உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 88: மண்புழு உரம் தயாரிப்பு முறை

பாமயன்

டந்த வாரம் மண்புழுக்கள் குறித்து மேலோட்டமாகப் பார்த்தோம். மண்புழுக்கள் இருந்துவிட்டாலே, உடனே நம்மால் உரம் தயாரித்துவிட முடியுமா? இல்லை. மண்புழு உரம் தயாரிப்பதற்குக் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

தாவரக் கழிவும் விலங்குக் கழிவும் மண்புழு உரம் உருவாக்கப் பயன்படும் மூலப் பொருட்கள். மட்கக்கூடிய கழிவைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். அவற்றில் பெரிய கட்டைகள் இருந்தால் அவற்றைச் சிறிய அளவுள்ளதாக உடைத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி, பீங்கான் போன்ற மட்காத பொருட்களைப் பிரித்து எடுத்துவிட வேண்டும்.

மட்குகளை முறைப்படி அடுக்காகப் போட வேண்டும். ஒரு அடுக்கு தாவரக்கழிவு போட்டு, அதன்மீது கரைத்த சாணத்தை ஊற்றிவிட வேண்டும். அதன் பின்னர் அடுத்த அடுக்காக தாவரக் கழிவு, சாணக் கரைசலைத் தெளித்து மூன்று அடி உயரம்வரை மாறி மாறிப் போட வேண்டும். இதை இருபது நாட்களுக்கு மக்கவிட வேண்டும். இவ்வாறு மட்கிய கழிவுகள், மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடைக் கழிவையும் சாண எரிவாயுக் கழிவையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாகப் பயன்படுத்தலாம்.

மண்புழுக்களை இடுவதற்கான காலத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்கு மட்குப் படுகையில் கை வைத்துப் பார்க்க வேண்டும். அதன் சூடு தணிந்து, குளிர்ந்து இருந்தால் அதில் மண்புழுக்களை விடலாம். இப்படிப் புழுக்களை விட்ட பின்னர் நாள்தோறும் நீர் தெளித்து வர வேண்டும்.

மண்புழு உரம் உருவான பின்னர் மண்புழுக்களையும் உரத்தையும் பிரித்து எடுப்பது அவசியம். இதற்குச் சல்லடையைப் பயன்படுத்தலாம். அல்லது கையால் மெதுவாக அரித்து எடுத்துக்கொள்ளலாம். மண்புழு உரத்தைச் சல்லடையிலிட்டுச் சலிக்கும்போது, நன்றாக மக்கிய உரம், மக்காத கழிவைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழுப் படுக்கையில் இட வேண்டும்.

சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT