ப
னை மரம் தமிழர்களின் மரம் எனச் சொல்லப்படும் கூற்று உண்மையாகும் ஒரு தருணம் உண்டு. அது, பனை மரம் சார்ந்த சொற்கள், படிமங்கள், நாட்டார் வழக்காற்றியல், பழமொழிகள் என மொழி சார்ந்த பல நுட்பங்களில் பனைக்கும் தமிழுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
தமிழின் தொன்மைக்கு ஓலைகளே சாட்சி. நமது மொழி வாழ, ஓலைகளைக் கொடுத்து உதவியது பனை மரமே. ஓலைகள் கோலோச்சிய காலத்தில், உலகில் வேறு எங்கும் இத்தனை எளிமையான எழுதும் நுட்பம் இருந்ததில்லை. இந்த மொழி வடிவம் தமிழரின் பயன்பாட்டு அறிதலில் இருந்து வருகிறது.
ஓலை என்பது பொதுப்பெயராக இருந்தாலும், அது முளைத்து எழும் பகுதியை ‘குருத்தோலை’ என்பதும், பசுமையாகக் காணப்படும் ஓலைகளை ‘சாரோலை’ என்பதும், காய்ந்து போன ஓலைகளை ‘காவோலை’ என்பதும் ஒரு அறிதல்தான்.
கிறிஸ்தவத் திருமறையில் இயேசு எருசலேம் நோக்கிப் பயணிப்பதை விளக்கும் ஒரு பகுதி உண்டு. ‘குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு’ (மத்தேயு 12:13) என அந்தப் பதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இதே பகுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபொழுது ‘பாம் பிராஞ்ச்’ (Palm Branch) என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட பனையின் கிளை என்றே மேற்குலகில் ஒருவர் இதைப் புரிந்துகொள்ள இயலும்.
இந்த நுட்பமான வித்தியாசம் எதை முன்னிறுத்துகிறது? நமது கலாச்சாரத்திலும் மொழியிலும் பனை ஆற்றிய பெரும் பங்கை இது தெளிவுபடுத்துகிறது. எல்லா ஓலைகளையும் அரசனின் முன்பு பிடிக்க இயலாது. தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்க குருத்தோலைகளே ஏற்றவை. விழாக்களில் இன்றும் பனையோலைத் தோரணம்தான் அலங்காரம். இப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விரிவடையும் தன்மை பனையில் காணப்படுகிறது. அதற்கு அந்த மரமே ஒரு படிமமாக எழுந்து நிற்பதைக் காணலாம்.
ஏன் குருத்தோலை? குருத்தோலை என்பது புது வாழ்வின் அடையாளம் எனப் பொருள் கொள்ளப்பட்டது. மிக இளமையான ஓலை என்பதால், அதற்கு நீண்ட வாழ்வு உண்டு எனப் புரிந்துகொள்ளப்பட்டது. புதிய ஓலைக்கு இருக்கும் நறுமணம் யாரையும் கிறங்கடிக்கும் தன்மைகொண்டது. நறுமணம் என்பது கொண்டாட்டத்தின் அங்கமல்லவா? குருத்து தன்னுள் ஒரு தந்த நிறத்தைக் கொண்டிருக்கும். யானை கட்டி போரடித்த சமூகத்தில் தந்த நிறம் கொண்ட ஓலைகள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும் எனப் புரிந்துகொள்ளலாம். மேலும் குருத்தோலைக்கு ஒரு மென்மை உண்டு. நெகிழும் தன்மை உண்டு.
மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலை கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்ட மாந்தர்போல், அவை கூப்பியபடி இருக்கின்றன. அவற்றின் நுனிகள் வானத்தையே நோக்கியபடி நிமிர்ந்து நிற்கின்றன. எதிர்காலம் உண்டு என அவை உறுதி கூறுகின்றன. இவை யாவும் ஓலையின் வயதையொட்டி, அதன் பருவத்தைச் சார்ந்து நெடிய அவதானிப்பில் எழுந்த மொழி அறிவின்றி வேறென்ன?
ஓலையின் ஒரு பகுதியை ‘இலக்கு’ எனக் குமரி மாவட்டத்தில் கூறுவார்கள். ‘இலக்கில் எழுதப்பட்டு இயங்கியதுதான் இலக்கியம்’ என்று குமரி அனந்தன் கூறுவார். இலக்குகளைச் சீராக வெட்டி ஒரு கட்டாக மாற்றிவிட்டால் அது நூல். அந்த நூல் வடிவத்தை ‘ஏடு’ என்பார்கள். ஏடு என்பது சமய நூல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஓலைகளைக் கிழித்து அதைப் பயன்பாட்டுக்கு எடுக்கும் அளவை வைத்தும் ‘முறி’, ‘நறுக்கு’ எனப் பெயர்கள் மாறின.
இவ்விதமாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழ் மொழியில் மட்டும் பனை சார்ந்த ஆயிரக்கணக்கான சொற்களை நாம் சேகரிக்க இயலும். இச்சொற்களை நாம் இழக்கும்போது, நமது மொழியின் வீரியம் குறைகிறது. நாம் தொகுப்பதற்கு முன்பே பல வட்டார வழக்குகள் காணாமல் போய்விடுகின்றன.
உலகம் குருதியில் எழுதிக்கொண்டிருந்தபோது நாம் குருத்தில் எழுதியவர்கள் என்பதே நமக்குப் பெருமை. அப்பெருமை பனை மரத்தையே நம்பி வாழ்ந்த நம் முன்னோர்களையே சாரும்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com