உயிர் மூச்சு

கரிசனம் கிடைக்காத கோயில் யானைகள்!

ஆர்.ஜெய்குமார்

தி

ருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் யானை சிவசுந்தர் சில வாரங்களுக்கு முன்பு இறந்தது.கேரளத்தில் சிவசுந்தரின் மரணம் கோயில் யானைகள் குறித்த புதிய சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. சிவசுந்தர் கேரளத்தின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற யானையாக இருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். முன்னதாக, 1976-ல் இறந்த குருவாயூர் கேசவனுக்கு மட்டுமே இந்தச் செல்வாக்கு இருந்தது.

சிவசுந்தர், நாற்பதாண்டுகளுக்கு முன்பு பெரும்பாவூர்-கோதமங்கலம் சாலைக்கு அருகில் வெள்ளிக்குளங்கர காட்டுப் பகுதியில் பிடிக்கப்பட்டது. கோடநாடு யானைப் பயிற்சி மையத்தில் சில காலம் பழக்கப்பட்ட பிறகு, அது விற்கப்பட்டது. தொடக்கத்தில் பூக்குடன் பிரான்சிஸ் என்பவரின் மர அறுவை மில்லில் மரம் எடுக்கும் பணியை சுந்தர் செய்துவந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய சுந்தர், 2003-ல் சுந்தர் மேனன் என்பவரால் திருவம்பாடி கோயில் பணிக்காக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. அதற்குக் காரணம், சுந்தர் போன்ற கொம்பன் யானை மிக அபூர்வம் என்பதுதான்.

திருவம்பாடி கோயிலின் திடம்பு என அழைக்கப்படும் வெள்ளி உற்சவச் சிலையைத் தூக்கிச் செல்லும் பணியை 2003-ம் முதல், தான் இறக்கும்வரை செய்துவந்தது சிவசுந்தர். திருவம்பாடி மட்டுமல்லாது ஆராட்டுப்புழ, இரிஞ்சாலக்கூட போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வந்தது. இவை மட்டுமல்ல, திருச்சூர் பூரத்தின் நாயகனாகவும் சிவசுந்தர் திகழ்ந்தது. திருச்சூர் பூரம் விழா தொடங்க இருக்கும் இந்த நேரத்தில் சிவசுந்தரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கஜகேசரி, கஜராஜா உள்ளிட்ட பல பட்டங்களை குருவாயூர் கேசவனுக்குப் பிறகு பெற்ற ஒரே யானை சிவசுந்தர்தான். அதனால் இது திருவம்பாடியின் பெருமைமிகு அடையாளமாக இருந்தது. இந்த யானையை, ‘அழகிண்ட தம்புரான்’ - அழகின் ராஜா என அழைத்துவந்தார்கள்.

சிவசுந்தர் (48) சாதுவான யானையாகக் கருதப்படுகிறது. பொதுவாக பூரத்துக்கு வரும் யானைகள் சில நேரம் மூர்க்கம் அடைவதுண்டு. மதம் இளகும் இனப்பெருக்கக் காலத்தில் வழக்கத்துக்கு மாறான கோபத்துடன் இருக்கும். ஆனால், சிவசுந்தர் ஒருமுறைகூட மூர்க்கமடைந்ததில்லை என்பதே, அதன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களின் கருத்தாக இருந்தது. மிகப் பெரிய உயிரினமான யானையை இவ்வளவு அடக்கத்துடன் காண்பதால் உருவாகும் உணர்வு இது. ஆனால், உண்மையில் அந்த யானையின் மனநிலை நாம் அறிய முடியாததே.

கவனமின்மையால் விளைந்த பாதிப்பு

யானையைப் பிடிப்பது வழக்கத்திலிருந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டுப் பிடிபட்ட யானைதான் சிவசுந்தர். அப்போது அதற்கு ஒரு வயது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட துயரம் அதன் மனத்தில் இருந்திருக்கலாம். கோயில் யானைகள் குறித்த ‘காட்ஸ் இன் ஷேக்கில்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் இயக்குநர் சங்கீதா, தாயுடனான பிரிவு, யானைகளுக்கு மன அழுத்தம் தரக்கூடியதாக மாறக்கூடும் என்கிறார். மேலும் ஒரு நாளில் பல நூறு கிலோ மீட்டர் தூரம் வலசை செல்லும் உயிரினமான யானையை மிகச் சிறிய கொட்டடிக்குள் அடைப்பதும் மன அழுத்தம் தரக்கூடியதுதான் என ரமேஷ் பேடி ‘யானை: காடுகளின் அரசன்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளத்தில் ஆறு கோயில் யானைகள் பல்வேறு நோய்களால் இறந்துள்ளன. குன்னம்குளம் சிவன், சுள்ளிப்பரம்பில் விநாயகன், வாயலசேரி கேசவன், கொடுமோன் தீபு, சந்திரிகா ஆகியவற்றின் வரிசையில் இப்போது திருவம்பாடி சிவசுந்தரும் சேர்ந்துவிட்டது.

சிவசுந்தர் இறப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘எரண்டகட்டி’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இது பொதுவாக யானைகளுக்கு வரக்கூடிய நோய்தான் என்கிறார் தனியார் யானைக் காப்பாளரான தாஜுதின். இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மீனாட்சி (49) என்னும் யானையைப் பராமரித்துவருகிறார். “பொதுவாக இந்த யானைகளுக்கு வரக்கூடிய நோய்களுள் ஒன்றுதான் இந்த எரண்டகட்டி. அதாவது உணவு சரியாகச் செரிமானம் ஆகாமல், கட்டியாக மல வாயை அடைத்துக்கொள்ளும். அதனால் மலம் வெளியேறாமல் யானை அவதிப்பட்டு, மூச்சுவிடக்கூடச் சிரமப்படும். யானை சரியாக சவைத்து உண்ணாததாலும் இது வரும். ஆனால், யானையைச் சரியாகக் கவனித்துவந்தால் முன்கூட்டியே இந்த நோயை அடையாளம் கண்டு, தக்க மருந்து கொடுத்தால் காப்பாற்றிவிடலாம். சிவசுந்தரையும் அப்படிக் கவனித்திருந்தால் இறந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் தாஜுதின். இதிலிருந்து திருவம்பாடியின் ஓமணப் புத்திரனை (செல்லப் பிள்ளை) அவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

உடல்நிலை சரியில்லாத காலத்திலும்கூடக் காசுக்காக மற்ற கோயில் விழாக்களுக்காகப் பல கிலோ மீட்டர் வெயிலில் நடந்துசென்று சிவசுந்தர் திரும்பியுள்ளது. அதுவும் சர்ச்சை ஆகியிருக்கிறது. அத்துடன் சிவசுந்தர் இறந்ததற்கான மற்றொரு காரணமாகச் சொல்லப்படுவது, அதற்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காதது. யானைகள் நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடியவை. “தண்ணீர் சரியாகக் குடிக்கவில்லையென்றாலும் எரண்டகட்டி நோய் வரக்கூடும்” என்கிறார் தாஜுதின். திருச்சூர் பூரம் போன்ற கோயில் விழாக்களில் நாள் கணக்காக யானைகள் வெயிலில் நிற்கின்றன. அவற்றின் உடலை போதிய அளவு குளிர்விப்பது அவசியம். பாகன்களின் அலட்சியத்தால் யானைகளுக்கு இது கிடைப்பதில்லை.

பூர விழாக்களில் வெயிலில் நிற்பது மட்டுமல்லாமல், மூன்று நான்கு ஆட்களையும் திடம்புவையும் சுமந்துகொண்டு யானைகள் நிற்க வேண்டியிருக்கிறது. அத்துடன் செண்டை போன்ற அதிக சப்தம் எழுப்பும் இசைக் கருவிகளின் இரைச்சல் வேறு. இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகும் யானைகளுக்கு மன அமைதி கிடைப்பதில்லை. கனத்த இரும்புச் சங்கிலியால் உலவ முடியாத வகையில் கட்டிப் போடப்படுகின்றன. அந்தச் சங்கிலி இறுக்குவதால் பெரும்பாலான யானைகளுக்குக் காலில் புண் ஏற்பட்டுவிடுகிறது. புண்களுக்கும் பாகன்களின் அங்குசத்தால் ஏற்படும் காயங்களுக்கும் முறையாக மருந்திடப்படுவதில்லை. யானைகளுக்கு மாதா மாதம் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். போதுமான அளவு உலவ வாய்ப்பில்லாததால் அவை மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. திருவண்ணாமலை கோயிலில் சமீபத்தில் இறந்த ருக்கு என்னும் யானை மாரடைப்பால் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக அது இறந்திருக்கலாம்.

கேரளத்தில் உள்ள கோயில் யானைகளில் பெரும்பாலானவை ஆண் யானைகள்தாம் (கொம்பன்). இவற்றுள் பெரும்பாலானவை இணை சேராமலேயே இறந்துவிடுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் ஆறு கொம்பன் யானைகள் இறந்திருக்கின்றன. மதம் இளகும் இனப்பெருக்கக் காலத்தில் கொம்பன் யானைகளைத் தனியாகப் பிரித்துக் கட்டி, அவற்றைக் கூடுதல் மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறார்கள். அந்த நேரத்தில் அவற்றுக்குப் போதிய உணவும் அளிக்கப்படுவதில்லை. இந்தக் காரணங்களால், பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் இறப்பு விகித வயது குறைந்துவருகிறது. அந்த 6 கொம்பன் யானைகளும் 50 வயதுக்குக் கீழ் இருந்தவைதாம். குன்னம்குளம் சிவனுக்கு வெறும் 17 வயதுதான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 46 யானைகள் இறந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த எண்ணிக்கை ஏழாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, காட்டுக்குள் ஆண்டுக்கு 80 யானைகள் கொல்லப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவற்றால் யானைகளைப் பராமரிப்பதில் உள்ள அலட்சியம் அம்பலமாகிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

SCROLL FOR NEXT