யானைகள் இல்லாமல் நமது பண்பாட்டை யோசித்துப் பார்க்க முடியாது. புராணங்கள் தொடங்கி மழலைகள் விளையாடும் பொம்மைகள்வரை யானைகளின் உருவம் எங்கெங்கும் காணக் கிடைக்கிறது. அந்த வரிசையில், நவீன காலத்தில் காட்டைக் காட்டிலும் அதிக யானைகள் இடம்பெற்றிருப்பது அஞ்சல்தலைகளில்தான்.
சென்னையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான த. முருகவேளுக்கு, விதவிதமான அஞ்சல்தலைகளைச் சேகரிப்பதில் பெரும் ஆர்வம். அதிலும் பாம்பு, புலி, யானை, பறவைகள் என்று காட்டுயிர் தொடர்பான அஞ்சல்தலைகளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துவது இவருடைய வழக்கம். 2011-ம் ஆண்டு தென்னிந்திய அஞ்சல்தலைச் சேகரிப்பாளர்கள் நடத்திய தேசிய அளவிலான அஞ்சல்தலைக் கண்காட்சியில் ‘இயற்கைப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.
யானைகள் நாளை ஒட்டி, அவருடைய சேகரிப்பில் உள்ள ஐந்து அஞ்சல் தலைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி கூறுகிறார்:
இரண்டு வகைகள்
இந்தியா-ஆப்பிரிக்கா 2வது உச்சி மாநாடு 2011-ம் ஆண்டு நடைபெற்றபோது, இந்த அஞ்சல்தலையை நமது அஞ்சல் துறை வெளியிட்டது. இந்த அஞ்சல்தலைகளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு வகை யானைகளும் தந்தங்களுக்காக இன்றைக்கும் அதிகம் கள்ளவேட்டையாடப்படுகின்றன.
லாவோஸ் அஞ்சல்தலை
1958-ம் ஆண்டு யானை படங்கள் பொறிக்கப்பட்ட ஏழு அஞ்சல்தலைகளைக் கொண்ட தொகுப்பை லாவோஸ் நாடு வெளியிட்டது. விலங்குகள் தொடர்பான அஞ்சல்தலைகளில் மிகவும் அழகானது இந்தத் தொகுப்பு. பழங்காலத்தில் லாவோஸ், ‘லான் சாங்' என்று அழைக்கப்பட்டது. ‘லட்சம் யானைகளின் நிலம்' என்பதே அதன் அர்த்தம். ஆனால், இன்றைக்கு 200 - 500 காட்டு யானைகளே அங்கு உள்ளன.
யானை மந்தை
அமெரிக்க ‘இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 1970-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அஞ்சல்தலையில் ஆப்பிரிக்க யானை மந்தை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ‘அழியும் ஆபத்தில் உள்ள உயிரின வர்த்தகம் பற்றிய சர்வதேச உடன்பாடு' (Convention on International Trade in Endangered Species), அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் ஆப்பிரிக்க யானைகளைச் சேர்த்ததைத் தொடர்ந்து, தந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகள் கள்ளவேட்டையாடப்படுவது 1989-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
பிணைக்கப்பட்ட யானை
1973-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல்தலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானையின் படம் அச்சிடப்பட்டுள்ளது. பேரரசர் ஜஹாங்கிரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஸைனல் ஆபிதீன் என்ற ஓவியர் வரைந்த அந்த ஓவியம், தற்போது கிழக்கு பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளது. உலகிலேயே இந்தியக் கோயில்களில்தான் யானைகள் அதிகம் பழக்கப்படுத்தப்படுகின்றன.
இதற்காகச் சிறு வயதிலேயே யானைகள் சங்கிலியால் பிணைக்கப்படுவதால், அவற்றின் அசைவுகள் முடக்கப்படுகின்றன. இதனால் சரியான உடற்பயிற்சி இல்லாமல், சுதந்திரம் பறிக்கப்பட்டு யானைகள் உடல், மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றன. யானைகள் சீற்றமடைவதற்குச் சங்கிலியிடப்படுவது முக்கியக் காரணம்.
தேசிய விலங்கு
தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான நட்புறவு 10 ஆண்டுகள் ஆனதையொட்டி இரு நாட்டு யானைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போன்ற அஞ்சல்தலைகளை 2003-ம் ஆண்டில் இரு நாடுகளும் வெளியிட்டன. படத்தில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க யானையின் பெயர் மஃபுன்யானே, ‘அடங்காதவன்' என்று அர்த்தம்.
ஸோங்கா இனக் குழுவினர் அப்படித்தான் யானைகளை அழைப்பார்கள். இந்தப் பெயருக்கு நேர்மாறாகத் தாய்லாந்து நாட்டின் தேசியச் சின்னமே யானைதான்! மார்ச் 13-ம் தேதி அந்நாட்டில் ‘யானை நாளாகக்' கொண்டாடப்படுகிறது.