழிவை உண்ணக் கூடியவை. சிவப்பு வண்ணத்தில் காணப்படும். இவை வளமான காடுகளில் அதிகம் காணப்படும். மண் வளம் மிக்க சாகுபடி நிலங்களிலும் வாழக் கூடியவை. மேல் மட்டத்துக்கு வந்து கழிவை நிலத்துக்குள் இழுத்துச் சென்று உண்பவை. இதனால் மண்ணின் வளம் மிகச் சிறப்பாக இருக்கும்.
இவை நிலத்தின் மேல்மட்டத்தில் வாழ்வதால் இவற்றை மேற்புற வாழ்விகள் என்று கூறுவர். இவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை.
இவற்றில் இரண்டு இனங்களைப் பெரிதும் நமது பண்ணையாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஒன்று ‘ஐசீனியா ஃபெடிடா’, ‘யுடிரிலஸ் யூஜினியே’ என்பதாகும். இந்த இரண்டும் வெளிநாட்டுப் புழுக்கள் என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் மூலங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுவதாக ஓட்டோ கிரிஃப் என்ற அறிஞரின் குறிப்புகள் விளக்குகின்றன. இவர் 1917-ல் பிறந்து 2014-ம் ஆண்டில் தனது 97-ம் வயதில் காலமானார். சார்லஸ் டார்வினுக்குப் பின்னர் மண்புழு ஆய்வில் குறிப்பிடத்தக்கவர்.
கழிவைப் புரதமாக்கும் புழுக்கள்
உலகில் பல இனங்கள், பல சூழலியல் மண்டலங்களில் தோன்றியிருந்தாலும் அவை பல இடங்களுக்கும் பரவி இருக்கின்றன. இவற்றில் நன்மை செய்தவையும் உண்டு. தீமை விளைவிப்பவையும் உண்டு. இவற்றில் பல, புதிய சூழலில் நன்கு பொருந்திவிடுகின்றன. நாம் உண்ணும் தக்காளியிலிருந்து புளி போன்ற பல பயிர்கள் வெளியிலிருந்து வந்தவை. நம்மிடம் இருந்தும் பல பிற இடங்களுக்குப் பரவியுள்ளன.
இப்போது மண்புழுக்களுக்கு வருவோம். மேலே கூறிய இரண்டு புழுக்களின் தாயகம் சிலர் கூறுவதுபோல ஐரோப்பா அல்ல… ஆப்பிரிக்கா! மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கும் சிலது வந்துள்ளன. அவை மனிதர்களால் கொண்டு வரப்பட்டதற்கான தரவுகள் இல்லை.
எனினும் இப்போது இயற்கை வழி வேளாண்மைக்கு அடிப்படையான மட்கு தயாரிக்க மிகவும் ஏற்ற உயிரினமாக மாடு, ஆடுகளுக்குப் பிறகு இவை உள்ளன. அதிலும் ஆடு மாடுகள் கழித்த கழிவையும் பயனுள்ள புரதங்களாக மாற்றுவதில் உலகில் இன்றும் புழுக்களே முன்னிலையில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மண்புழுக்கள்.
மண்புழுக்கள் பெருக்குவோம்
இவை மீன்களுக்கு, கோழிகளுக்கு மிகச் சிறந்த புரதம் நிறைந்த உணவு. இவற்றால் எந்தவிதமான தீமையும் ஏற்படவில்லை. எந்த மாசுபாடும் ஏற்படவில்லை. இதற்குச் சான்றாக பத்தாண்டுகளைத் தாண்டிய மண்புழுப் பண்ணைகள் பல உள்ளன. அவற்றில் உள்ள தாவரங்கள் செழித்து வளர்கின்றன. மண்புழுக்களைத் தனியாக வளர்க்காமல் நேரடியாகப் பண்ணையை மூடாக்கு செய்து மண்புழுக்களைப் பெருக்கிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இயற்கைவழி வேளாண்மையில் இதுவும் ஒரு முறை அவ்வளவே.
நமது மண்ணில் உள்ள தோட்டப் புழுக்கள் (நடுமட்டப் புழுக்கள்) இவ்வளவு கழிவை உண்பதில்லை. இயற்கைவழி வேளாண்மைக்கு அதிகம் மட்கு தேவைப்படுவதால் மட்கு தயாரிக்கும் தொழிற்சாலைகள் போல பல மண்புழுப் பண்ணைகள் இயங்குகின்றன. எனவே நமது விருப்பத்துக்கு ஏற்ற முறையில் மண்புழு வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com