பிழைப்பின்பொருட்டு அன்றாடம் மரணத்தை எதிர்கொள்ளும் கடல் பழங்குடி மனிதர்களுக்குக் கடல் மரணம் பெரிய செய்தியல்ல. ஆனால், எதிர்பாராமல் கடல் ரவுத்திரம் கொண்டு எழுந்து, கொத்துக் கொத்தாக மனிதர்களை விழுங்கிவிடுவது பெருந்துயரம் விளைவிப்பது.
2017 நவம்பர் 21-ல் தாய்லாந்து வளைகுடாவில் உருவான காற்றழுத்த வீழ்ச்சிக்கு ‘ஒக்கி’ (கண்) என்று பெயரிட்டனர். அவ்வெற்றிடம் மேற்கு நோக்கி நகர்ந்து, கன்னியாகுமரிக்குத் தெற்காகக் கடந்து, தீபகற்ப இந்தியாவின் மேற்குக் கரைக்கும் லட்சத் தீவுகளுக்கும் இடையே வடக்கு நோக்கிப் பயணித்தது. பிறகு அங்கிருந்து கிழக்காகப் பிறை வட்டமடித்து, வலுவிழந்த நிலையில் டிசம்பர் 6-ல் தெற்கு குஜராத்தின் சூரத் பகுதியில் கரையேறியது.
இந்த 16 நாள் பயணத்தில் நிலப் பகுதிகளில் ஒக்கிப் புயல் நிகழ்த்திய பெரும் சேதங்கள் ஒழிய, கடலில் குமரி முனைக்குத் தெற்காக, கொல்லம், கொச்சிப் பகுதிகளுக்கு மேற்காக என மூன்று இடங்களில் ரவுத்திர தாண்டவமாடியது. புயலில் சிக்கிய 800-க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவானது என்று அறிய வழியின்றி வேணாட்டுக் கடற்கரை துயரில் தவித்தது. பெருமரணங்களின் துயர்க்கதைகள் ஒவ்வொன்றாகக் கரை சேர்ந்துகொண்டிருந்தபோது சமவெளி மக்கள் எழுப்பிய கேள்வி, ‘புயல் வருவதை மீனவர்களால் கணிக்க முடியவில்லையா? சரியான நேரத்தில் கரை திரும்பியிருந்தால் உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருக்கலாமே?’
டிசம்பர் 2004 சுனாமிக்குப் பிறகு வேதசகாயகுமார், ஜெயமோகன் உள்ளிட்ட இலக்கியவாதிகளின் குழு, முட்டம் மீனவர்களைச் சந்தித்துப் பேசியபோது ஓர் இளைஞர், ‘சுனாமியைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை’ என்றார்.
உலகம் முழுக்க உற்பத்தியும் வாழ்க்கையும் தடம் மாறிப் போயிருக்கின்றன. இயந்திரமயம், தாராளமயம், நவீன தொழில்நுட்பமயப் போக்குகளால் இனக்குழு மரபறிவுகளும் அழிந்துகொண்டிருக்கின்றன. மீன்பிடித் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் உற்பத்திப் பெருக்கத்தை முன்வைக்கும் தொழில்முறையும் ‘துறைமுக மீன்பிடி’ப்பை நோக்கி நெய்தல் வாழ்வை நகர்த்தியுள்ளன. ஒரு கட்டுமரக்காரனும் ஆலை மீன்பிடிக் கப்பல் முதலாளியும் கடலுடன் கொள்ளும் அணுக்கம் முற்றிலும் வேறுபட்டது.
இந்தியாவின் உயர்தொழில்நுட்ப மீன்பிடி கிராமம் எனப்படும் குஜராத்தில் உள்ள விராவலில் 8 ஆயிரம் விசை மீன்பிடிப் படகுகள் அணைகின்றன. அவற்றில் வேலை செய்யும் 40 ஆயிரம் தொழிலாளிகளில் 90 சதவீதத்தினர் ஆந்திரா, ஒடிசா, பிஹாரின் சமவெளிப் பகுதிகளிலிருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள். ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி விசைப்படகுத் தொழிலாளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அசாம் கூலித் தொழிலாளிகள். இன்று கடலுக்குப் பரிச்சயமற்றவர்களும், நீச்சல் தெரியாதவர்களும்கூட ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போகலாம். ஜி.பி.எஸ், எக்கோ சவுண்டர், வயர்லெஸ் கருவிகள் பழங்குடிக் கடலோடிகளின் மரபறிவை ஏறத்தாழ அழித்துவிட்டன என்பதே யதார்த்தம். நெல் வேளாண்மையில் 73 மரபு நுட்பங்கள் இருந்தன. இன்று விவசாயிகளிடம் இந்த மரபறிவு மீந்திருக்கிறதா? எல்லாத் திணை நிலங்களிலும் மரபறிவு அழிந்துகொண்டிருக்கிறது.
பாரம்பரிய மீனவ இனக்குழுவின் இளந்தலைமுறையினர் இழந்துவிட்ட மரபுக்கூறுகளில் முக்கியமானவை: பொறுமையும் நீச்சலும் பசி பொறுத்துத் தூண்டில் வீசிப் பொறுமையாய்க் காத்திருத்தலும். பேரிடர்க் காலத்தில் நீந்தி உயிர் மீந்து கிடப்பதும்கூட மூத்த தலைமுறை மீனவர்களுக்குச் சாத்தியமாக இருந்தது.
முன்பெல்லாம் கடலில் மீன்பிடித்தல் அன்றாடத் தொழில். கடலில் வெகு தொலைவுக்குப் போகும் சாத்தியம் அப்போது இல்லை. பேரிடர்க் காலத்தில் முன்கணிப்புடன் எளிதில் கரை சேர்ந்துவிடும் சிறு தொலைவுக்குத்தான் மீனவர்கள் போனார்கள். இன்று ஆழ்கடல் விசை மீன்பிடிப் படகுகள், முக்கியமாக வேணாட்டு நெடுந்தூண்டில் விசைப் படகு மீனவர்கள், ஆயிரம் கடல் மைல் தொலைவுக்குப் பயணிக்கிறார்கள். அங்கு மரபான கணிப்பறிவு இவர்களுக்குப் போதாது.
அமெரிக்காவில் ஐந்து நாள் புயல் முன்னறிவிப்பு சாத்தியம். இந்தியாவில் 72 மணி நேர எச்சரிக்கை சாத்தியம். ஒக்கிப் புயலோ வெறும் 18 மணி நேர அவகாசமே கொடுத்தது. அந்தத் தகவலும்கூடச் சரியான நேரத்தில் அவர்களைச் சென்றடையவில்லை. புதிய தொழில்நுட்ப மீன்பிடிச் சூழலில் மரபறிவுடன் அதி உயர் தகவல் தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன.
(அடுத்த வாரம்: கடல் அபலைகள்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com