உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 09: கூட்டம் போற்றும் கூழைக்கடா!

ராதிகா ராமசாமி

நீ

ர்ப்பறவைகளில் பூநாரைகளுக்குப் பிறகு, நமது கண்களில் பரவலாகத் தென்படும் பறவை வெள்ளைக் கூழைக்கடாக்கள் (கிரேட்டர் ஒயிட் பெலிக்கன்). நீர்ப்பறவைகளில் எடை மிகுந்த பறவை இது. இதனுடைய அலகு சுமார் 30 முதல் 45 செ.மீ. வரை நீளம் கொண்டது. அந்த அலகின் கீழ்ப் பகுதியில் இழுவைத்தன்மை கொண்ட சின்ன ‘பை’ போன்ற உறுப்பு இருக்கும். இதில் நீர், மீன்கள் போன்றவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு, தன் குஞ்சுகளுக்கு எடுத்துச் சென்று ஊட்டும்.

மிகவும் ஆழமில்லாத நீர்நிலைகளில்தான், இவற்றுக்கான உணவு கிடைக்கும். இந்தியா முழுவதும் நீர்நிலைகளில் பரவலாக இந்தப் பறவையைக் காண முடியும் என்றாலும், குஜராத்தில் உள்ள ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’ பகுதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கூழைக்கடாக்களைப் பார்க்க முடியும். குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதாக இருந்தாலும், இந்தப் பறவைகள் கூட்டம் கூட்டமாகத்தான் செய்யும்.

09chnvk_pelican2.jpg

காலை நேரத்தில்தான் இவை சுறுசுறுப்பாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும். மதிய நேரத்தில் குளிப்பது, இறக்கைகளைக் கோதி சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடும். கூழைக்கடா குடும்பத்தைச் சேர்ந்த இதர பறவைகளான ‘புள்ளி அலகு கூழைக் கடா’ (ஸ்பாட் பில்டு பெலிக்கன்), ‘பழுப்பு கூழைக்கடா’ (பிரவுன் பெலிக்கன்) போன்றவை மரத்தில் கூடு கட்ட, வெள்ளைக் கூழைக்கடா மட்டும், தரையில் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள புல்வெளி போன்ற பகுதிகளில் கூடு கட்டும்.

பிடித்த மீன்களைத் தலை உயர்த்தி அப்படியே விழுங்கும் தன்மை கொண்ட இந்தப் பறவைகளின் எண்ணிக்கை, தற்போது குறைந்து வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்காக என்று சொல்லி, நீர்நிலைகளை கண்மண் தெரியாமல் ஆக்கிரமிக்கும்போது, மாறுபட்ட உருவம் கொண்ட இந்தப் பறவைகளின் வாழிடம் சுருங்கத்தானே செய்யும்?

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT