ச
ங்கு ஓர் அற்புதமான கலைப் பொருள். ஐயமே இல்லை. அதன் தனித்துவ அமைப்பே, அதற்குக் காரணம். ஊதுகையில் தனித்துவமான ஒலி எழுவதற்கும் புரிச்சுற்றுகளோடு உருண்டையாக இருக்கும் அதன் மென் உடலமைப்பும் காரணமாகிறது.
சிப்பியினங்களைப் போல சங்குகளும் மெல்லுடலிகள். சங்குகள் வயிற்றுக்காலிகள். சங்கின் முட்டை போன்ற வடிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. சுருள் பகுதி, வட்டடுக்கு உடல் பகுதி, திருகலான சுருள் அச்சை மையம்கொண்டு அமையும் சங்கின் அகலமான வாய்ப் பகுதி மெல்லிழையத்தால் மூடப்பட்டிருக்கும்.
சங்கின் சுருள் பகுதியின் மேலச்சு மேலாகவும் வாய் கீழாகவும் உங்களை நோக்கி வைத்துக்கொண்டால் வலப்பக்கம் வாய் அமைவது வலம்புரிச் சங்கு (Sinistral), சங்கு இடப் பக்கம் வாய் அமைவது இடம்புரிச் (Dextral) சங்கு. இடம்புரிச் சங்குகள் ஜாம் நகர் (கட்ச்), திருவனந்தபுரம், தூத்துக்குடி, மண்டபம், இராமநாதபுரம் பகுதிகளில் கரையிலிருந்து 10 முதல் 16 கி.மீ. தொலைவுக்குள் ஏராளமாகக் கிடைத்துவந்தன.
இடம்புரி, வலம்புரிச் சங்குகள் டர்பினெல்லா பைரம் (Turbinella Pyrum) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவையே. கருமுட்டை வளரத் தொடங்கும் வேளையில் செல் பிளவுறும் கோணம் நேர் குறுக்காக அமையாமல் சற்று சாய்வாக அமைகிறது. அடுத்த பிளவுகள் முந்தைய பிளவின் சாய்கோணத்தில் அமைவதால் பிளவு நிலைகள் ஆரச்சுற்றில் நிகழ்கின்றன.
புரிச்சுற்றின் அடிப்படையில் உடல் அமைவதால் அதை அடியொற்றி மேல்தோடும் அமைந்துவிடுகிறது. கருசெல் பிளவின் சாய்கோணம் இடது, வலது என விலகுவதற்கு மரபணுக்களே காரணம். இடம்புரி செல்பிளவு இயல்பானது. மரபணுவின் சடுதிமாற்றம் (mutation) காரணமாகவே வலம்புரிச் சங்கு உருவாகிறது. மரபணு சடுதிமாற்றம் வெகு அரிதாக நிகழ்வது என்பதால் வலம்புரிச் சங்கும் அரிதாகிறது.
லிம்னேயா போன்ற சிறுவகை நன்னீர் நத்தைகளில் வலம்புரி, இடம்புரித் தோடு சமஅளவு சாத்தியமானது. அரிதான நிகழ்வுகளைச் சூழ்ந்து ஐதீகங்கள் முளைப்பது இயல்புதான். கடல் மீன்வள ஆய்வு மையத்தின் மேனாள் அறிஞர் ஏ.பி.லிப்டன், தஞ்சைப் பல்கலைக்கழக கடல் அகழாய்வறிஞர் ந.அதியமான் போன்றோர் சங்கு வளம் பற்றி நூல்களை வெளியிட்டுள்ளனர்.
சங்கு உள்ளிட்ட வயிற்றுக்காலி மெல்லுடலிகள் எல்லாவற்றுக்கும் சுருளான உடலமைப்பு தவிர, இன்னொரு சுவாரஸ்யமான பண்பும் உண்டு. வாயும் ஆசனவாயும் அவற்றுக்கு ஒரே முகம்தான். மேல்தோட்டில் இருப்பது ஒற்றைத் திறப்புதான் என்னும் நிலையில் ஆசனவாயை வேறெங்கே வைப்பது? இதற்காக கருவளர்ச்சியின்போது, கொண்டைஊசியைப் போல உடல் 180 டிகிரி திருகலாகிவிடுகிறது. பரிணாம விந்தைகளில் இதுவும் ஒன்று.
