நான் இதுவரை பார்த்திராத அலங்கு எனும் சிறு விலங்கு, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி வளாகக் காட்டில் தென்பட்டது என்றறிந்து, அதைக் காண முயற்சித்தோம். நானும் என் நண்பரும் இரண்டு இரவுகள் அந்தக் காட்டில் சுற்றினோம். முள்ளம்பன்றியொன்றைப் பார்க்க முடிந்தது. ஆனால் அலங்கு தென்படவேயில்லை. இரவாடியான இந்தக் காட்டுயிர் நம் கண்ணில் படுவது அரிது.
வறண்ட புதர்க்காடுகளில் வாழும், பூனை அளவு உள்ள, ஆனால் சற்றே நீளமான இதை ஆங்கிலத்தில் ‘பங்கோலின்’ (தமிழில்: எறும்புத்தின்னி) என்பர். இதை ‘அலுங்கு’ என்றும் சிலர் குறிப்பிடுவர். நீண்ட வாலுடன், கூர்மையான முகம் கொண்ட இதன் உடல், உறுதியான செதில்களால் மூடப்பட்டிருக்கும். பாலூட்டிகளில் இத்தகைய செதில்கள் கொண்ட ஒரே உயிரினம் அலங்குதான். எட்டு வகையான அலங்கு இனங்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பரவியிருக்கின்றன. இந்தியாவில் மட்டும் இரண்டு இனம் உண்டு.
கவசமான செதில்கள்
அலங்கு பகலில் நிலத்தடி வங்குகளிலும் பாறை இடுக்குகளிலும் சுருண்டு உறங்கும். இருட்டியபின் இரை தேடக் கிளம்பும். எறும்பு, கரையான், ஈசல் இவற்றை மட்டுமே உணவாகக் கொண்டு இவை உயிர் வாழ்கின்றன. முன்னங்காலில் உள்ள நீண்ட, உறுதியான நகங்களைக் கொண்டு கரையான் புற்றையும் எறும்பு வளைகளையும் தோண்டிப் பறிக்கும். அலங்குக்குப் பற்கள் கிடையாது. பசை கொண்ட நீண்ட, உருண்டையான நாக்கைப் புற்றின் உள்ளே விட்டு எறும்பு, கரையான் இவற்றைப் பிடிக்கும். தனக்கு ஆபத்து என்று உணர்ந்தால் உருண்டையாக ஒரு கால்பந்து போல இறுக்கமாகச் சுருண்டுவிடும். செதில்கள் கவசம் போல இருப்பதால், மற்ற விலங்குகள் அதைத் தாக்க முடியாது. இந்த செதில் நம் பெருவிரல் நகம் மாதிரி, ஆனால் அதை விடப் பெரிதாக இருக்கும்.
குஜராத்தில் சிங்கங்கள் இருக்கும் கிர் சரணாலயத்தில், ஒர் பெண் சிங்கம் தன் இரு குட்டிகளுடன் ஒரு அலங்கை எதிர்கொள்ளும் காணொளியை இணையத்தில் பார்க்கலாம். எத்தனை முறை கடிக்க முயன்றாலும் கல் உருண்டை போன்ற அலங்கை அவற்றால் ஒன்றும் செய்ய இயலவில்லை. சிங்கம் போனபின் அலங்கு புதருக்குள் சென்று மறைவதைப் பார்க்கிறோம். அலங்கு ஒரே ஒரு குட்டியை ஈனும். அதன் குட்டி, கரடிக்குட்டி போலவே தாயின் முதுகில் சவாரி செய்யும்.
10 வருடத்தில் 10 லட்சம் அலங்குகள்
ஆப்பிரிக்காவில் இதைக் கொல்வது பாவம் என்று மக்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்ல, அவை அரசால் பாதுகாக்கப்பட்ட உயிரினம். நம் நாட்டிலும்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் அலங்குக்கு ஏகபட்ட கிராக்கி. அங்கெல்லாம் இதன் செதில்கள், நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றன.
இந்தச் செதில்களில் சில, நோய்களைக் குணமாக்கும் சக்தி கொண்டவை என நம்பும் சீனாவின் நாட்டு மருத்துவர்கள், இவற்றைப் பெருந்தொகை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள் இதுதான் இதன் உயிருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. ஆகவே இந்த உயிரினம் பல நாடுகளில் கள்ள வேட்டையாடப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறது. நாடு விட்டு நாடு கடந்து கடைசியில் கீழை நாட்டுச் சந்தையில் போய் சேர்கிறது.
