உயிர் மூச்சு

கான்க்ரீட் காட்டில் 21: தையற்கார எறும்பு

ஆதி வள்ளியப்பன்

யிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு ஒரு முறை சென்றிருந்தபோது சற்றே பெரிய செந்நிற எறும்புகள், ஒரு செடியின் இலைகளை இணைத்து ஒரு பை போலாக்கி கூடமைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. கூடு அமைக்கப்பட்டிருந்த செடியின் கிளைகளில் எறும்புகள் மேலேறுவதும் கீழிறங்குவதுமாக சுறுசுறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தன. அவை தையற்கார எறும்புகள். ஆங்கிலத்தில் Weaver Ant, அறிவியல் பெயர் Oecophylla smaragdina.

பூமியில் வாழும் பல்வேறு உயிரினங்களைப் போல இவையும் இலைகளை இணைத்து கூட்டை அமைத்துக்கொள்ளும் திறன் பெற்றவை. நாம் நன்கறிந்த இலைகளைத் தைக்கும் பறவை தையல் சிட்டு.

10CHVAN_Concerte21-02right

ஒரு செ.மீ. நீளம் கொண்ட தையற்கார எறும்பு நாடெங்கிலும் தென்படக் கூடியது. சுமாராக கட்டெறும்பைப் போன்ற அளவில் சிவப்பும் பழுப்பும் கலந்த நிறமுள்ளவை. கூட்டாக வாழும். இந்த வகையின் ராணி எறும்புகள் பச்சை நிறத்திலும் இறக்கைகளுடனும் இருக்கும்.

காட்டுப் பகுதிகள், தோட்டங்கள், தோப்புகள், மரம் நிறைந்த பகுதிகள், பூங்காக்களில் மரத்தின் மேற்பகுதிகள், மரக்கவிகைகளிலும்கூட வாழும்.

பட்டுப்போன்ற இழை மூலம் இலைகளை இணைத்து கூட்டை வடிவமைப்பவை. இலைகளை ஒன்றிணைப்பதற்கு எறும்பின் தோற்றுவளரிகள் வெளியிடும் (Larvae) இழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும். படத்தில் உள்ள கூட்டிலும் அந்த இழைகளைத் தெளிவாகக் காணலாம்.

சமூகப் பூச்சியான இது கூட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும். எதிரிகள் வந்தால் விரைந்து கடித்துவிடும். கடிக்கும்போது வேதிப்பொருட்களை செலுத்தும் என்பதால், கடிபட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படும். இது ஓர் இரைகொல்லியும்கூட.

SCROLL FOR NEXT