‘ம
ண்புழுக்கள் நிலத்தின் குடல்கள்’ என்று முதுபெரும் உயிரியல் அறிஞரான டார்வின் கூறியுள்ளார். இவை மண்ணை உழுதுகொண்டே இருக்கின்றன. அதனால், மண் பொலபொலவென இருக்கிறது. ஆகவே, நிலம் காற்றோட்டமும் நீர்ப்பிடிப்புத் தன்மையும் நிறைந்ததாகிறது. மண்புழுவின் வயிற்றுக்குள் போகும் எந்த ஒரு மட்குப் பொருளும் வெளிவரும்போது பல மடங்கு சத்து கூட்டப்பட்டு வெளிவருகிறது.
எடுத்துக்காட்டாக, மண்புழு உட்கொள்ளும் உணவில் உள்ள மட்குப் பொருளில் உள்ள ஒரு பங்கு தழைச்சத்து நாங்கூழ்க் கட்டிகளாக வெளிவரும்போது, ஐந்து மடங்காகப் பெருகுகிறது. இதைப்போலவே சாம்பல்சத்து, மணிச்சத்து போன்றவையும் கூடுதலாகக் கிடைக்கின்றன. இது தவிர மண்புழுவின் வயிற்றுக்குள் பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சுரப்புகள் சுரக்கின்றன. எனவே, நுண்ணுயிர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு மண்புழு உதவுகிறது.
பல்வேறு பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் மண்புழு வெளியிடுகிறது. எனவே, சத்துப் பொருட்களைப் பன்மடங்காக்கி செடி கொடி மரங்களுக்கு அளிக்கும் தொழிற்சாலையாக, ஒவ்வொரு மண்புழுவும் இயங்குகிறது. உப்பு உரம் போட்டுப் போட்டு ஒன்றுக்கும் பயனில்லாமல், விளைச்சல் கிடைக்காமல் வாழ்க்கையை இழந்த உழவர்கள், இனிக் கவலையில்லாமல் மண்புழு உரத்தை நம்பி வெற்றி பெறலாம்.
ஒரு சதுர அடியில் ஐந்து மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் ஏறத்தாழ இரண்டு லட்சம் மண்புழுக்கள் இருக்க வேண்டும். இவை இரவும் பகலும் மண்ணை உழுதுகொண்டே இருக்கும். மண்ணைக் கிளறிக்கொண்டே இருக்கும். இவை மிகவும் தூய்மையாக இருக்க விரும்பும். எனவே, தனது கழிவை இருப்பிடத்தில் வைக்காமல், மண்ணுக்கு மேலே கொண்டுவந்து விட்டுச் செல்கின்றன. இதனால் மண்ணில் மேல் நாங்கூழ் கட்டிகள் கொத்துக் கொத்தாக இருக்கும். இந்த மண்புழுக்களின் முட்டைகள் தனித்தனியாவை அல்ல. அவை கூட்டு முட்டைகளாகக் காணப்படும். மண்புழுக்கள் முட்டையில் இருந்து புழுக்களாக வெளிவருகின்றன.
மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நிலத்தை வளப்படுத்தும் திறன் பெற்றவை. இந்த நுண்ணிய உயிர்கள் பூச்சிகொல்லிகளாலும் உப்பு உரங்களாலும் மடிந்துபோய்விட்டன. இதனால் மண்ணில் உயிரோட்டம் இல்லை. மட்கு உருவாவது இல்லை. இதனால் மண் இறுகிவிட்டது. எனவே, மண்ணில் வளம் இல்லாததால் விளைச்சல் சரிகிறது. இழந்த வளத்தை மீட்க உதவுவது மண்புழு உரம். இது இயற்கையானது, தீங்கற்றது, எளிதில் உருவாக்கக் கூடியது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com