நிஜமாகத்தான்!
தேநீர் இடைவேளையை சுவீடன்தான் உலகுக்கு அறிமுப்படுத்தியது. அதன்பின் ஆறு மணிநேர வேலை முறையை அறிமுகப்படுத்தி, வாழ்வையும் வேலையையும் சமன் செய்யும் கலையை அந்நாடே கற்றுக்கொடுத்தது. இப்போது மனதுக்கும் உடலுக்கும் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவிக்கும் ஒரு உடற்பயிற்சி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சுவீடன். அதன் பெயர் ‘பிளாக்கிங்’ (Plogging)!
‘வாக்கிங்’ தெரியும், ‘ஜாக்கிங்’ தெரியும். அதென்ன ‘பிளாக்கிங்?’. ‘ஜாக்கிங்’ என்ற சொல்லும் ‘பிளாக்கா அப்’ என்ற சுவீடன் சொல்லும் இணைந்து உருவான சொல்தான் ‘பிளாக்கிங்’. ‘பிளாக்கா அப்’ என்றால் ‘எடு’ என்று அர்த்தம். ‘எடுத்துக்கொண்டு ஓடு’ என்பதுதான் இந்தப் புதிய சொல்லின் அர்த்தம்.
‘எடுத்துக்கொண்டு ஓடுவது’ என்றவுடன் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு ஓடுவது என்று நினைக்க வேண்டாம். நமக்கும் இந்தப் பூமிக்கும் தேவையற்றதை எடுத்துக்கொண்டு ஓடுவது என்று இதற்கு அர்த்தம்.
வழக்கமாக ஓடுவது போன்றதுதான் இந்தப் பயிற்சியும். ஆனால், ஓடும்போது குப்பைகளைக் குனிந்து பொறுக்கி எடுத்துக்கொண்டே ஓட வேண்டும். ஓடுவது நல்ல உடற்பயிற்சிதான். அதுவும் அவ்வப்போது குனிந்து ஓடும், இந்த உடற்பயிற்சியைப் பற்றிக் கேட்கவா வேண்டும். இந்தப் பயிற்சி உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘லைஃப் சம்’ எனும் செயலி நிறுவனம் தெரிவிக்கிறது. அது பிளாக்கிங் மூலம் எரிக்கப்படும் கலோரிகளை அளவிடும் வகையில் தனது ‘லைஃப் சம்’ செயலியை மாற்றி வடிவமைத்துள்ளது.
அந்தச் செயலியின் தரவுகளின்படி, 30 நிமிட பிளாக்கிங் சராசரியாக 288 கலோரிகளை எரிக்கிறது. அதாவது 30 நிமிடம் தொடர்ந்து ஓடினால் எந்த அளவு கலோரிகளை உடம்பு எரிக்குமோ அதே அளவுக்கு கலோரிகளை பிளாக்கிங்கும் எரிக்கிறது. ஓடுவது, தனிமனிதனின் உடல்நலத்துக்கு மட்டும்தான் நன்மை பயக்கும். ஆனால் பிளாக்கிங் தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது.
உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே நோய் என்றாகி விட்டது. சுத்தமான காற்று இன்று கனவிலும் சாத்தியமற்ற ஒன்று. இளம் வயதிலேயே பலர் நீரிழிவு நோயால் அவதியுறும் நிலை இன்று உள்ளது. உயர் ரத்த அழுத்தமும் ரத்தக் கொழுப்பும் இன்று பெரும்பாலானவர்களுக்குக் காணப்படுகிறது. உடல் பருமனால் இன்று குழந்தைகள்கூட அவதியுறுகிறார்கள். இதற்கான தீர்வை முன்வைத்துப் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெறுகிறது. மக்களின் தலைமீது எண்ணற்ற மருந்துகள் திணிக்கப்படுகின்றன.