உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 11: நாரை நழுவவிட்ட ‘வாய்’ப்பு!

ராதிகா ராமசாமி

முனை நதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது அந்த நாரை. அது அலகில் மீனைக் கவ்விக்கொண்டு செல்லும்போது படம் எடுக்கலாம் என்று காத்திருந்தேன். அதுவோ மீனுடன் பறக்கவும் செய்தது. நான் கேமராவை கிளிக் செய்து முடிப்பதற்கும், அந்தப் பறவை இரையைத் தவறவிடுவதற்கும் கச்சிதமாகப் பொருந்திப்போனது.

‘உங்கள் அரிசியில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொல்வார்கள். ஒருவேளை, அந்த மீனின் மீது அந்த நாரையின் பெயர் எழுதப்படவில்லையோ என்னவோ?

ஆங்கிலத்தில் ‘பெயிண்டட் ஸ்டார்க்’ என்று அழைக்கப்படும் இந்த வண்ணமயமான பறவையை, தமிழில் சங்குவளை நாரை என்று அழைக்கிறார்கள். இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் இந்தப் பறவைகளுக்கு நீர்நிலைகள்தாம் வாழிடம்.

அளவில் பெரிய, ஆரஞ்சு நிற அலகு கொண்ட சங்குவளை நாரைகளில், ஆண் பறவையே ‘எங்கே கூடு கட்டலாம்?’ என்று முடிவு செய்யும். அந்த இடத்தைப் பார்த்துவிட்டுத்தான், ‘இவனுடன் கூடலாமா வேண்டாமா?’ என்று பெண் பறவை முடிவு செய்யும். ரொம்பவும் கடுமையான போட்டி இருக்கும்பட்சத்தில், எந்த ஆண் பறவை மிகவும் உயரமாக இருக்கிறதோ, அதனோடுதான் பெண் பறவை இணைசேரும். மரங்களின் மீது கூடு கட்டி வாழும் இந்தப் பறவைகளுக்கு, நீர்வாழ் உயிரினங்கள்தாம் முக்கிய உணவு.

இரண்டு முதல் ஐந்து முட்டைகள்வரை இடும். குஞ்சுகளுக்குத் தாய், தந்தை என இரண்டுமே இரை தேடிக்கொண்டு வரும். அலகுகள் நீளமாக இருப்பதால், ஒரே நேரத்தில் ஐந்தாறு சின்னச் சின்ன மீன்களைக் கவ்விக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். இப்படி ஒரு நாளைக்கு நான்கைந்து முறை இரை சேகரித்துக்கொண்டு வருவது உண்டு.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT