பனை மரத்தையும் பனை ஏறுபவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. பனை ஏறுபவர்களை, படித்த சமூகம் தாழ்வாகப் பார்த்ததும், சாதி சார்ந்து அவர்கள் ஒடுக்கப்பட்டதும் வரலாறு. இன்றைக்குத் தமிழகத்தைப் பொறுத்தவரை, பனை ஏறுபவர்கள்தாம் ஆதி சூழலியலாளர்கள். பனை ஏறுபவர் பனை மரத்தைக் கட்டியணைத்து ஏறுகிறார். ஒரு நாளைக்கு அறுபது மரங்கள்வரை ஏறி இறங்கும் இவர்கள், சூழலியலை நேசித்தவர்களின் பட்டியலில் வராமல் இருப்பது ஆச்சரியம்தான்.
தன்னுடைய தளவாடங்களைக் கருத்தாகக் கவனிக்கும் பாங்கும் பனையேறிகளிடம் உண்டு. தான் ஏறும் நான்கு மரத்துக்கு ஒரு முறையாவது தனது பாளை அருவாளை அவர் கூர்தீட்டிவிடுவார். கூர்மையான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு மரம் ஏறுவதால், தவறி எவர் மீதும் தன் ஆயுதம் விழுந்துவிடாதபடி இருக்க அழகிய அருவா பெட்டியொன்றை இடுப்பில் கட்டியிருப்பார்.
அரிவாள் என்பது மருவி, அருவா என வழங்கப்படலாயிற்று. அரிவாள் வைக்கும் பெட்டி என்பதால், ‘அருவா பெட்டி’ என காரணப் பெயரானது. பெயர் மட்டும்தான் அருவா பெட்டி. அது பனை ஏறுபவர்கள் பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கான பெட்டிதான்.
அருவா பெட்டியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த பனையேறிகளை நாம் குறைத்தே மதிப்பிட்டு வந்திருக்கிறோம். பாதுகாப்புக் கருவிகளை / உறைகளை அணிந்தே ஆலைகள், கட்டுமானப் பணிகள் போன்ற வேலைகளுக்கு ஒரு பணியாளர் இன்றைக்குச் செல்ல முடியும். ஆனால், எந்தவித வசதியும் இல்லாத காலத்தில், ஆபத்து விளைவிக்கக்கூடிய கூர்மையான ஆயுதங்களை ஏனோ தானோவென்று தன்னுடைய பணிக்கெனப் பயன்படுத்தாமல், உரிய உறைகளுடன் முறைப்படி பயன்படுத்திய பனையேறிகள், சிறந்த முன்னெச்சரிக்கை உணர்வுள்ளவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்.
தென்னை மரத்தின் மூன்று தென்னங் ‘கொதும்பு’களை (தேங்காய்க் குலையின் மேல் இருக்கும் அகன்ற பாளைப் பகுதி) எடுத்து, தண்ணீரில் ஒருநாள் ஊறவைத்து, பனை நாரைக் கொண்டு நேர்த்தியாகக் கட்டிச் செய்யப்படுவதுதான் அருவா பெட்டி.
அருவா பெட்டியின் நடுவில் இரண்டு தென்னங் கொதும்பைகளைக்கொண்டு மூன்று பாகங்களாகப் பிரித்திருப்பார்கள். ஒரு பக்கம் பாளை அருவா வைப்பதற்கும், நடுவில் மட்டையருவாள் வைப்பதற்கும் (இந்த அரிவாள்களைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்), மற்றொரு பகுதியில் சுண்ணாப் பெட்டி வைப்பதற்கான தகடு போன்ற கொடும்பு பயன்படும். அரிவாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்த வெள்ளைக்கல் பொடியைப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அதை வைக்கப் பயன்படும் மூங்கில் குழாயையும் இதில் வைத்துக்கொள்வார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கைவரை இதே முறை இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
தென்னை, பாக்கு போன்றவற்றின் பயன்பாடுகளை உள்வாங்கிச் செய்யப்பட்ட அருமையான வடிவமைப்பு இது. ஒரு தொழிற் கருவியின் பயன்பாட்டைப் பொறுத்தவரை அது நீடித்து உழைக்க வேண்டும், எடுத்துச் செல்வதற்கு இலகுவான எடையுடன் இருக்க வேண்டும், தொழில் செய்ய இடைஞ்சல் கொடுக்காத வடிவமைப்புடன் இருக்க வேண்டும், உடையின் / உடலின் ஒரு பகுதியாக மாறிவிட வேண்டும், முக்கியமாகப் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அருவா பெட்டி தன்னிகரில்லா ஒரு வடிவமைப்பு எனலாம்.
கூர்மையான அரிவாளின் ‘பிடி’ மட்டுமே வெளியே தெரியும் வகையில், முக்கால் அடி உயரம் கொண்ட அருவா பெட்டி, ஒரு உடை வாளைப் போல அமைந்திருக்கும். அருவாப் பெட்டியின் மேற்பகுதி சற்று அகன்றும், கீழ்ப்பகுதி சற்று குறுகியும் காணப்படுவது அழகுணர்வுக்காக மட்டுமல்ல. அருவா நழுவிவிடாமல் இருக்கப் பொறியியல் கற்காத பனையேறிகளின் உன்னதமான வடிவமைப்பு அது. சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து உழைக்கும் தன்மை கொண்டது இந்த அருவா பெட்டி.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com