போதை மருந்துச் சந்தைக்கு அடுத்தபடியாகப் பணம் புரள்வது காட்டுயிர் கள்ளச்சந்தையில்தான்! இன்று இந்தச் சந்தையில் அதிகம் விலை கொடுத்து வாங்கப்படும் காட்டுயிர் அலங்கு. இதைக் கட்டுப்படுத்த பன்னாட்டு ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இந்தப் பணியைச் செய்வது ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம்’ (International Union for Conservation of Nature – IUCN) என்ற நிறுவனம். இந்தியாவும் இதில் ஓர் அங்கம்.
இவர்கள் கணிப்பின்படி, கடந்த பத்து வருடத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் அலங்குகள் கொல்லப்பட்டிருகின்றன. இந்தியாவில் இந்த காலகட்டத்தில் சுமார் 6 ஆயிரம் அலங்குகள் பிடிக்கப்பட்டன. உண்மையில் இதைவிட அதிகமான எண்ணிக்கையில் இவை கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதில் பெரும்பாலானவை தமிழ்நாட்டிலும் மணிப்பூரிலும் கள்ள வேட்டையாடப்பட்டவை என்று அவர்களின் குறிப்பு சொல்கிறது. அலங்கைப் பிடிப்பது எளிது. அதைத் தொட்டால் சுருண்டுவிடும். திருப்பித் தாக்காது. அப்படியே சாக்கில் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள்.
அந்த ‘அபூர்வ’ தருணம்!
வருடத்தில் ஒரு முறையாவது தமிழ்நாட்டில் ஏதாவது ஊரிலிருந்து அலங்கு பற்றிய செய்தி வரும், ‘அபூர்வ விலங்கு பிடிபட்டது’ என்ற தலைப்புடன் ஒரு பரிதாபமான ஒளிப்படம் நாளிதழில் வரும். ஒரு முறை சென்னையில் கூவம் நதிக்கரையில் ஒன்று பிடிக்கப்பட்டது. வேலூர் கோட்டை அகழிக்கரையில் ஒரு அலங்கு சிக்கியது. இப்படிச் சிக்கும் அலங்குகளின் கதி என்னவென்று தெரியவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தான் வளர்ந்த பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள கிராமத்தில் சிலர் அலங்கை வளர்த்திருந்ததை தாம் கண்டதாக எனது நண்பர், தமிழறிஞர் கணேசன் கூறுகிறார். எந்த ஒரு உயிர்க்காட்சியகத்திலும், நான் அலங்கைப் பார்த்ததில்லை. தினமும் எறும்பும் கரையானும் இரையாகக் கொடுப்பது எளிதல்லவே.
‘புதிய உலகம்’ என்றறியப்படும் அமெரிக்காவில் அலங்கு கிடையாது. ஆனால் ஏறக்குறைய அதே போன்ற முரட்டுத்தோலுடைய எறும்புதின்னி ஒன்று அங்குண்டு. ‘ஆர்மடில்லோ’ என்று பெயர். தொழுநோய் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டதால் பிரபலமடைந்த விலங்கு இது. ஒரே ஒரு முறை அதன் இயற்கைச்சூழலில் அதை நான் பார்த்திருக்கிறேன். புளோரிடாவில் உள்ள ஒரு சரணாலயத்தில். ஒற்றையடிப் பாதையொன்றில் நானும் என் மகன் அருளும் நடந்து கொண்டிருந்தபோது, ‘அப்பா. மெதுவாகத் திரும்பிப் பாருங்கள்’ என்று கிசுகிசுத்தார். நான்கு மீட்டர் தூரத்தில், எங்கள் அருகாமையை உணராமல் ஒரு ஆர்மடில்லோ தரையைத் தீர்க்கமாக முகர்ந்து கொண்டிருந்தது.
சில உயிரினங்களை வாழ்வில் ஒரே முறைதான் நாம் காண முடிகின்றது. அது ஒரு அரிய தருணம்!
(அடுத்த கட்டுரை – ஆகஸ்ட் 4 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com