எ
ங்கள் அலுவலகத்தின் முன்புறத்தில் ஓர் ஆல மரம் உண்டு. விழுதுகள் பெரிதும் கிளைக்காத அந்த மரத்தில் சில குறும் விழுதுகள் இருக்கும். அந்த விழுதுகளின் இளம் வேர்களில் சற்றே விநோதத் தோற்றம் கொண்ட இந்தப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருப்பதை ஒரு நாள் பார்க்க முடிந்தது. இதுவரை நான் பார்த்திராத ஏதோ விநோதப் பூச்சி என்று மட்டும் நினைத்துக்கொண்டு, அன்றைக்குக் கடந்துவிட்டேன்.
அவை ஏதாவது பூச்சியின் இளம்உயிரிகளாக இருக்கலாம் என்றும் தோன்றியது. ஏனென்றால், வளர்ச்சியடைந்த பூச்சிகளுக்கும் அவற்றின் தோற்றுவளரி (larvae), புழுப் பருவம் ஆகியவற்றுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
பின்னர்தான் இவை 'கொம்புப்பூச்சிகள்' என்று தெரியவந்தது. அவை தாவரச் சாறுண்ணிகள். வழிகாட்டிப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தபடியே அன்றைக்கு விழுதில் ஒட்டிக்கொண்டு சாறை அவை உறிஞ்சிக்கொண்டிருந்திருக்க வேண்டும். முருங்கை உள்ளிட்ட மரங்களில் இந்த வகைப் பூச்சிகள் காணப்படும்.
ஆங்கிலத்தில் பொதுவாக Hoppers என்றழைக்கப்படும் இந்தப் பூச்சி வகைகள் நாடெங்கும் தென்படுகின்றன. நம்ப முடியாத தொலைவுக்குத் தாவக்கூடியதால் இந்தப் பெயராம். Treehopper வகைகளில் சில Thornbug அல்லது CowBug என்று அழைக்கப்படுகின்றன. இப்படி அவை அழைக்கப்படுவதற்கான முக்கியக் காரணம் அவற்றின் தலையில் கொம்பு போன்றிருக்கும் அலங்காரம்தான்.
சில வகைகளின் உணர் கொம்புகள் மாட்டுக்கு உள்ள கொம்புகளைப் போன்ற தோற்றத்திலும், சில வகைகளுக்கு தலையில் நீண்டிருக்கும் கொம்பு போன்ற பகுதி முள் போலவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இப்பூச்சிகளுக்கு இப்படிப் பொதுப் பெயர் வந்திருக்க வேண்டும்.
தமிழில் கொம்புப்பூச்சி என்று அவை அழைக்கப்படுவதற்கும் இதுவேதான் காரணம். தமிழில் வேறு ஏதேனும் பெயர் இருக்கிறதா என்று அறிய முடியவில்லை.
தோற்றத்தில் விநோதமான இந்தப் பூச்சிகளை நேரில் கண்ட அதேநேரம், இவற்றின் மற்றொரு முக்கியமான அம்சமான தாவக்கூடிய பண்பைப் பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.