வலம்புரிச் சங்கைப் போலவே முத்து, முத்துச் சிப்பி குறித்தும் ஏராளம் தொன்ம நம்பிக்கைகள் உள்ளன. பட்டு வணிகத்துக்கென்று உலக அளவில் பட்டுப்பாதை இருந்ததைப் போன்று முத்துப்பாதையும் இருந்தது. கன்னியாகுமரிக்கும் ராமேசுவரத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையில் நடைபெற்ற முத்துக்குளித்தல் காரணமாகமுத்துக் குளித்துறை
என்னும் பெயர்பெற்றது. நவரத்தினத்தைப் போன்று விலையுயர்ந்த பொருளாக முத்தும் அணிகலன்களில் பயன்படுத்தப்பட்டது.
முத்துச்சிப்பி இரண்டு தோடுகள் கொண்ட மெல்லுடலி. குஞ்சுப் பருவத்தில் ஸ்பாட் என்னும் இளம் உயிரியாக நீந்தி வளரும் இவ்வினம் உருமாற்றம் அடையும்போது, அங்குள்ள தரைகளில் திண்ணமான இடங்களில் ஒட்டிக்கொள்கின்றன. இந்த இடங்களை முத்துப்படுகை என்பார்கள்.
அறுவடையாகும் எல்லாச் சிப்பிகளிலும் முத்துகள் இருப்பதில்லை. கிடைக்கும் முத்துகள் அத்தனையும் முதிர்ந்தவையாகவும் இருப்பதில்லை.
முத்தெடுத்தலைவிட சங்கு குளித்தல் வருவாய் மிகுந்த தொழில். முத்துச்சிப்பி வளர்த்து முத்துகளை அறுவடை செய்வதுடன் செயற்கை முத்துகளையும் தயாரிக்கிறார்கள்.
முத்துச்சிப்பி வளர்க்கும் முன்னோடித் திட்டத்தை 1980-களில் நடுவண் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. முத்துச்சிப்பியின் உடலுக்குள் கிராப்ட் திசுவுடன் முத்தின் உட்கருவை வைத்து அவற்றை பண்ணையில் வளர்க்கும் முறையை கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் ஆய்வுமையத்தில் எனது மாணவர்களுடன் சென்று ஒரு முறை பார்வையிட்டேன். 2008-ல் தூத்துக்குடி மையத்திலும் பார்த்தேன். அப்போது நான் மீன்வளம் பயிற்றுவித்துக்கொண்டிருந்தேன்.
பிங்க்டடா வல்காரிஸ், பி. ஃப்யூகட்டா, பி. மார்கரிட்டிஃபெரா என்னும் மூன்று கடல் சிப்பிகள்தான் முத்தை உற்பத்தி செய்கின்றன. மணல் துகள் போன்ற ஏதேனும் திடப்பொருட்கள் சிப்பியின் உடலில் மெல்லிய சவ்வில் புகுந்துவிட்டால் உறுத்தல் தாங்காமல் அதைச் சுற்றி ‘நாக்கர்’ என்கிற திரவத்தைச் சுரக்கிறது. படலம் படலமாக படியும் இந்தச் சுரப்புதான் முத்தாக விளைகிறது.
முத்தின் நிறம் இளமஞ்சள், கருப்பு, மூக்குப்பொடி நிறம் என்பதாக வேறுபடும். உள்ளே அகப்படும் துகளின் வடிவத்தையும் அளவையும் கால அளவையும் பொறுத்து முத்தின் வடிவமும் அளவும் மாறுபடுகிறது.
கட்டுரையாளர்,
பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com