உயிர் மூச்சு

இரவாடிக்கு இரக்கம் காட்டும் பெண்!

எல்.ரேணுகா தேவி

ரங்கள் அழிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும் பிரம்மாண்ட பங்களாக்களாகவும் மாறி வரும் நிலையில், ‘வவ்வால்கள் எங்கே இருக்கும்?’ என்று கேட்டால், ‘கேர் ஆஃப் சாந்தாபென்’ என்று சொல்லலாம்!

பொதுவாக, பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கிளி, புறா போன்ற பறவைகளைத்தான் வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால், உருவத்தில் சிறியதாகவும் கூரிய பற்களுடனும், வழுவழுப்பான தேகத்தையும் உடைய சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட வவ்வால்களைத் தன்னுடைய வீட்டில் வளர்த்து வருகிறார் குஜராத்தில் ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் 71 வயதான சாந்தாபென் பிரஜாபதி.

இரவில் மட்டும் உணவைத் தேடும் உயிரினமான வவ்வால்கள், தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாலே அனைவரும் அஞ்சி ஓடுவார்கள். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வவ்வால்களை வீட்டில் வளர்த்து வருகிறார் இவர்.

“என்னுடைய கணவர் இறந்த பிறகு நான் மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வீட்டில் ஒரே ஒரு வவ்வால்தான் இருந்தது. அப்போதே அதை விரட்ட முயன்றேன். பின்பு அப்படிச் செய்வது பாவமாக இருந்த காரணத்தால், அதுவும் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.

பின்னாளில் வவ்வால்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது அவற்றின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. என்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள மற்ற வீடுகள் எல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டன. ஆனால், என்னுடைய வீட்டில் மட்டும் மரச்சாரங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த வவ்வால்கள் வேறு எங்கும் செல்லாமல் என்னுடைய வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ளன” என்கிறார்.

வவ்வால்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் சாந்தாபென், அவருடைய வீட்டில் உள்ள இரண்டு அறைகளையும் வவ்வால்களுக்குக் கொடுத்துவிட்டு சமையலறைக்கு அருகே உள்ள சிறு இடத்தில் படுத்துக்கொள்கிறார். அவரது வீட்டில் இருந்து வரும் வவ்வால்களின் ‘கீச்.. கீச்..’ என்ற சத்தம், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாகப் பலர் அவரது வீட்டை தினம் பார்வையிட்டுச் செல்கிறார்கள். வவ்வால்களுடன் அச்சமின்றி வசித்து வருவதால் சாந்தாபென்னை கிராம மக்கள் ‘வவ்வால் பெண்’ என்றே அழைக்கிறார்கள்.

“வவ்வால்கள் வீட்டில் இருப்பதால் எனக்கு நோய் உண்டாகும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால், பல வருடங்களாக என்னுடன் வவ்வால்களும் இருப்பதால், அவை என் குடும்ப உறுப்பினர்கள்போல் ஆகிவிட்டன. வவ்வால்களின் கழிவால் வீடு அசுத்தமாவது உண்மைதான். அதற்காகத் தினசரி வீட்டைச் சுத்தம் செய்தும் துடைத்தும் வருகிறேன். நானும் அவற்றை விரட்டிவிட்டால் அந்த சின்னஞ்சிறு உயிரினங்கள் எங்கே போகும்? வவ்வால்கள் எப்படி என் வீட்டுக்குள் வந்தனவோ, அப்படியே ஒருநாள் அவை தானாகச் சென்றுவிடும். அதுவரை அவை இங்கே இருந்துவிட்டுப் போகட்டும்” என்கிறார் அவர்.

வவ்வால்களின் ‘சமர்த்து’ பென்..!

SCROLL FOR NEXT