உயிர் மூச்சு

வானகமே இளவெயிலே மரச்செறிவே 07: தொதுவர்களின் மீட்பர்

சு.தியடோர் பாஸ்கரன்

நீ

லகிரியில் வாழ்ந்து வெளியுலகத்துடன் தொடர் பற்றிருந்த தொதுவர் இனம் பரங்கிப் புண் நோய்க்கு ஆளாகி கடந்த நூற்றாண்டில் அழியும் நிலைக்குச் சென்றது. சுமார் 700 பேரே எஞ்சியிருந்தனர். ஐம்பதுகளில் லண்டனில் செவிலியராகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த தொதுவ இனப்பெண் இவாம் பில்ஜின், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை ஒரு ஆய்வறிக்கையைப் படித்து அறிந்துகொண்டார். பின்னர் இந்தியா திரும்பி பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்தார்.

பண வசதியற்ற நிலையில், ஒரு முறை பிரதமர் நேரு சென்னை மெரினாவில் பேச வந்தபோது, பாதுகாப்பு வளையைத்தை மீறி அவரைச் சந்தித்துவிட்டார். ‘என் மக்கள் செத்துக்கொண்டிருக் கிறார்கள். உடனடி உதவி தேவை’ என்றார். ஒரு ஜீப்பும் இரு உதவிப் பணியாளர்களையும் பிரதமர் தந்தார். ‘மந்து’ எனப்படும் ஒவ்வொரு தொதுவக் குடியிருப்புக்கும் பெனிசிலின் குப்பிகளை எடுத்துச் சென்று மருத்துவ உதவி செய்தார் பில்ஜின்.

உலகின் அருகிவரும் பழங்குடியினர் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்ட ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ், பில்ஜினின் படத்தைப் போட்டு, ஒற்றையாளாகத் தொதுவர் இனத்தைக் காப்பாற்றியவர் என்று எழுதியது. இவரது பணியின் விளைவைப் பற்றி அறிந்த பிரதமர், இவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார். நேருவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் அளவுக்கு அவரது நல்லெண்ணத்தை பில்ஜின் பெற்றிருந்தார். நேரு மறைந்த பின், ஒவ்வொரு தேவைக்காகவும் இவர் ஆதரவின்றிப் போராட வேண்டி வந்தது.

தொதுவர் சார்ந்த கோரிக்கைகளுக்காக பில்ஜின் அவ்வப்போது சத்தியாக்கிரகம் செய்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு குடிசை போட்டுத் தனியாக இவர் உட்கார்ந்திருந்ததை ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். தொதுவர்களின் ஒரு மந்துக்கு வெகு அருகே ‘ரேடியோ டெலஸ்கோப்’ நிறுவத் திட்டமிடப்பட்டபோது, அதற்கு எதிராகப் போராடி மந்து நிலத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். டெலஸ்கோப் வேறோரிடத்தில் நிறுவப்பட்டது. ஊட்டியின் பாரம்பரியப் பெயரான, ஒத்தக்கல்மந்து என்பதை மாற்றி உதகமண்டலம் என்ற சம்பந்தமேயில்லாத ஒரு புதிய பெயரை இந்த நகருக்கு தமிழக அரசு சூட்டப்போவதாக அறிவித்தபோது, இவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஒத்தக்கல்மந்து என்ற தொதுவச் சொற்றொடர்தான் இந்நகரின் பெயராக இருக்க வேண்டும் என்றார். அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்து, வரலாற்றின் ஒரு இழையைத் துண்டித்தது. ஒரு முதிர்ந்த நாகரிகத்தில் ஊர்ப் பெயர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவற்றை மாற்றாமலிருப்பது அவசியம் என்பதையும் ஆர்.பாலகிருஷ்ணனின் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய அண்மை ஆய்வு காட்டுகிறது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மொழியியலாளர் எம்.பி. எமனோவ் (M.B.Emmeneau 1904-2005) ஊட்டிக்கு வந்து தொதுவர் மொழியை (எழுத்து வடிவம் இல்லாதது) ஆய்வு செய்தபோது பில்ஜின் அவருக்கு உறுதுணையாக இருந்தார். எமனொவ் எழுதிய ‘தோடா கிராம்மர் அண்ட் டெக்ஸ்ட்’ (Toda Grammer and Text -1961) என்ற நூலில் இம்மொழி 28 திராவிட மொழிகளில் ஒன்று என்று உறுதிப்படுத்தினார்.

1981-ல் நான் கோவையில் அஞ்சல் துறைப் பணியிலிருந்தபோது பழங்குடியினர் பற்றிய அஞ்சல்தலை வெளியிடப் போவதாகவும், அதில் தொதுவர் இடம்பெற வேண்டும் என்றும் டெல்லியிலிருந்து ஒரு தாக்கீது வந்தது. அதற்காக ஊட்டியில் இருந்த பில்ஜினை சந்தித்த பின், நாங்கள் நண்பர்களானோம். தொதுவர் அஞ்சல்தலையை ஊட்டியில் மே 30-ல் அன்றைய ஆளுநர் வெளியிட்டார். தொதுவக் கலாச்சாரம் பற்றிய ஒரு அருமையான கண்காட்சியையும் பில்ஜின் அப்போது ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த மக்களின் அரிய பூத்தையல் வேலைக்கு பில்ஜின் புத்துயிர் ஊட்டினார். ஊட்டி ஷெல்டன் சாலையிலுள்ள அவர் வீட்டில் எப்போதும் பத்து, பன்னிரெண்டு தொதுவப் பெண்கள் பூத்தையல் செய்துகொண்டிருப்பதைக் காணலாம் (அங்கு வந்த அமிதாப்பச்சன் ஒரு தொதுவ சால்வையை வாங்கி, அதை இந்தி சினிமா வட்டாரத்தில் பிரபலப்படுத்தினார்). இந்தத் திணைக்குடியினர் நலனுக்காகத் தொதுவர் மேம்பாட்டு சங்கம் (The Toda Uplift Society) அமைப்பை பில்ஜின் நிறுவினார். அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பட்டியல் பழங்குடியினருக்குக் கிடைக்கும் சலுகைகளை அவர்கள் பெற உதவினார். தொதுவப் பெண் ஒருவருக்கு அஞ்சல் துறையில் வேலை கிடைத்தபோது, அந்தப் பெண்ணை மேட்டுப்பாளையத்தில் பணி அமர்த்த வேண்டும் என்று வாதாடினார். மலையிலிருந்து தொலைதூர ஊர்களுக்கு அனுப்பினால் வேலையே வேண்டாம் என்று கூறியவர்களும் உண்டு.

ஊட்டியில் குடியேறியிருந்த க்ளாஸ் என்ற ஜெர்மானியரைத் திருமணம் செய்துகொண்ட பில்ஜின், ஆதரவற்ற ஒன்பது தொதுவக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். அவர்களில் ஒருவர் தான் ‘சோலைக்கிளி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த குமாரி என்ற ராகினி. நடிக்கும்போதே அவரும் கதாநாயகன் கார்த்திக்கும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் புதல்வன்தான் இன்றைய இளம் நடிகர் கவுதம் கார்த்திக்.

பொக்காபுரத்திலுள்ள தனது பண்ணை வீட்டில், பில்ஜின் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, பேச்சுத்திறன் இழந்து படுத்த படுக்கையாயிருந்தபோது அவரை நான் கடைசியாகச் சந்தித்தேன். 2012-ல் அவர் காலமானார்.

(அடுத்த கட்டுரை....

ஜூலை 7 இதழில்)

கட்டுரையாளர்,

சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

SCROLL FOR NEXT