சு
ற்றுச்சூழல் பற்றி எழுத நல்ல செய்தி ஒன்றும் தென்படுவது இல்லையே என்று அலுத்துக்கொண்டிருக்கும்போது, மாசு சார்ந்த கொள்ளை நோய்கள் ஒழிக்கப்பட்டிருப்பது நினைவில்பட்டது. எலி மூலம் பரவும் பிளேக் நோய், 19 - 20-ம் நூற்றாண்டுகளில் நாட்டின் பல இடங்களில் பரவி ஆயிரக்கணக்கில் மக்களின் உயிரை வாரிச்சுருட்டிக்கொண்டு போயிற்று. நாற்பதுகளில் நம் நாட்டில் இறந்தவர்களில் 2.11 சதவீதத்தினர் பிளேக்கால் மடிந்தவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அக்குளில் கட்டிகளுடன் தோன்றும் இந்நோயைத் தமிழில், அரையாப்பு கட்டி நோய் என்றார்கள். பாக்டீரியா ஒன்றால் பரவும் இந்தக் கொள்ளை நோய்க்கு அன்று முறிவு மருந்துகள் கிடையாது. கிராமப்புறத்தில் ‘கொள்ளைல போக’ என்று திட்டுவதை நான் கேட்டதுண்டு. இதுபோன்ற நோய்களை மனத்தில் வைத்தே அந்த வசவு உருவாகியிருக்க வேண்டும்.
நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது – 1946-ல் என்று நினைக்கிறேன் - தமிழ்நாட்டின் பல இடங்களில் பிளேக் பரவியது. எங்கள் ஊரான தாராபுரத்திலிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஊரை விட்டு வெளியே தங்கள் வயல்களிலும் புறம்போக்கு நிலத்திலும் குடிசை போட்டுக்கொண்டு தங்க ஆரம்பித்தனர். சில மளிகைக் கடைகளும் இடம்பெயர்ந்தன. அதில் எனக்கு நினைவிலிருப்பது நாங்கள், மாத சாமான்கள் வாங்கும் அமீர்முல்க் சாயபு கடை.
பள்ளிக்குப் போகும் முன், அம்மா எங்கள் கால்களில் DDT பவுடரைத் தேய்த்து அனுப்புவார்கள். காலில் வெள்ளை சாக்ஸ் போட்டது போலிருக்கும். அவ்வப்போது எலிகளைக் கொல்ல, மருந்து புகையடிக்கும் ஆட்கள் அதற்கான சிலிண்டருடன் ஊரில் சுற்றி வருவதைப் பார்க்கலாம். நகராட்சிப் பணியாளர்களான அவர்கள், தலித்துகள் வாழும் சேரிக்குள் செல்லத் தயக்கம் காட்டியதால் பிளேக்கால் இறந்தவர்களில் தலித்துகள் அதிகம் என்று தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ‘தி ரிப்போர்ட் ஆஃப் தி இந்தியன் பிளேக் கமிஷன்’ (The Report of the Indian Plague Commission) என்ற அறிக்கையில் படித்தேன்.
நான் 1994-ல் குஜராத்தில் அஞ்சல் துறையில் பணியாற்றியபோது, இரண்டாம் முறையாக இந்நோயை எதிர்கொண்டேன். அந்த ஆண்டு செப்டம்பரில் சூரத் நகரில் இந்த நோய் தோன்றி சிலர் இறந்தனர். நகரைப் பீதி பற்றிக்கொண்டது. நான்காவது நாள் எங்கள் ஊழியர்களுக்கு மருந்துகளை (டெட்ராசைக்ளின்) எடுத்துக்கொண்டு, துறை மருத்துவர்கள் மூவருடன் சூரத்துக்கு நான் சென்றேன். நகரம் பேயடித்தது போலிருந்தது. எல்லாக் கடைகளும் கல்விக்கூடங்களும் மூடப்பட்டிருந்தன. தெருக்களில் ஆள் நடமாட்டமேயில்லை.
ரயில்வே துறையும் அஞ்சல் துறையும் அரசு மருத்துவமனைகளும் மட்டும் முழு வீச்சில் இயங்கிக்கொண்டிருந்தன. தனியார் மருத்துவர்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்தார்கள். ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் சூரத்தை விட்டு வெளியேறினர் என்று ஒரு கணிப்பு கூறியது. நான் பார்த்த நகரங்களிலேயே சூரத், மாசு நிறைந்த ஒன்றாகத் தெரிந்தது. மலைபோல குப்பை நகரின் வெளிப்பகுதியில் கிடந்தது. தபதி நதிக்கரையில் உள்ள சேரிகளில் லட்சக்கணக்கானோர் வசித்தனர்.
நான் மறுபடியும் சூரத் சென்றிருந்தபோது, அந்த நகர் அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தது. கழிவு நிறைந்து மாசுபட்டு முன்பு நாற்றமடித்துக்கொண்டிருந்த அந்த நகரம், அங்கு புதிதாக மாநகராட்சி கமிஷனராகப் பணிக்குச் சேர்ந்திருந்த சூரியதேவார ராமச்சந்திர ராவ் என்பவரின் தலைமையில் ஆறே மாதத்தில் முற்றிலும் மறுஉரு பெற்று, பன்னாட்டுக் கவனத்தையும் ஈர்த்தது.
ஐம்பத்திரண்டு பேர் இறந்த பின்னர், ஒரு வாரம் கழித்து கொள்ளை நோய் ஆபத்து நீங்கிய பின், சூரத்தைப் பிடித்து ஆட்டியது பிளேக்தானா என்ற கேள்வி எழுந்து பெருத்த விவாதம் உருவானது. அது பற்றி விசாரிக்க மத்திய அரசு ஒரு கமிட்டியை நியமித்தது. அது எலியால் வரும் கொடுமையான பிளேக் அல்ல, ஆனால் வேறு ஒரு தொற்று நோய் என்றே மருத்துவர்கள் இன்றும் நம்புகிறார்கள்.
(பாடும் குயிலும் ஆடும் மயிலும்- மே 26 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com