உயிர் மூச்சு

கற்பகத் தரு 09: மழை அணிகளுக்கு முன்னோடி!

காட்சன் சாமுவேல்

ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது.

ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருக்கமாக இருக்கும்படி அடுக்கி, இணைப்பதற்கு பனை ஈர்க்குகளையே பயன்படுத்துவார்கள். இந்த வடிவமைப்பு தென்னை ஓலையில் செய்யப்படுவதை மாலத்தீவில் பார்த்திருக்கிறேன். இவை, அடிப்படையாகத் தடுக்காகப் பயன்படும். இத்துடன் ஈச்ச மட்டைகளை இணைத்துப் பலப்படுத்தி, அவற்றைக் குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

சம்பு ஒரு சிறந்த மழை அணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். பண்டை காலத்தின் ‘மழை கோட்’ என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால்வரை உடலைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை, அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டுத் தன்மையிலிருந்தும் புரிந்துகொள்ளலாம்.

09chnvk_sambu2.JPG

உலகின் பல்வேறு நாடுகளில் சம்புவை ஒத்த வடிவங்களில் மழை அணி செய்யப்படுவது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாகப் பயன்பட்ட ஒரு வடிவம் இது. இன்று சம்புவைத் தொழில் முறையாகச் செய்தால் ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும் விற்க இயலும்.

கிராம மக்களுக்குக் குடையைவிடச் சிறந்த வடிவமைப்பு இதுதான். சம்புவை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவுக் காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்திருக்கிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை மிகப் பிரபலமான பயன்பாட்டுப் பொருளான சம்பு தற்போது வழக்கொழிந்துவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த கல்யாணசுந்தரம் (63) என்ற பெரியவர், இன்றும் தடுக்குகளைச் செய்வதில் வல்லவர். சம்பு தேவைப்படுபவர்கள் பாண்டியன் என்ற அவரது உறவினரை அழைத்து (95006 27289) கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்,பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT