உயிர் மூச்சு

மாங்கனி நகரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி?

செந்தமிழ் பாண்டியன்

சே

லத்தில் இருந்து சென்னைக்கு கிரீன் காரிடார் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை எட்டு வழிப் பாதையாக, 900 அடி அகலத்தில், பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை மூலம் சென்னை - சேலத்துக்கு இடையிலான தொலைவு தற்போதைய தொலைவைவிட அறுபது கிலோ மீட்டர் குறையும். இச்சாலையில் பயணித்தால் தற்போதைய பயண நேரத்தில் கணிசமான தூரம் குறையும் என்கிறார்கள். இதைக் கேட்பதற்குப் புதுமையாகவும் நவீன வசதியாகவும் தோன்றலாம்.

ஆனால், ஏற்கெனவே சாலைத் தொடர்பு வசதி இருக்கும் நிலையில், இந்தப் புதிய சாலை அவசியமா? எதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய சாலை? சமீபத்தில்தான் சேலத்துக்கு விமான சேவையும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சேலத்துக்கும் சென்னைக்கும் இடையே எதற்கு இன்னொரு நெடுஞ்சாலை? இப்படி பதில் இல்லா கேள்விகள் நீண்டன.

சென்னை - சேலம் இடையில் அமைக்கப்பட உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை 179ஏ, 179பி எனப்படுகிறது. 274 கி.மீ. நீளம் கொண்டது இந்தச் சாலை. இதில் 250 கி.மீ. பசுமையான வயல்கள் வழியாகச் செல்லப் போகிறது. ஏற்கெனவே உள்ள 24.3 கி.மீ. சாலையும் இத்துடன் சேர்க்கப்படும். இது தொடர்பாக 'ஃபீட்பேக் இன்ஃப்ராஸ்டிரக்சர்' என்ற நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை வாரியத்துக்கு அளித்த அறிக்கையின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீ., தர்மபுரி மாவட்டத்தில் 53 கி.மீ., சேலம் மாவட்டத்தில் 38.3 கி.மீ. என புதிய சாலை அமைய உள்ளது.

பசுமைச் சாலை என்ற நகைமுரணான பெயரைக் கொண்டுள்ள இந்தச் சாலை, 22 கி.மீ. பாதுகாக்கப்பட்ட காடுகள், குடியிருப்புகள், வேளாண் நிலங்கள் வழியாகவும் செல்லும். புதிய சாலை அமைப்பதற்காக மேற்கண்ட மாவட்டங்களில் 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள நிலப்பகுதிகளில் வரகம்பாடியில் உள்ள 150 ஆண்டு மாமரத்தைக் கொண்டுள்ள சேகர் என்பவரின் மாந்தோப்பும் அடங்கும். ஆயிரம் கிலோ மாம்பழங்களை இங்கிலாந்துக்கு அனுப்பிய மாமரமும் இந்தத் தோப்பில் உள்ளது. வரகம்பாடியின் சேலம் குண்டு (அல்ஃபோன்சா), நடுச்சாலை ரகங்கள் ஒட்டுச்செடி வழியாக நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளன. நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்கள் இவ்வளவு மாம்பழங்களை எப்படித் தருகின்றன என்று அறிவதற்காக தோட்டக்கலை மாணவர்கள் வந்து செல்லும் இடமாக இப்பகுதி உள்ளது.

ஜருகுமலை, வெத்தமலைக்கு இடையில் சேலத்தின் தொன்மையான மாம்பழம் விளையும் பகுதியான வரகம்பாடி பகுதி வழியே புதிய சாலை அமைய உள்ளது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாம்பழ விரும்பிகள் இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக இங்கு வந்து சுவையான மாம்பழங்களை வாங்கிச் செல்கின்றனர் என்று வரகம்பாடி மாம்பழ உற்பத்தியாளர்கள் மகிழ்கின்றனர். இந்நிலையில் அவர்களுடைய பிழைப்புக்கே வேட்டு வைக்கும் வகையில் இத்திட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள குப்பனூர், நிலவாரப்பட்டி கிராமங்களில் புதிய நெடுஞ்சாலைக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஓர் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்பணியைக் கூடுதலாக கவனித்து வரும் அலுவலர் ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார். அமைக்கப்படும் சாலை, கிராமங்கள், நிலத்தின் சர்வே எண்கள் ஆகியவற்றை வாட்ஸ்அப் வழியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை வாரியம் விவசாயிகளுக்குத் தெரிவித்துள்ளது. இந்த சர்வே எண்கள் ஏற்காடு வட்டத்தில் இரண்டு கிராமங்களிலும் வாழப்பாடியில் ஏழு கிராமங்களிலும் சேலத்தில் 13 கிராமங்களிலும் அமைந்துள்ளன.

தொன்மையான மாம்பழப் பகுதிகளான ஸ்கந்தாசரம், வாழடி மாந்தோப்பு, போத்துக்குட்டை, எருமம்பாளையம், பனங்காடு, தேன்மலை, உடையபட்டி, வரகம்பாடி, வெள்ளாளகுண்டம், விலாம்பட்டி, கே. பள்ளபட்டி, குப்பனூர், ஆச்சாங்கு குட்டப்பட்டி ஆகிய ஊர்களுடன், மாந்தோப்பு அதிகமுள்ள இதர கிராமங்களிலும் நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படும் திட்டம் உள்ளது. மாம்பழத் தோட்டப் பகுதிகள் அன்றி பாதுகாக்கப்பட்ட காடுகள், எளிய மக்கள், மலைவாழ் மக்களின் சிறு நிலங்களும்கூட இதில் அடங்கும். கையகப்படுத்தப்படும் நிலங்களை அளவையாளர்கள் அடையாளப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து மக்கள் அரண்டு போய் உள்ளனர்.

கஞ்ச மலையில் உள்ள இரும்புத் தாதுவைக் குறிவைத்துள்ள சுரங்க வணிக நிறுவனத்துக்குத்தான் புதிய சாலையால் பயனே ஒழிய, தமிழ்நாட்டுக்கோ சேலத்துக்கோ அல்ல என்ற கண்டனக் குரல்களும் கேட்க ஆரம்பித்துள்ளன.

இந்த பசுமை வழி இணைப்பு, கஞ்சமலையின் அடிவாரத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி என்னும் கிராமத்தில் ஆரம்பித்து சென்னையின் எண்ணூர் துறைமுகம்வரை நீள்கிறது. இரும்புத் தாதுவின் தரம் குறைவாக இருந்ததால் இங்கு மேற்கொள்ளப்பட்ட சுரங்கப் பணிகளை ஆங்கிலேயர்கள் கைவிட்டனர் என்றும் குறைந்த காலத்துக்கே கிடைக்கும் இரும்புத் தாதுவுக்காக நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வளங்களை ஏன் அழிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சுபவர்களின் கூடாரமாக இருந்த இந்தப் பகுதியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாமரம் வளர்க்கப்பட ஆரம்பித்தது. இதன் காரணமாக சாராயம் காய்ச்சியவர்கள் மாமரம் வளர்ப்பவர்களாக மாறினர். சில தலைமுறைகளுக்கு முன்னர் குற்றச் செயல்களுக்குத் தூண்டப்பட்ட சூழல் புதிய சாலையால் மீண்டும் வந்துவிடுமோ என்றும் சிலர் அஞ்சுகின்றனர்.

வளர்ச்சி என்ற பெயரால் இதுபோல் சாலைகள் அமைப்பதற்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் சாலைகளை மேம்படுத்தலாம், விரிவுபடுத்தலாம். அதனால் கூடுதலாக விளை நிலங்களைக் கையகப்படுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதிக மக்கள்தொகையும் குறைந்த நிலப்பரப்பும் உள்ள நம் நாட்டின் வேளாண் வளத்தை அழித்துவிட்டு இயற்கை வளத்துக்கு என்ன செய்யப் போகிறோம்? மக்கள் எதைக்கொண்டு வாழ்வார்கள் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: senthamilkannu@gmail.com

SCROLL FOR NEXT