த
மிழகத்தில் பனை மரம் குறைந்து வருவதற்குக் காரணம் பனையோடு பாரம்பரியமாக இருந்த உறவுக் கண்ணி அறுந்ததுதான். பனைத் தொழிலாளர்களை மக்கள் பேணிய காலம் போய், அரசும் கைவிட்டுவிட்ட சூழலில் பனைத் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. பனைமரங்கள் ஏறுவார் இல்லாததாலும், நெகிழிப் பொருட்களின் வரவாலும், பனை சார்ந்த பயன்பாடு அருகி வருவது நிதர்சனம். பனை மரங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடும் ஓர் அவலச் சூழலில் இருந்து தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பனை ஓலைகளிலிருந்து வீசப்படும் தென்றல், இன்று ஏ.சி. ஆகிப்போனதன் விளைவாகப் பனை மரங்களிலிருந்து பெற்ற தென்றலைக் குறித்து எண்ணும் நிதானமும் இல்லாமல் போய்விட்டது.
இன்றைக்கு பனை விதைப்பு தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக வடிவம் பெறுகிறது. பனை விதை நடவு குறித்து ஆய்வுகள் இருந்தாலும், பாரம்பரியமாக விதைகள் நடப்படும் முறைகளைப் புரிந்துகொண்டால் போதும். பொதுவாக, பனை விதை நடுவது பனங்கிழங்கு அறுவடை செய்வதற்காகவே. அவ்விதம் விதைப்பவர்கள் சுமார் இரண்டடிக்கு மண்ணைக் குவித்து அதன் மேல் பனங்கொட்டைகளைக் கிடைமட்டமாகப் போட்டு, பேருக்காக இவற்றின் மேல் மண்ணைத் தூவி விடுவார்கள். இந்த விதைகளுக்கு எப்போதும் ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பதற்காக நீர் தெளித்து, அதன் மேல் முட்கள், ஓலைகளை வெட்டிப்போட்டு நிழல் அமைத்துக் கொடுப்பார்கள்.
இந்த முறையில் கவனிக்கத்தக்க சில குறிப்புகள் உண்டு. விதைகள் முளைப்பதற்கு குறிப்பிட்ட முறையில் விதைகள் ஊன்றப்பட வேண்டும் என்று விதி எதுவும் கிடையாது. ‘எப்படி பொரட்டிப் போட்டாலும், அது குருக்கும்’ என்றே ஒரு பெரியவர் சொன்னார். காட்டுப் பகுதியில் உறுதியான நிலங்களைத் துளைத்துக்கொண்டு அம்புகள் செல்லும் வீச்சோடு பனங்கிழங்குகள் வேர்பிடித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
விதைத்த இடங்களைச் சுற்றி முள் இடுவதற்கு முக்கியக் காரணம் உண்டு. பனம்பழங்களின் வாசனை நாய்களைச் சுண்டி இழுக்கும். நரி கடித்துச் செல்லும் பனம்பழங்கள் குறித்த கதைகளும் உண்டு. இவற்றால் எவ்விதத்திலும் விதைகள் சிதறிவிடக்கூடாதே என்பதே மேற்கண்ட பாதுகாப்புக்குக் காரணமாக இருக்கும்.
பனை விதைகளின் அமைப்பு அபாரமானது. இலகுவில் உடைத்துவிட முடியாத கெட்டியான ஓட்டுக்குள் விதை இருக்கும். என்றாலும் அதைச் சுற்றி மென்மையான நார் சூழப்பட்ட வழுவழுப்பான பகுதியும், அவற்றுக்குத் தோல் உறை அமைக்கப்பட்டது போன்ற மேல்பகுதியும் இருக்கும்.
இந்த அமைப்பே விதை முளைக்க ஏற்றது என்றாலும் முளைத்த பின் வரும் பருவமழை இவற்றுக்கு வரப்பிரசாதம். நாய், நரி, ஆடு, மாடு, கரடி, குரங்குகள் என விதைப் பரப்பலுக்குப் பல்வேறு நண்பர்களும் காரணமாக உள்ளனர்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com