உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 93: பயிர்வாரியாக மண்புழு எரு

பாமயன்

எந்தப் பயிருக்கு எவ்வளவு மண்புழு எரு இட வேண்டும்?

நெல்:

அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு எருவை இடலாம். பின்னர் 40 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு எருவை இடலாம்.

மக்காச் சோளம்:

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு எருவை இடலாம். பின்னர் 40 நாட்கள் கழித்து 125 கிலோ மண்புழு எருவை இடலாம்.

கடலை, வெங்காயம்:

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு எருவை இடலாம். பின்னர் இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு எருவை இடலாம். மூன்றாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு எருவை இடலாம்.

மரவள்ளிக் கிழங்கு:

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு எருவை இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு எருவை இடலாம்.150 நாள் கழித்து 250 கிலோ மண்புழு எருவை இடலாம்.

கரும்பு, வாழை:

அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு எருவை இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு எருவை இடலாம். 180 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு எருவை இடலாம்.

வெற்றிலை:

கொடி தூக்கிய 60-ம் நாளில் கொடி ஒன்றுக்குக் கால் கிலோ மண்புழு எரு இடலாம். அதன் பின்னர் 100 நாள் கழித்து கால் கிலோ, 150 நாள் கழித்து கால் கிலோ, 200 நாள் கழித்து கால் கிலோ மண்புழு எரு கொடுத்து வர நல்ல விளைச்சல் எடுக்க முடியும்.

மிளகாய், கத்தரி:

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு எருவை இடலாம். பின்னர் 60 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு எருவை மூன்று முறை பிரித்து இடலாம்.

மலர் வகைகளுக்கு:

குறுகிய கால மலர் வகைகளான செவ்வந்தி, மரிக்கொழுந்து, மருகு, வாடாமல்லி, கோழிக் கொண்டை போன்றவற்றுக்கு, அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு எருவை இடலாம். மேல் உரமாக 250 கிலோ மண்புழு எருவை இடலாம்.

நீண்டகால மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, காக்கரட்டான், முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், அரளி போன்றவற்றுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடி ஒன்றுக்கு 250 கிராம் மண்புழு எருவை இட்டு வந்தால் நல்ல விளைச்சல் கிட்டும்.

மண்புழு எரு இடுவது என்பது மண்ணிற்கேற்ப மாறுபடும். மேலே கூறியது பொதுவாக இடும் முறை. எனவே, உழவர்கள் தங்களது நிலத்திற்கேற்ப உரம் இடுவதை முடிவு செய்ய வேண்டும். அதே நேரம் அதிகம் எரு இட்டாலும் தவறில்லை. பயன் கிட்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மண்புழு எரு இட வேண்டிய தேவை இருக்காது. பண்ணைக் கழிவுகளை மட்டும் நிலத்தில் போட்டு வந்தால் போதுமானது.

கட்டுரையாளர்,

சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு:

pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT