விவசாயம் தற்போது நசிந்துவரும் தொழில்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா விவசாய நாடு என்ற நிலை மாறி, பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு, விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நவீனத் தொழில்நுட்பம், குறைந்த நீரில் அதிகப் பரப்பளவில் விவசாயம், அதிக மகசூல் தரக்கூடிய விதைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வேளாண்மைத் துறையில் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் விவசாயத்தில் சாதிக்கும் விவசாயிகள் கண்டறியப்படுகிறார்கள்; பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
அத்தகு விவசாயிகளில் ஒருவர் அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி (47). இவர் இயற்கை வேளாண்மை மூலம் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் அதிக நெல் மகசூல் பெற்றுள்ளார்.
விவசாயத்தைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வயலிலேயே ஒரு சின்ன கொட்டகை போட்டு, கணவருடன் விவசாயத்தைக் கவனித்துவருகிறார் ராசாத்தி.
பாசனத்துக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்துக் குழாய்கள் மூலம் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். நெல், கரும்பு, கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்துவரும் இவர், தனது வயல்களில் கடந்த 2016-ம் ஆண்டு நெல் சாகுபடி செய்திருந்தார். வயலுக்கு அதிகத் தொழுவுரம் கொடுத்து இயற்கை முறையில் சாகுபடி செய்ததால், அதிக விளைச்சல் கண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
இதை அறிந்த வேளாண்மைத் துறை அதிகாரிகள், குறைந்த பரப்பளவில் விளைந்த நெற் பயிரை அறுவடைசெய்து மகசூலைக் கணக்கிட்டுள்ளனர். இதில், குறிப்பிட்ட பரப்பளவில் கிடைத்துள்ள மகசூலுடன் ஒப்பிட்டபோது, மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வேறு எந்த விவசாயியும் இந்த அளவு மகசூலை எடுக்கவில்லை. அதனால் நெற் பயிரில் மாநில அளவில் இந்த மகசூலே உச்சமானதாக இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 17-ல் நடைபெற்ற ‘கிருஷி உன்னதி மேளா’வில் 2015-16-ம் ஆண்டில் நெல் - தானிய உற்பத்தியில் அதிக மகசூல் பெற்று சாதனை புரிந்ததற்காக ராசாத்திக்கு பிரதமர் மோடி ‘முன்னோடி விவசாயி விருது’ வழங்கினார்.
“நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்து, பாராட்டுச் சான்றிதழும் பரிசுத் தொகையும் பெற்றது, என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது” என்று வாய்கொள்ளாச் சிரிப்புடன் பேசத் தொடங்கினார் ராசாத்தி.
“தற்போதைய நிலையில் விவசாயிகள் தண்ணீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை நீக்கி விவசாயத்தில் அதிக லாபம் பெறும் வகையில் சொட்டு நீர்ப் பாசனம், மண் வள அட்டை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள், அதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பருவநிலைக்குத் தகுந்தாற்போல விவசாயத்தை மேற்கொண்டால் விவசாயத்தில் நல்ல லாபம் பெறலாம்” என்றவருக்கு, விருதுடன் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.
“தற்போது கரும்பிலும் அதிக மகசூல் பெற்று, கரும்பில் அதிக மகசூல் பெற்ற விவசாயி என்ற விருதைப் பெற வேண்டும் என்று ஊக்கத்துடன் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறேன்” என்கிறார் ராசாத்தி.
உங்களைப் போலவே, நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!
விருதுப் பெண்மணி காட்டும் வழி!
‘அதிக மகசூலைச் சாதித்தது எப்படி?’ என்ற கேள்விக்கு, ராசாத்தி சொன்ன ‘வெற்றி ரகசியம்’:
வேளாண் அதிகாரிகள் சொன்ன தரமான விதையைத் தேர்ந்தெடுத்தேன். நடவு செய்யப்படவுள்ள வயலின் மண்ணை ஆய்வு செய்தேன். மண்ணின் தரத்துக்கு ஏற்ப உரங்களை இட்டேன். மேலும், நாற்றங்கால் அமைப்பதில் ஆரம்பித்து நடவுவரை சீராகச் செயல்படுத்தினேன். அதுபோல நடவு நாட்களையும் தள்ளிப்போடாமல் 20 முதல் 25 நாட்களில் நாற்றைப் பறித்து, தேவையான இடைவெளி விட்டு நடவு செய்தேன். பயிர்களுக்கு நடுவே காற்றோட்டம் கிடைக்கும்போது, பயிர்கள் அதிகமாகக் கிளைத்து வளரும்.
அதிகாரிகள் வழங்கிய நுண்ணூட்ட உரங்களைச் சரியான நேரத்தில், சரியான அளவில் பயிர்களுக்குக் கொடுத்தேன். அதிகப்படியான உரங்கள் தருவதால் மகசூல் அதிகம் பெறலாம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. அதிகப்படியான உரங்களை நெற் பயிருக்குக் கொடுத்தால் பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மேலும், அதிகாரிகளின் அறிவுரைப்படி தண்ணீர் அளவை முறைப்படுத்தினேன். சீரான அளவில் தண்ணீரை நெற் பயிருக்கு விடும்போது, சரியான மகசூலை எடுக்க முடியும். நெற் பயிரில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் முறையாகப் பராமரித்து வந்ததால், சரியான நேரத்தில் கதிர்கள் வந்தன. கதிர் வரும் நேரத்தில் எலித் தொல்லை அதிகமாக இருக்கும். அதற்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், நெற் பயிருக்குக் களை எடுப்பது மிகவும் அவசியம். களை எடுப்பதைத் தள்ளிப்போட்டால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் உரிய நேரத்தில் ஒன்றிரண்டு களை தெரிந்தால்கூட, அதை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.