நீர்க்காகங்கள் (Cormorant), இந்தியாவில் தென்படும் உள்நாட்டுப் பறவை வகைகளில் ஒன்று. கறுப்பாக வாத்து அளவுள்ள பறவை. நாடெங்கும் உள்ள நீர்நிலைகளில் இவற்றைப் பார்க்கலாம். சென்னை பள்ளிக்கரணை, வேடந்தாங்கல், ராஜஸ்தான் பரத்பூர் சரணாலயங்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும்.
வடஇந்தியாவில் மழைக்குப் பிறகு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இவை இனப்பெருக்கம் செய்யும். தென்னிந்தியாவில் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. மரத்தில் குழுவாகக் கூடும் கட்டும்.
தனியாக மட்டுமில்லாமல் குழுவாகவும் நீரில் மூழ்கியும் மீன் வேட்டையாடும். நீர் காகங்களின் கால் தட்டையாகவும் அகலமாகவும் நீந்துவதற்கு வசதியாக அமைந்திருக்கும். இப்பறவை நீரில் மூழ்கி நீந்தும், இரை தேடும்.
இவற்றின் இறக்கைகளில் நீர் ஒட்டாத தன்மை கிடையாது. அதனால் கரையில் உட்கார்ந்து இறக்கையை காய வைத்துக்கொண்டிருப்பதை சாதாரணமாகப் பார்க்கலாம்.
பல நீர்ப்பறவைகளின் அடிப்படை உணவு மீன். நீரிலேயே இருந்தாலும் நீர்ப்பறவையாக இருந்தாலும் மீன் பிடிப்பது கஷ்டம். அதற்குக் காரணம் மீன் பிடிப்பதில் உள்ள போட்டிதான்.
நீருக்கு அடியில் மீன் பிடிப்பதில் மிகப் பெரிய போட்டி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், நீர்ப்பறவைகள் மீனைப் பிடித்து மேலே வந்த பிறகு போட்டி அதிகரித்துவிடும்.
டெல்லி ஓக்லா பறவை சரணாலயத்தில் மீன் யாருக்கு என்பதில் பாம்புத்தாரா, நீர்க்காகம் இடையே சண்டை நடைபெற்றதை பார்த்திருக்கிறேன். நீர்காகத்தைவிட பெரிய பறவைகளான கடல் காகங்கள் இரையை தட்டிச் செல்வதில் திறமை பெற்றவை.
ஒரு முறை இது போன்ற போட்டியில் நீர்க்காகம், அதன் தலைக்கு மேல் பறந்துகொண்டிருந்த கடல்காகம் என இரண்டுக்குமே மீன் கிடைக்காமல் போனதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இப்படிப்பட்ட போட்டியில் நீர்க்காகங்கள் சில நேரம் தாங்கள் பிடித்த மீன்களை தக்கவைத்துக்கொள்ளும். சில நேரம் இரை தவறியும் போகலாம். இதுபோன்ற காட்சிகள் பலவற்றை நான் நேரில் பார்த்திருக்கிறேன், படமும் எடுத்திருக்கிறேன்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com