டெ
ல்லிக்கு அருகில் உள்ள சுல்தான்பூர் தேசியப் பூங்காவுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். பஸய் சதுப்புநிலம் என்று ஒரு பகுதி அங்கே இருக்கிறது. அங்கே நாரைகளைப் படம் எடுப்பதற்காகக் காலையில் சென்றிருந்தேன். ஒரே பனிமூட்டம். அந்தப் பனிமூட்டத்துக்கு இடையே கருங்கழுத்து நாரை (பிளாக் நெக்ட் ஸ்டார்க்) ஒன்று, தண்ணீர்ப் பாம்பு ஒன்றைப் பிடித்து, அதைச் சுழற்றிப் பார்த்துவிட்டு சாப்பிட்டது. ஆம்… உயிருடன்தான்! பாம்பின் வாலை நாரை பிடித்திருக்க, அதனிடமிருந்து பாம்பு தப்பிக்க முயன்றது. ஆனால் முடியவில்லை. அந்த நேரத்தில் அதைப் படமெடுத்தேன்.
நான் ஒளிப்படத் துறைக்கு வந்த பிறகு, பறவைகளைப் படம் எடுத்த அதே அளவுக்கு, பாம்புகளையும் படம் எடுத்துள்ளேன். பறவைகளைப் படம் எடுப்பதற்காகப் பல நேரம், காடுகளுக்குள் நடந்தேதான் செல்ல வேண்டும். அப்போதெல்லாம் பச்சைப் பாம்பு, தண்ணீர்ப் பாம்பு என நிறையப் பாம்பு வகைகளைப் பார்த்திருக்கிறேன்.
பறவைகளைப் படம் எடுப்பதற்காக மரங்களின் மேல் பகுதிகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டே போக வேண்டும். அப்போது, கீழே ஊர்ந்துகொண்டிருக்கிற பாம்புகள் நம் காலைத் தாண்டி ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். சில வகைப் பாம்புகள் மரங்களின் மீது சுருண்டிருக்கும். இலைகள், கிளைகளுக்கு இடையில் அவற்றைக் கண்டுபிடிக்கவே முடியாது. எதிர்பார்க்காத தருணத்தில் பார்த்துவிட்டால் உடல் புல்லரித்துவிடும்.
என்னைப் போன்ற காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் செல்லும் பல காடுகள் உள்ள பகுதிகளில், மருத்துவமனைகளே இருக்காது. மருத்துவமனைகளே இல்லாதபட்சத்தில், அங்கே பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்தை எப்படி எதிர்பார்க்க முடியும். அதனால், நாங்களே அதற்கான மருந்துகளை முன்னேற்பாடாக வாங்கி எடுத்துக்கொண்டு செல்வோம்.
இன்னொரு மறக்கவே முடியாத ஒளிப்பட நிகழ்வு, பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அங்கே தண்ணீர் அதிகமாக இருந்த நீர்நிலை ஒன்றிலிருந்து நீரை எடுத்து, சாலைக்கு அந்தப் பக்கம் தண்ணீர் குறைவாக இருக்கிற இன்னொரு நீர்நிலைக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் விழுந்த இடத்தில் சின்னச் சின்ன பாறைகள் இருந்தன. அந்தப் பாறைக்குள்ளிருந்து ஏதோ ஒன்று வெளியே எட்டிப் பார்த்தது. சற்றே கூர்ந்து பார்த்தபோது, அது பாம்பின் தலை என்று தெரிந்தது. சில நிமிடங்களில், அந்தப் பாறைக்குள்ளிருந்து நான்கைந்து பாம்புத் தலைகள் வெளியே வந்தன.
‘இங்கே இவை என்ன செய்கின்றன?’ என்ற யோசனையோடு, என் கேமராவைத் தயார் நிலையில் வைத்தேன். அந்த நீர்நிலையில், மீன்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. பாறைக்குள்ளிருந்த பாம்புகள், அவற்றைப் பிடித்துச் சாப்பிட முயன்றுகொண்டிருந்தன. ஒளிப்படக் கலைஞராக எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆவல் இருந்தது. அதாவது, பாம்பின் வாயில் இரை இருப்பதுபோன்று படம் எடுக்காமல், பாம்பின் வாயில் அந்த இரை சிக்குவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படி ஒரு காட்சியை இயற்கை எனக்கு வழங்கியது. அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறேன்.
வீடியோவைப் பார்க்க: http://www.rathikaramasamy.com
/p859883778#h785883f0
கட்டுரையாளர்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com