உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 13: நீலகண்டனுக்குச் சேதி செல்லும் நீல்காந்த்!

ராதிகா ராமசாமி

து பனங்காடை. இந்தியா முழுவதும் காணப்படும் பறவை. பார்க்கப் பார்க்க அலுக்காத பறவை இது. காடுகள், புல்வெளிகள், வயல்வெளிகள் ஆகியவற்றில் தென்படும் இந்தப் பறவை, நகரங்களில் மின்சாரக் கம்பிகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.

‘எங்கே அந்தப் பறவை?’ என்று பறவைநோக்கர்கள் ஒருபோதும் அங்கே இங்கே என்று அலையத் தேவையில்லை. அவர்களின் கண்களிலிருந்து இந்தப் பறவை ஒருபோதும் தப்பாது. அதற்குக் காரணம் அதன் நிறம். ‘எலெக்ட்ரிக்’ நீல நிறம் கொண்ட இந்தப் பறவை, தன் இறகுகளை விரித்துப் பறக்கும்போது வானில் சிறு வர்ணஜாலமே நடக்கும்.

இந்தப் பறவைகளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் ‘டோஸ்ட் மாஸ்டர்’. ஏனென்றால், இவை பிடிக்கும் சின்னச் சின்னப் பூச்சிகளை, உடனே சாப்பிடாமல், மேலே ‘டாஸ்’ செய்து வீசி, அவை கீழே வரும்போது ‘டக்’கென்று பிடித்து உண்ணும். அந்த அழகே தனிதான்.

நாட்டின் பல இடங்களில், இதை ‘விவசாயிகளின் நண்பன்’ என்று அழைக்கிறார்கள். பயிர்களைச் சேதப்படுத்தும் சின்னச் சின்னப் பூச்சிகள், சிறு தவளைகள் ஆகியவற்றைப் பிடித்து உண்டு, பூச்சிகளை இவை கட்டுப்படுத்துகின்றன.

இந்தப் பறவைக்கு ஏன் ‘இந்தியன் ரோலர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சுவாரசியமான காரணம் உண்டு. இனப்பெருக்கக் காலத்தில் தன் இணையை ஈர்ப்பதற்காக இவை மேலே இருந்து சுழன்று சுழன்று பறந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஏறிப் பறக்கும். ‘சுத்தி சுத்தி வந்தீக’ என்பதுபோல் இப்படிச் சுழன்று வருவதாலும் இந்தியாவில் இது அதிக எண்ணிக்கையில் தென்படுவதாலும் இதற்கு ‘இந்தியன் ரோலர்’ என்று ஆங்கிலத்தில் பெயர் வந்தது.

தான் பிடித்த இரையைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் நேரத்தில் இந்தப் பறவையை ஒளிப்படம் எடுத்தேன். அந்த இரை ஏதாவது சிறு பூச்சியாகவோ தவளையாகவோ இருக்கும் என்று நினைத்து விட்டுவிட்டேன். வீடு திரும்பிய பிறகு, கணினியில் படங்களை உள்ளிட்டுப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அந்த இரை… பூச்சியோ தவளையோ அல்ல. அது ஓர் ஆமைக் குட்டி! படத்தை உற்றுப் பாருங்கள்… ஆமை தெரியும்.

விளக்கு வெளிச்சத்துக்கு வந்து விழும் பூச்சிகளைக்கூட இது உண்ணும் என்பதால், சாலையோரங்களில் அடிக்கடி பறந்துகொண்டிருக்கும். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் மோதி இவை அதிக அளவில் இறக்கின்றன.

தசரா விழாவுக்குப் பிறகு இந்தப் பறவை பறப்பதைக் கண்டால், நம்முடைய விருப்பங்களைக் கைலாயத்தில் இருக்கும் சிவனிடம் அது சொல்லி நிறைவேற்றி வைக்கும் எனும் ஒரு நம்பிக்கை வட மாநில அரசர்களிடம் முன்பு இருந்தது. அந்த நம்பிக்கை இன்றும் தொடர்வதால், இந்தப் பறவைகளைப் பிடித்து, தசரா நாட்களில் விற்பது தனி வியாபாரமாகிவிட்டது. இதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ‘மாநிலப் பறவை’யாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பறவைக்கு வட மாநிலங்களில் என்ன பெயர் தெரியுமா..? ரஜினிகாந்த், விஜயகாந்த்போல, நீல்காந்த்!

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT