எ
ங்கள் வீட்டின் முதல் மாடிவரை வளர்ந்த பெருமல்லிக் கொடி ஒன்று உண்டு. மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இந்தக் கொடி பூச்சிகளின் புகலிடம். தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், குளவிகள், சிறு பறவைகள் என்று இந்தக் கொடிகளை அண்டி பல சிற்றுயிர்கள் வந்து செல்லும். இவற்றில் மஞ்சள் வரி காகிதக் குளவியும் ஒன்று (ஆங்கிலப் பெயர்: Thin band Paper Wasp, அறிவியல் பெயர்: Ropalidia marginata).
இந்தக் குளவிகள் மல்லிகைக் கொடிக்கு வருவதில் பிரச்சினையில்லை. இந்தக் கொடிகளுக்கு அருகே பெருமளவில் இனப்பெருக்கம் செய்த இவற்றின் இளம்பூச்சிகள், எங்கள் வீட்டு மரக்கதவில் தங்கள் காகிதக் கூட்டை உருவாக்க முயன்றதுதான் சிக்கலாகிப் போனது.
எங்கள் வீட்டின் முன் மரக்கதவைத் திறக்கும்போதெல்லாம் 4-5 குளவிகள் கூட்டின் முனையை மரக்கதவில் உருவாக்க முயன்றுகொண்டிருக்கும். எங்களுக்கோ பயம், குளவிகள் கொட்டக்கூடியவையாயிற்றே.
இந்தக் குளவிகளின் ஆரஞ்சு பழுப்பு நிற வயிற்றின் பின்பகுதியில் மஞ்சள் நிற வரியைப் போன்ற பட்டையைக்கொண்டிருக்கும். 1.5 செ.மீ. நீளம் கொண்ட இது சமூக உயிரினம், கூட்டாக வாழும். தீபகற்ப இந்தியாவில் காணப்படும் இது புதர்கள், தோட்டங்கள், சுவர்கள், ஜன்னல்கள் ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படும்.
இதன் கூடு காகிதத்தைப் போன்ற இழைகளால் அமைக்கப்பட்டிருக்கும். தேன்கூட்டை ஒத்த அறுகோண வடிவில் அறைகள் இருக்கும். மூடப்படாத இந்தக் கூட்டுக் கூடு ஒன்று அல்லது இரண்டு முனைகளில் ஒட்டியிருக்கும்.
இந்தக் குளவி வேட்டையாடி உண்ணக்கூடியது. இனிப்பான திரவங்களையும் உறிஞ்சும். இக்குளவி மூர்க்கமானது, தூண்டப்பட்டால் கொட்டும். கொட்டினால் வலிக்கும், நஞ்சும்கூட.
மஞ்சள் வரி காகிதக் குளவி மற்றொரு வகையான பெரும் பட்டைக் குளவியைப் போலிருக்கும். ஆனால், பெரும் பட்டைக் குளவிக்கு வயிற்றிலுள்ள வரிப் பட்டை அகலமானது.
எங்கள் வீட்டு நெட்டுக்குத்தான மரக்கதவு குளவிக் கூட்டை அமைக்க சற்றும் பொருத்தமில்லாதது என்பதை அந்தக் குளவிகள் தாமதமாகத்தான் உணர்ந்துகொண்டன போலும். சிறிது காலத்துக்குப் பிறகு கதவருகே வருவதை அவை நிறுத்திவிட்டன.