ஓ
லைப் பொருட்களில் மிகச் சிறிதானதும் வழிபாட்டில் முக்கியப் பங்கெடுக்கும் தன்மை கொண்டதுமான பெட்டியை ‘மஞ்சணப்பெட்டி’ எனக் கூறுவார்கள். சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைக்கும் சிறிய பெட்டிதான் மஞ்சணப்பெட்டி. இப்பெட்டிக்கு மூடியும் உண்டு.
ஓலையில் முடையப்பட்டு நான் பார்த்த அழகிய பொருட்களில், இதுதான் முதன்மையானது. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவே சிறிதாயிருக்கும் இப்பெட்டி, மிகக் கவனமாக முடையப்பட்டிருக்கும். குருத்தோலைகளைப் பயன்படுத்தி முடையப்படும் இதை, இறைவனுக்குப் படைக்க உகந்ததாகப் புரிந்துகொள்ளலாம்.
முடைவது எனும் முறையில் உள்ளங்கை அளவிலிருந்து ஒரு ஆள் உயரம் வரையிலான பல்வேறு பொருட்கள் இன்றும் சந்தையில் கிடைக்கின்றன. எளிதாக முடையும் முறைகளைக் கற்க, மஞ்சணப்பெட்டி பொருத்தமானது. ஒரே நேரத்தில் இரண்டு பெட்டிகளைச் செய்து, பெரிய பகுதியைச் சிறிய பகுதியின்மேல் கவிழ்த்துவிட்டால் மஞ்சணப்பெட்டி தயார்.
இவ்வளவு சிறிய பெட்டியை முடைவதற்கு முன் ‘பொளி’ தயார் செய்ய வேண்டும். பொளி என்றால் ஓலைதான். ஆனால் ஓலையில் காணப்படும் ஈர்க்குகளை நீக்கி, தேவையான அளவில் அவற்றை வகுந்து கொள்ளுவதை இப்படிச் சொல்லுவார்கள். ஓலையில் முடைபவர்கள் தவறாது அறிந்துகொள்ள வேண்டிய ஒரு அடிப்படை நுட்பம் இது.
நவீன காலத்தில் ஓலைகளை வகுந்து எடுப்பதற்காக ஒரு கருவியைக் கண்டுபிடித்தார்கள். ஓர் இரும்பு ஆங்கிள் தண்டை எடுத்து, அதன் உயரத்தில் சமமாகவும் நீளத்தில் சரிபாதி வரும்படி ஒரு கட்டையை அதனுடன் இணைப்பார்கள். இவ்விதம் இணைக்கப்பட்ட மரத்துக்கு எதிர்புறம், அடுக்கடுக்காகச் சிறிய பட்டைகளை இணைத்து பிரி ஆணியைக் கொண்டு முறுக்கிவிடப்பட்டிருக்கும். இப்பட்டைகளின் நடுவில் சரியான அளவில் திணிக்கப்பட்ட சவரக் கத்திகளை மேலெழுந்தவாரியாக வைத்து, ஓலைகளை நீளவாக்கில் வகுந்தெடுப்பது நவீன முறை.
இன்று மஞ்சணப்பெட்டியை முடையும் திறன் கொண்டோரைக் காண்பது அரிது. கோயில்களிலும் கிராம வழிபாட்டு இடங்களிலும் மஞ்சணப்பெட்டியின் பயன்பாடு அற்றுப்போய்விட்டது.
மஞ்சணப்பெட்டிகளுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்கலாம். வீட்டின் சமையல் பொருட்களான கடுகு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை வைக்கும் பெட்டியாக மீண்டும் இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும்.
ஒரு மஞ்சணப்பெட்டியின் சந்தை விலை ரூ.15 மட்டுமே. ஒருவேளை நமது நகைக் கடைக்காரர்கள், இவற்றில் தங்க நகைகளை வைத்து விற்பனை செய்து, அதையே பொதிந்து கொடுப்பதற்காகப் பயன்படுத்தினாலும், மஞ்சணப்பெட்டிக்குப் புத்துயிர் கொடுக்கலாம். இன்றும் நுணுக்கம் நிறைந்த இந்தப் பெட்டியை முடைவது கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த கமலம் அம்மாள் (தொடர்புக்கு: 9952687897) மட்டுமே.
சிறிய பொளியும் குருத்தோலையின் அழகும் வாசமும் ஒருசேர, மஞ்சணப்பெட்டி மங்களமாகக் காட்சியளிக்கும். நாடார் சமூகத்தில் 120 குடும்பங்களுக்கு ‘திருமஞ்சணத்தார்’ என்ற பட்டம் உண்டு. மங்களகரமான பட்டம்தான். மஞ்சணை என்பது கிராம தெய்வங்களோ கன்னியரோ திருமணமானவரோ பூசிக்கொள்ளும் மங்களப் பொருள்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com